25. கம்பனி நிலைமை - மீன்கொடி

கம்பனி அலுவலகத்திற்குள் நானும் சுந்தரத்தோடு சென்று சிறிது நேரம் இருந்து விட்டு வீட்டிற்கு வந்து விட்டேன். அலுவலகத்திற்குள் காலையில் நுழைந்த சுந்தரம், பல மாதங்களாக பிரிக்கப்படாமலிருந்த கடிதங்களை பிரித்து வாசித்து விட்டு கணக்குப் புத்தகங்களையும், தடிதடியான கோப்புகளையும் பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவற்றையெல்லாம் ஒரு முறை கூட பார்த்ததே இல்லை. பின் தன் செல்போனில் கணக்கரை கம்பனிக்கு வரச் சொல்லி பேசிக் கொண்டிருந்தான். இன்னும் எத்தனை பேருடன் பேசினானோ!

மதியம் சாப்பிட வந்தபோது காலையிலிருந்த உற்சாகம் அவனிடம் இல்லை. சட்டை மேல் பித்தான் அவிழ்ந்த்திருந்ததை கூட அவன் கவனிக்கவில்லை. ‘என்ன பிள்ளை நீ’ என்று கூறி ஜமுனா பித்தானை போட்டுவிட்டாள்.

அவனுக்கும், எனக்கும் அன்னம் பரிமாறிக் கொண்டே ‘என்னப்பா, அரை நாள் வேலையில் களைத்துபோய் விட்டாயா? சாப்பிட்டுக் கொண்டே விவரமாகச் சொல்’ என்றாள் ஜமுனா.

‘கம்பனி நிதி நிலைமை என்னவென்று உனக்கு தெரியுமா அக்கா?’ என்றான் சுந்தரம்.

‘தெரிந்தால் காலையிலேயே சொல்லியிருப்பேனே! நானே நேற்றிரவுதான் உள்ளே போய் சுத்தம் பண்ணினேன். இத்தனை நாள் சாவி அத்தான்கள் கையில் இருந்தது’ என்றாள் ஜமுனா.

‘ஒரு வருஷமாக விற்பனை எதுவுமே இல்லை. பேங்கில் எழுபது லட்சம் கடன். சப்ளையர்களுக்கு இருபது லட்சம் தரவேண்டும். இப்போது வேலையில் ஆறுபேர்தான் கணக்கில் இருக்கிறார்கள். இரண்டு பேர்தான் அவ்வப்போது வந்து போகிறார்கள். வேலையில் இருக்கும் ஆறு பேருக்கும் சம்பள பாக்கி இரண்டு லட்சம். இன்னும் சில்லறை கடன்களை சேர்த்தால் ஒரு கோடி கடன் இருக்கிறது. எல்லாம் கணக்கில் வந்த கடன்கள். எழுதி வைக்காத கடன் எவ்வளவோ!’ என்றான் சுந்தரம்.

சிரித்த ஜமுனா ‘நம் நிலைமை ஒரே நாளில் உயர்ந்து விட்டது. எல்லோராலும் ஒரு நாளில் ஒரு கோடிக்கு கடனாளி ஆக முடியுமா?’ என்றாள்.

‘கடனிருக்க வாய்ப்பில்லை. ஒரு வருஷமாக அண்ணார்கள்தான் கம்பனிக்கு வந்து போய் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் யோசனை கேட்கலாமா?’ என்றேன்.

சுந்தரம் பதில் பேசாமல், சாப்பிடாமல், சாம்பாரில் சாதத்தை பிசைந்து கொண்டிருந்தான்.

‘அத்தான் கேட்கிறாரே. பதில் சொல்லேனடா’ என்று சற்று குரலை உயர்த்தினாள் ஜமுனா.

என்னைப் பார்க்காமல் ‘கம்பனியிலிருந்து பணத்தை எடுத்ததே அவர்கள்தான்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

என்னை ஒரு முறை பார்த்த ஜமுனா ‘அப்புறம் பேசிக் கொள்ளலாம். முதலில் இரண்டு பேரும் சாப்பிடுங்கள்’ என்றாள்.

‘எப்படியும் தெரிந்து கொள்ளத்தானே வேண்டும்? இப்போதே சொல்லட்டுமே’ என்றேன்.

‘சொல்லுடா’ என்றாள் ஜமுனா.

‘அக்கா, பாகப்பிரிவினை பற்றி திரும்பவும் பேசிப் பார்த்தால் என்ன?’ என்றான் சுந்தரம்.

‘சுமுகமாக முடிந்து போனதை கிளறி பிரச்சினையாக்க வேண்டுமா? நமக்கென்று வந்தது, அதுவும் தாத்தா ஆரம்பித்தது, நல்லதாகத்தான் இருக்கும்’ என்றாள் ஜமுனா.

‘அண்ணார்கள் தருவதும் நல்லதாகத்தான் இருக்கும்’ என்றேன்.

‘எதை வைத்து பேங்க்கில் கடன் தந்தார்கள்?’ என்றாள் ஜமுனா.

‘எண்பது லட்சத்திற்கு சரக்கு இருக்கிறது என்றும், ஒரு கோடிக்கு ஆர்டர் இருக்கிறது என்றும் சொன்னதால் தந்திருக்கிறார்கள்’ என்றான் சுந்தரம்.

‘அடேயப்பா! இவ்வளவு இருக்கிறதே. அப்புறம் என்ன?’ என்றேன்.

‘எல்லாம் காகிதத்தில்தான் இருக்கிறது’ என்றான் சுந்தரம்

‘நேரில் பார்க்காமலா பேங்க்கில் கடன் தந்தார்கள்?’ என்றாள் ஜமுனா.

‘ஐம்பது வயதிற்கு மேலான கம்பனி. தாத்தா நன்றாக நடத்தியது. இதற்கிருந்த நல்ல பெயருக்கு எவ்வளவு கேட்டாலும் அன்று கேள்வி கேட்காமல் கொடுத்திருப்பார்கள்’ என்றான் சுந்தரம்.

‘அண்ணார்களும் கையெழுத்து போட்டிருப்பார்கள். அதற்கும் ஒரு மதிப்பு உண்டு’ என்றேன்.

‘எல்லா இடங்களிலும் நீங்கள்தான் கையெழுத்து போட்டிருக்கிறீர்கள். வேறெவரும் போடவில்லை. எல்லா கடன்களுக்கும் நீங்கள்தான் பொறுப்பு!’ என்றான் சுந்தரம்.

‘நான் எவரிடமும் பணம் வாங்கவில்லையே’ என்றேன்.

‘ஆனால் கையெழுத்து?’ என்றான் சுந்தரம்.

‘அது அண்ணார்கள் அவ்வப்போது காகிதங்களில் கையெழுத்து போட சொல்வார்கள். போடுவேன்’ என்றேன்.

‘வாசித்து பார்க்க மாட்டீர்களா?’ என்றான் சுந்தரம்.

‘அதெப்படி? நம்பாமல் வாசிக்கிறேன் என்று தப்பாக நினைத்து விட்டால்?’ என்றேன்.

‘நீங்கள் கையெழுத்து போட்டு நான் ஒரு முறை கூட பார்த்ததில்லையே?’ என்றாள் ஜமுனா.

‘நமக்கு கல்யாணம் ஆனதிலிருந்து எவரும் என்னிடம் கையெழுத்து கேட்கவில்லை. நான்கூட அதைப் பற்றி சில சமயம் கவலைப்பட்டிருக்கிறேன்’ என்றேன்.

‘இதெல்லாம் தாத்தாவிற்கு தெரியாதா?’ என்று கேட்டான் சுந்தரம்.

‘போன வருஷம் ‘உங்களுக்கு வயதாகிவிட்டது. கம்பனியை நாங்கள் நடத்துகிறோம்’ என்று தாத்தாவிடம் பேசி அண்ணார்கள் சாவியை வாங்கினார்கள். தாத்தா ஆடிட்டரிடம் சொல்லி கம்பனியை பேரர்கள் பெயருக்கு மாற்றி விட்டார். அதற்குப்பின் தாத்தா கம்பனி பக்கமே வரவில்லை. ஒரு வார்த்தை என்ன நடக்கிறது என்று கேட்கவில்லை’ என்றாள் ஜமுனா.

‘பயமாக இருக்கிறது அக்கா. கடன் கொடுத்தவர்கள் என்ன செய்யப் போகிறார்களோ!’ என்றான் சுந்தரம். அப்போதும் சாதத்தை பிசைத்து கொண்டுதான் இருந்தான் சுந்தரம். ஒரு கவளம் கூட சாப்பிட்டிருக்கவில்லை.

அவனருகே உட்கார்ந்து தோளில் கை வைத்து ஜமுனா ‘எதற்கு பயம்? நீ நடக்கும்போது சூரியன் தலையில் விழுந்து விடுமா? இல்லை உன் காலுக்கு கீழே பூகம்பம் வந்து விடுமா? முயற்சி செய்யாமல் தேங்கிப் போனவன்தான் அழிவான். நேற்றை விட இன்று கொஞ்சம், கொஞ்சமே கொஞ்சமாவது, வளர நினைப்பவன் நிச்சயம் முன்னேறுவான். கடனில்லாதவனுக்கு சம்பாதிக்கும் உந்துதலே இருக்காது. கடனைத் திருப்பித்தர நினைக்கும் கடனாளிக்குத்தான் சம்பாதிக்கும் வேகமிருக்கும். அந்த வேகத்தை தருகிறவர் கடன் கொடுத்தவர். அவர் கடவுள் போல’ என்றாள் ஜமுனா.

‘அக்கா, வியாபார உலக விவேகிகள் மர்பி சட்டங்கள் என்ற சில அனுபவ உண்மைகளை சொல்கிறார்கள். முதல் மர்பி லா என்ன தெரியுமா? ஏதாவது ஒன்று தவறாகப் போக வாய்ப்பு உண்டு என்றால் அது நிச்சயம் தவறாகப் போகும். இங்கு எல்லாமே தவறாக இருக்கின்றன’

‘ஏதாவது ஒன்று சரியாக நடக்க வாய்ப்பிருந்தாலும், எல்லாமே நிச்சயம் சரியாக நடக்கும். இதுதான்டா ஜமுனா லா’ என்று கூறி சிரித்தாள் ஜமுனா.

தலையசைத்து பெருமூச்சு விட்ட சுந்தரம் வேகமாக சாப்பிடத் தொடங்கினான். ‘நிதானமாக சாப்பிடேன்’ என்று கூறி புன்னகைத்தாள் ஜமுனா.

‘ஆறுபேர்கள்தான் இருக்கிறார்களா?’ என்று கேட்டேன்.

‘கணக்கு புத்தகத்தின்படி ஆறுபேர் இன்னமும் நம் கம்பனியில்தான் இருக்கிறார்கள். பல வருடங்களாக நம் கம்பனியில் இருப்பவர்கள்’ என்றான் சுந்தரம்.

‘சம்பளம்?’ என்றாள் ஜமுனா.

‘ஐந்து மாதமாக தரவில்லை. கூப்பிடும்போது வந்தால் போதும் என்று பெரிய அத்தான் சொல்லிவிட்டாராம். காத்துக் கொண்டிருக்கிறார்கள் வேலையில் இருக்கிறோமா, இல்லையா என்பதே அவர்களுக்கு தெரியவில்லை’ என்றான் சுந்தரம்.

‘வேறு வேலைக்கு போக வேண்டியதுதானே?’ என்றேன்.

‘தாத்தாவிடம் பல வருஷங்களாக வேலை பார்த்தவர்கள் கஷ்டப்பட்டாலும் இங்கேயேதான் இருப்பார்கள். தாத்தா துரத்தி விட்டால்தான் வேறு வேலைக்கு போவார்கள் என்று நினைக்கிறேன்’ என்றாள் ஜமுனா.

உண்ட பின் சுந்தரம் கிளம்பினான்.

‘நாளை முதல் வெளியே சாப்பிட்டுக் கொள்கிறேன் அக்கா’ என்றான்.

‘உன் ஒரு ஆளுக்கு சாப்பாடு போட இங்கே வசதி இல்லாமலா போய் விட்டது? என்னிடம் பணமிருந்தால் உலகத்திற்கே சாப்பாடு போடுவேன். கொஞ்சம் இருடா’ என்று கூறிவிட்டு தட்டுகளையும், பாத்திரங்களையும் கழுவ எடுத்து வைத்து விட்டு, கூடத்தில் வந்து உட்கார்ந்து சுந்தரத்திடம் பல கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தாள். பின் படுக்கை அறைக்கு சென்று கையில் சிறுபையுடன் வந்தாள்.

‘சாப்பிடவில்லையா?’ என்று கேட்டேன்.

‘நமக்கு வேண்டியவர்கள் பட்டினி இருக்கும்போது எனக்கு சாப்பிடத் தோன்றவில்லை’ என்றாள் ஜமுனா.

அவளை குழப்பத்துடன் பார்த்தேன். ‘சுந்தரமும், நானும் நன்றாகத்தானே சாப்பிட்டோம்?’ என்றேன்.

‘இந்த நகைகளை அடகு வைத்தோ, விற்றோ வரும் பணத்தில் சம்பள பாக்கியை முழுவதுமாக கொடுத்து விடலாமா?’ என்று என்னிடம் கேட்டு தன் கையிலிருந்த பையை என்னிடம் காட்டினாள்.

அப்போதுதான் அவள் கழுத்தில் தாலி சங்கிலி இல்லை என்பதை கவனித்தேன். புதிய மஞ்சள் கயிறு இருந்தது.

‘உன் அப்பா தந்தது’ என்றேன்.

‘அவர் பெற்ற நானே உங்களுடையவளாகி விட்டேன். அவர் போட்ட நகையும் உங்களுடையதுதான்’ என்றாள் ஜமுனா.

‘மனைவி கணவனின் உடமை இல்லை என்று பாரதியார் பாஞ்சாலி சபதத்தில் சொல்லியிருக்கிறார்’ என்றேன்.

‘அவர் என்ன சொல்வது? அவர் மனைவி செல்லம்மாதான் அதை சொல்ல வேண்டும். நான் சம்மதித்தால் உங்கள் உடமைதான்’ என்ற ஜமுனா பையை சுந்தரத்திடம் தந்தாள். ‘ஒரு சங்கிலி, ஆறு வளையல்கள், இரண்டு மோதிரங்கள், இரண்டு தோடுகள். மொத்தம் இருபது பவுன் இருக்கும் என்று நினைக்கிறேன்’ என்றாள் ஜமுனா.

‘எல்லா நகைகளையும் தந்து விட்டால் நீ என்ன போடுவாய்?’ என்று கேட்டேன்.

கால்களை தரையில் தட்டி, கைகளை லேசாக ஆட்டினாள். வெள்ளிக் கொலுசுகளும், கண்ணாடி வளையல்களும் இன்னிசை எழுப்பின. ‘நீங்கள் வாங்கித் தந்தவை’ என்றாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

‘புதிய பெண்ணை பார்ப்பது போல என்ன பார்வை இது!’ என்றாள் ஜமுனா.

‘ஒவ்வொரு நாளும் புதிதாகத்தான் இருக்கிறாய்’ என்றேன்.

‘புதிதாக மட்டும்தான் இருக்கிறேனா? அழகாக இல்லையா?’ என்றாள் ஜமுனா.

‘அனந்தமான பிரம்மம் தினமும் வளர்ந்து கொண்டே இருக்கிறதாம். அது போலத்தான் உன் எல்லையற்ற பேரழகும் தினமும் வளர்ந்து கொண்டே இருக்கிறது’ என்றேன்.

‘விற்பதா, அடகு வைப்பதா?’ என்று கேட்டு தானிருப்பதை எங்களுக்கு நினைவுபடுத்தினான் சுந்தரம்.

‘சம்பளம் பாக்கி தர வேண்டும். அடுத்த மாதம் சம்பளம் தர கையில் பணமிருக்க வேண்டும். அதற்கேற்றபடி முடிவெடு. இனி முதல் தேதியன்று சம்பளம் தந்துவிட வேண்டும். எந்த காலத்திலும் தவறக் கூடாது. நம்மை நம்பி வேலை பார்ப்பவர்களுக்கு சின்ன சிரமமும் வரக் கூடாது’ என்றாள் ஜமுனா.

‘விற்றோ, அடகு வைத்தோ எனக்கு பழக்கமில்லை’ என்றேன்.

‘உங்களை அனுப்புவேன் என்றா நினைத்தீர்கள்? சுந்தரம் செய்யட்டும்’ என்றாள் ஜமுனா.

‘சென்னையில் நம்மை விட்டால் வேறு யாரை அவனுக்கு தெரியப் போகிறது?’ என்றேன்.

‘நம் கல்யாணத்தன்று மோட்டார் சைக்கிள் இரவல் தந்தாரே ஆடிட்டர் தினகரன்? நம் வீட்டிற்கு அவர் ஒரு தடவை கூட வரவில்லையே?’ என்றாள் ஜமுனா.

‘நாம் இங்கு குடி வந்ததே அவனுக்குத் தெரியாது. நீ நன்றாக சமைப்பாய் என்பதும் தெரியாது. அவனைப் போய் பார்க்கிறேன்’ என்றேன்.

‘நம்பிக்கையானவரா?’ என்று கேட்டான் சுந்தரம்.

‘என்னைப் போலவே உயரமாக, வெள்ளையாக இருப்பான்’ என்றேன்.

‘அப்படியானால் சரி’ என்று என் கருத்தை ஆமோதித்தான் சுந்தரம்.

அடக்க முடியாமல் பொங்கி வந்த புன்னகையோடு ஜன்னல் பக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டாள் ஜமுனா.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms