24. துயிலெழல் - மீன்கொடி

நான் காலையில் விழிக்கும்போது ஏழாகி விட்டது. ஜமுனாவை பல முறை அழைத்தும் பதில் வரவில்லை. முன்கதவை திறந்து பார்த்தேன். வீட்டை சுற்றிப் பார்த்தேன். ஜமுனாவைக் காணவில்லை. பின்கட்டிற்கு சென்று முகம் கழுவிக் கொண்டிந்த போது, சற்று தள்ளியிருந்த கம்பனி கட்டடத்திற்குள் முக்காலி மேல் நின்று ஜமுனா ஒட்டடை தட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

கைதட்டி அழைக்கலாமா என்று நினைத்தபோது என்னை திரும்பிப் பார்த்தவள் முக்காலியிலிருந்து குதித்து இறங்கி என்னருகே வந்தாள். தூசியாலும், ஓட்டடையாலும் அபிஷேகம் செய்யப்பட்டிருந்தாள்.

‘கைகழுவி விட்டு காபி தருகிறேன்’ என்றாள் ஜமுனா.

‘எப்போது எழுந்தாய்?’ என்றேன்.

‘தூங்கவே இல்லையே. துணி துவைத்த பின் கம்பனி கட்டடத்தை சுத்தம் செய்ய ஆரம்பித்துவிட்டேன்’ கைகழுவியபடி பதில் சொன்னாள்.

‘இருட்டில் தனியாகவா?’ என்றேன்.

‘நம் வீடு. நம் கம்பனி. என்ன பயம்?’ என்றாள் ஜமுனா.

‘ஓடாத கம்பனியை எதற்கு சுத்தம் செய்கிறாய்? ஏதாவது வேலை வந்தால் பார்த்துக் கொள்ளலாம்’ என்றேன்.

‘அய்யா கணவரே, மேகத்திலிருந்து மழை நீர் வருகிறது. மழை நீரிலிருந்து மின்சாரம் கிடைக்கிறது. மேகத்திற்குள் மின்சாரம் இருக்கிறதா இல்லையா?’ இருளால் நிறைந்திருந்த சமையலறைக்குள் மின்விளக்கை எரியவிட்டு, அடுப்பை பற்ற வைத்தபடி கேள்வி கேட்டாள் ஜமுனா.

‘சரி. அதற்கென்ன?’ என்றேன்.

‘பாலுக்குள் தயிர். தயிருக்குள் வெண்ணெய், வெண்ணெய்க்குள் நெய் இருக்கிறதா இல்லையா?’ பாலை பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்துவிட்டு கேட்டாள் ஜமுனா.

‘கேட்க நினைப்பதை நேரடியாகக் கேள்’ என்றேன்.

‘இலக்கியவாதிக்கு உவமையோடு சொன்னால்தானே புரியும்? பெண்ணழகோடு ஒப்பிட்டால்தானே, உங்களுக்கு இமயமலையில் மழை எப்படி விழுகிறது என்பது கூட புரியும்!’ என்று கூறி சிரித்த ஜமுனா ‘கம்பனிக்குள் வேலை இருக்கிறது, வேலைக்குள் பணம் இருக்கிறது. உங்களுக்கு பணம் வேண்டுமா? வேண்டாமா?’ என்றாள்.

‘எனக்கு தேவையா என்று தெரியவில்லை. ஆனால் கம்பனியை நடத்த நிறைய வேண்டும் என்று நினைக்கிறேன்’ என்றேன்

‘அதனால்தான் கம்பனியை கவனிக்கிறேன்’ என்றாள் ஜமுனா.

‘ஆனால் பணம் எப்படி தானாக வரும்?’ என்றேன்.

‘உள்ளே இருப்பதை எப்படி வெளியே கொண்டு வருவது என்பது தெரிந்தால் வெளியே வரவேண்டியது வந்துவிடும். டர்பைனும், ஜெனரேட்டரும் இருந்தால் நீரிலிருந்து மின்சாரம் வரும். பாத்திரமும், நெருப்பும் இருந்தால் வெண்ணெயிலிருந்து நெய் வரும். நேர்மையும், உழைப்பும் இருந்தால் எந்த கம்பனியிலிருந்தும் பணம் வரும்’ என்றவள் சிறிது நேரம் கழித்து காபி தம்ளரை என்னிடம் நீட்டினாள்.

‘என்னை எழுப்பி விட்டிருக்கலாம். நானும் ஏதாவது செய்திருப்பேன்’ என்றேன்.

‘நம்மில் யார் செய்தால் என்ன? கம்பனியில் இப்போது முதலாளிகளும் நாம்தான், தொழிலாளிகளும் நாம்தான்’ என்றாள் ஜமுனா.

‘முன்பு அறுபது பேர் வேலைக்கு இருந்தார்கள். பின் இரண்டு பேராகி விட்டார்கள். அவர்களும் சில மாதங்களாக வருவதில்லை’ என்றேன்.

‘ஏன்?’ என்றாள் ஜமுனா.

‘தெரியவில்லை’ என்றேன்.

அப்போது ‘அக்கா’ என்று உற்சாகமாக குரல் கொடுத்துக் கொண்டு பெட்டியோடு உள்ளே வந்தான் சுந்தரம். ஜமுனாவின் ஒரே தம்பி.

நான் தலையசைத்து வரவேற்றேன். சுந்தரம் ஜமுனாவை விட இரண்டு வயது சிறியவன். மிகவும் நவீன மோஸ்தரில் கச்சிதமாக உடையணிவான். பேச்சும், நடவடிக்கைகளும் பன்னாட்டு கம்பனி நிர்வாகியோ என்று எண்ண வைக்கும்.   

‘வாப்பா’ என்ற ஜமுனா ‘அழைப்பு மணி என்ற ஒன்று இருக்கிறதே, அதை அழுத்த வேண்டும் என்று உனக்கு தோன்றாதா?’ என்று கேட்டாள்.

‘நம் வீடுதானே? கதவு திறந்திருந்தது. உள்ளே நுழைந்துவிட்டேன். எனக்கும் காபி போடு’ என்ற சுந்தரம் ‘அக்கா, நேற்று என் வேலை விஷயமாக சென்னைக்கு வந்தேன். வழக்கம் போல வேலை கிடைக்கவில்லை. இரவு நண்பன் அறையில் தங்கிவிட்டேன். உங்களைப் பார்த்துவிட்டு மதியம் போகலாம் என்று நினைத்தேன்’ என்றான்.

‘இங்கே உனக்கு வீடில்லையா? ஏன் வெளியே தங்க வேண்டும்?’ என்றாள் ஜமுனா.

புன்னகைத்தான் சுந்தரம்.

‘உனக்கு வேலை கிடைப்பதில் ஏன் இத்தனை சிரமம்?’ என்று கேட்டேன்.

‘பெரிதாக சாதிக்க நினைக்கிறேன். அதனால் போகிற இடங்களில் மேனேஜர் கேள்வி கேட்பதற்கு முன்னால், கம்பனி பற்றியும், அதன் எதிர்கால திட்டம் பற்றியும் கேள்வி கேட்டு விடுகிறேனா? ‘அனுபவமே இல்லாத பொடியன் அதிகம் பேசுகிறான்’ என்று விரட்டி அடித்து விடுகிறார்கள்’ என்றான் சுந்தரம்.

‘யானையால் முயல் வளைக்குள் நுழைய முடியவில்லை’ என்றாள் ஜமுனா.

‘அக்கா, பாகப் பிரிவினை பற்றி பேச வர வேண்டும் என்று பெரியத்தான் அப்பாவிடம் சொன்னாராம். எப்போது வர வேண்டும் என்று அப்பா கேட்டார்’ என்றான் சுந்தரம்.

ஜமுனா பதிலேதும் கூறாமல் என்னைப் பார்த்தாள்.

சிறிது தயக்கத்திற்கு பின் ‘நேற்று நாங்களாகவே அதைப் பற்றி பேசி காரியத்தை நல்லபடியாக முடித்துவிட்டோம்’ என்றேன்.

‘அதுதான் நல்லது. சம்பந்தியே என்றாலும் அவர் மூன்றாம் மனிதர்தான். கூடப் பிறந்தவர்களுக்குள் இருக்கும் நெருக்கம் வராது’ என்றான் சுந்தரம்.

ஜமுனா என்னைப் பார்த்து புன்னகைத்தாள்.

குற்ற உணர்வோடு ‘பேசுவதற்கு காபி மாமாவும், ஜவுளி மாமாவும் வந்தார்கள்’ என்றேன்.

ஒரு கணம் திகைத்த சுந்தரம் ‘அது நல்லதுதான். பேச்சின்போது அனுபவமுள்ள பெரியவர்கள் இருந்தால் எந்தக் காரியமும் சுமுகமாக நடக்கும்’ என்றான்.

‘அவர்கள் சென்னையிலேயே இருப்பவர்கள். மாமா மதுரையிலிருந்து வர வேண்டுமே. அவர் எதற்கு வீணாக அலைய வேண்டும்?’ என்றேன்.

‘அப்பாவிடம் சொல்லும்படியான செய்தி ஏதாவது உண்டா?’ என்றான் சுந்தரம்.

‘இப்போது நாங்கள் இருக்கும் இந்த வீடு, கம்பனி, கனப்பக்கத்தில் இருக்கும் நிலம் எல்லாமே எங்களுக்குத்தான். அண்ணார்கள் எங்களுக்கே கொடுத்துவிட்டார்கள்’ என்றேன்.

‘அப்பா நினைத்ததை விட உங்களுக்கு அதிகமாகத்தான் கிடைத்திருக்கிறது’ என்றான் சுந்தரம்.

‘அது உண்மைதான் சுந்தரம். என் அண்ணார்களும், அக்காவும் எப்போதுமே எனக்கு நல்லதுதான் செய்வார்கள்’ என்றேன்.

சுந்தரமும், ஜமுனாவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகை செய்தனர், ஜமுனா என் வலது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டாள்.

‘என்னடா, அக்காவிற்கு கிடைத்த சொத்து, வருமானம் பற்றி கவலையாக இருக்கிறதா?’ என்றாள் ஜமுனா.

‘அவற்றை நம்பியா அப்பா உனக்கு கல்யாணம் செய்து வைத்தார்? உன்னை மட்டும்தானே நம்பினார்?’ என்றான் சுந்தரம்.

‘போடா, நான் இவரை நம்பி வாழ வந்தவள்’ என்றாள் ஜமுனா.

‘அக்கா, உங்கள் கம்பனியில் எனக்கு ஒரு வேலை கிடைக்குமா?’ என்றான் சுந்தரம்.

ஜமுனா என்னைப் பார்த்தாள். பின் ‘கம்பனி நல்ல நிலையில் இருந்திருந்தால் நீ வாய்விட்டு வேலை கேட்கும் அவசியம் ஏற்பட்டிருக்காது’ என்றாள்.

‘முன்பு ஓடிக் கொண்டிருந்த கம்பனி. இப்போது ஓடாத கம்பனி. வியாபாரம் பற்றி எனக்கோ, உன் அக்காவிற்கோ எதுவும் தெரியாது’ என்றேன்.

‘எனக்கும் ஒன்றும் தெரியாது. எல்லோரும் சேர்ந்து கற்றுக் கொள்வோம். முடிந்தால் கம்பனியை ஓட வைப்போம்’ என்றான் சுந்தரம்.

‘சம்பளம் கொடுக்கும் நிலையில் நாங்கள் இல்லை’ என்றேன்.

‘வேலைதானே கேட்டேன். சம்பளம் கேட்கவில்லையே! நான் என்ன வேலை செய்யட்டும்?’ என்றான் சுந்தரம்.

‘அழைப்பு மணி அழுத்தாமல் உள்ளே வந்து காபி கேட்ட உன்னை விற்பனையைத்தான் கவனிக்க சொல்ல வேண்டும்’ என்றாள் ஜமுனா.

‘நம் வசதிக்காக சுந்தரத்தின் எதிர்காலத்தை குழப்ப வேண்டுமா?’ என்றேன்.

‘வேறு வேலை தேடிக் கொண்டே இங்கே வேலை பார்க்கட்டும். வசதி வந்தால் சம்பளம் தரலாம். இல்லையென்றால் அனுபவ சான்றிதழ் தந்து விடலாம்’ என்று கூறி சிரித்தாள் ஜமுனா.

‘வேலை கிடைத்துவிட்டது என்று அப்பாவிற்கு கடிதம் எழுதி விடுகிறேன்’ என்றான் சுந்தரம்.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms