26. தினகரன் - மீன்கொடி

தினகரனின் அலுவலகம் சென்றோம். பாகப் பிரிவினை பற்றியும், கம்பனி நிலவரம் பற்றியும் கூறினேன்.

சுந்தரம் நகையை பற்றிக் கூறி ‘என்ன செய்யலாம்?’ என்று கேட்டான்.

‘விற்க வேண்டாம் பேங்க்கில் கேட்கலாம். மார்க்கட் மதிப்பிற்கு பாதி கிடைக்கும்’ என்றான் தினகரன்.

‘அது போதாதே! விற்று விடலாம்’ என்றான் சுந்தரம்.

‘தாலியும், நகையும் உன் மாமனார் செய்து தந்தது. வெளியே சொல்லவில்லை என்றாலும் அவர் மனது அவருக்கே தெரியாமல் கொஞ்சம் வருத்தப்படும்’ என்றான் தினகரன்.

‘எனக்கே வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் பணம் வேண்டுமே. அக்கா சொன்னால் சொன்னதுதான்’ என்றான் சுந்தரம்.

‘எவரிடமெல்லாம் பணம் இருக்கிறது, எவரெல்லாம் பணமில்லாமல் இருப்பது போல நடந்து கொள்வார்கள் என்பது ஆடிட்டராக இருப்பதால் எனக்கு தெரியும்’ என்று கூறிய தினகரன் தன் வாடிக்கையாளர் ஒருவருக்கு போன் செய்தான். ஒலிபெருக்கி போட்டு பேசினான்.

‘என் நெருங்கிய நண்பருக்கு அவசரமாக பணம் தேவை. ஐந்து லட்சம் உடனே  வேண்டும்’ என்றான் தினகரன்.

‘நீங்கள் சொன்னால் யாருக்கு வேண்டுமானாலும் தருகிறேன்’ என்றார் வாடிக்கையாளர்.

‘பணத்திற்கு நான் பாதுகாப்பு’ தினகரன்.

‘மாதம் இரண்டு வட்டி கிடைத்தால் போதும்’ என்றார் வாடிக்கையாளர்.

‘நல்ல நண்பர். ஏதோ அவசரம் என்று கேட்கிறார். நகை தருகிறார். அரை வட்டி போட்டுக் கொள்ளுங்கள்’ தினகரன்.

‘பேங்க்கில் போட்டாலே அதை விட கூட கிடைக்குமே. உங்களுக்கு என்றால் பார்க்கலாம்’ என்றார் வாடிக்கையாளர்.

‘நான் சொந்த கொடுக்கல், வாங்கல் எதுவும் செய்வதில்லை என்பதுதான் உங்களுக்கு தெரியுமே! ஒரு வட்டியில் முடித்துக் கொள்ளலாம். நான் பொறுப்பு. நகையும் வாங்கி தருகிறேன்’ தினகரன்.

‘சரி. ஒரு வட்டி போதும். நகையை நீங்களே வைத்திருங்கள். பணத்தை இன்டர்நெட் மூலம்  அனுப்புகிறேன். கணக்கு விவரங்கள் சொல்லுங்கள்’ என்றார் வாடிக்கையாளர்.

விவரங்களை சுந்தரம் தந்தான். செல்போனை பார்த்து விட்டு ‘பணம் வந்து விட்டது’ என்றான் சுந்தரம்.

‘பரமார்த்தா, நீ நகைகளை எடுத்துக் கொண்டு போ’ என்றான் தினகரன்.

‘இல்லை, ஜமுனா அடகு வை அல்லது விற்று விடு என்று சொன்னாள்’ என்றேன்.

‘ஒரு பேச்சுக்கு சொல்லியிருப்பார்’ என்றான் தினகரன்.

‘எப்படி சொன்னாள் என்று தெரியாது. அவள் சொன்னதை அப்படியேதான் செய்வேன்’ என்றேன்.

தினகரன் சுந்தரத்தை பார்த்தான்.

‘நான் செய்வதற்கு ஒன்றுமில்லை’ என்றான் சுந்தரம்.

‘சரியப்பா. நகை இங்கே என்னிடமே இருக்கட்டும். நீ நகையை ஈடாக வைத்தது யாருக்கும் தெரிய வேண்டாம். வெளியே விசேஷத்திற்கு போகும்போது தேவைப்படும். வந்து வாங்கிக் கொள். அல்லது போன் செய்தால் நானே கொண்டு வந்து தருகிறேன்.  விசேஷம் முடிந்ததும் திரும்ப வாங்கி கொள்கிறேன். சரிதானே?’ என்றான் தினகரன். கடன் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டான்.

‘ஜமுனா சரி என்றால் எனக்கும் சரிதான்’ என்றேன்.

‘இன்டர்நெட் இருப்பது உபயோகமாக இருக்கிறது’ என்றான் சுந்தரம்.

‘போன் போல இப்போது வெப்சைட்டும் அத்தியாவசியமாகிவிட்டது. உங்கள் கம்பனி வெப்சைட் விலாசம் என்ன?’ என்றான் தினகரன்.

‘எங்கள் கம்பனிக்கு வெப்சைட் இல்லையே’ என்றான் சுந்தரம்.

‘அதை முதலில் போடு. ஒன்றாயிருந்த உலகத்தை மனிதன் பத்தாயிரம் வருஷங்களில்  பல நாடுகளாக பிரித்து விட்டான். இன்டர்நெட் வந்து தூரம், நேரம், எல்லை எல்லாவற்றையும் விலக்கி திரும்பவும் உலகத்தை ஒன்று சேர்த்து கொண்டிருக்கிறது’ என்றான் தினகரன்.

பணம் வாங்கிய விவரங்களைக் கேட்ட ஜமுனா ‘உன் அத்தான் மட்டும்தான் இனி கம்பனிக்கு முதலாளி என்பதை பேங்க்கிற்கு சொல்லி விட்டாயா?’ என்று சுந்தரத்திடம்  கேட்டாள்.

‘இன்னும் இல்லையே’ என்றான் சுந்தரம்.

‘பேங்க்கிற்கு உடனே சொல். உன் அத்தானைத் தவிர வேறு எவரும் பண விவகாரத்தில் தலையிட முடியாதபடி செய்து விடு. எல்லா வாடிக்கையாளர்களுக்கும், சப்ளையர்களுக்கும் கடிதம் மூலம் சொல்லிவிடு’ என்றாள் ஜமுனா.

‘ஐந்து லட்சம். தங்க நகைகளை விற்றால் கூட இவ்வளவு பணம் வந்திருக்காது. இவர் நண்பரின் வார்த்தைக்கு அதிக மதிப்பு இருக்கிறது’ என்றான் சுந்தரம்.

அடுத்து வந்த நான்கு நாட்களில் என்னை கம்பனிக்காக வலைத்தளம் போட வைத்தாள் ஜமுனா. இரண்டு பக்கங்களில் கம்பனி பற்றி சுருக்கமாக போட்டு விடலாம் என்று நினைத்தேன். அவளோ ஐம்பது வருடங்களில் என்னென்ன செய்தோம் என்று விவரமாக எழுத வைத்தாள். நாற்பது வருடங்களுக்கு முன் ஒரு முனிசிபல் ஆரம்ப பள்ளிக்கூடத்திற்கு எட்டு ரூபாய்க்கு கண்ணாடி தம்ளர் விற்றது முதல் வலைதளத்தில் பதிய வைத்து விட்டுத்தான் என்னை விட்டாள்.

வலைத்தளம் போட்டதும் உடனே தினகரனைப் பார்த்து வலைதளத்தை காட்ட சொன்னாள். ‘அவருக்கு காட்டிய பின்புதான் மற்றவர்களுக்கு காட்ட வேண்டும்’ என்றாள்.

தினகரனைப் பார்த்தபோது ‘நானே உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். விசா வாங்க டெல்லி போய்விட்டு நேற்றுதான் திரும்பி வந்தேன்’ என்றான்.

வலைதளத்தை பார்த்து விட்டு ‘நன்றாக இருக்கிறது’ என்றான் தினகரன்.

‘நீ சொல்லியிருக்கா விட்டால் இதை போட்டிருக்க மாட்டோம்’ என்றேன்.

‘ஒரு பெரிய ஆஸ்திரேலிய இன்வெஸ்ட்மென்ட் பேங்க் கம்பனியில் ஒரு வருட பயிற்சியில் சேர இரண்டு வருடங்களாக முயற்சி செய்து கொண்டிருந்தேன். இப்போதுதான் எல்லாம் கூடி வந்திருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் ஆஸ்திரேலியா போய் விடுவேன்’ என்றான் தினகரன்.

‘உன் அலுவலகம்?’ என்றேன்.

‘அதுவும் இருக்கும். என் பார்ட்னர் பார்த்துக் கொள்வார். பயிற்சி முடிந்து திரும்பி வந்தால் மிகவும் பெரிய ஒப்பந்தக்கள் கிடைக்கும். ஷேர் மார்க்கெட் வேலை நிறைய கிடைக்கும். சிவசங்கரனையும் சேர்த்துக் கொண்டு புது அலுவலகம் திறந்து விடுவேன்’என்று கூறிய தினகரன் ‘உன் நகைகளை வாங்கி கொள்கிறாயா?’ என்று கேட்டான்.

‘நீ போக இரண்டு மாதங்கள் இருக்கின்றனவே’ என்றேன்.

‘நான் வாங்கிய மோட்டார் சைக்கிளை இரண்டே இரண்டு தடவைகள்தான் ஓட்டி இருக்கிறேன். நீயாவது ஒரு வாரம் ஓட்டி இருக்கிறாய். யாருக்காவது விற்கலாம்  என்றால் புது வண்டியை பாதி விலைக்கு கேட்கிறார்கள். நீயே வாங்கி கொள்ளேன்’ என்றான் தினகரன்.

‘என்னிடம் பணமிருந்தால் உனக்கு நஷ்டமே இல்லாமல் வாங்கி கொள்வேன்’ என்றேன்.

‘நான் முன்பணமும், ஒரு மாத தவணையும்தான் கட்டியிருக்கிறேன். அதை மட்டும் அடுத்த மாதம் கொடுத்து விடு. அதன்பின் பேங்கிற்கு நீயே மாதாமாதம் கட்டு. கடன் முடிந்ததும் வண்டியை உன் பெயருக்கு மாற்றிக் கொள்’ என்றான் தினகரன்.

அங்கிருந்தே ஜமுனாவிற்கு போன் செய்து கேட்டேன்.

‘உங்கள் நண்பர் நிச்சயம் பணம் வாங்கிக் கொள்வார்தானே?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘பண விஷயத்தில் ரொம்ப கெட்டிக்காரன். என்னை போலில்லை’ என்றேன்.

‘வண்டியை எடுத்துக் கொண்டு வந்து விடுங்கள்’ எனறாள் ஜமுனா. 

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms