27. ராணுவ கவசம் - மீன்கொடி

கூடத்தில் ஆங்கில செய்தித் தாளை தரையில் விரித்து பார்த்துக் கொண்டிருத்தாள்

ஜமுனா. தினமும் அடுப்பில் எதையாவது வைத்து விட்டு, இப்படித்தான் செய்தித் தாளை புரட்டிக் கொண்டிருப்பாள்.

‘என்னங்க, சுந்தரத்தை கூப்பிடுங்களேன்’ என்றாள் ஜமுனா.

ஜன்னல் வழியே தெரிந்த சுந்தரத்தை கையசைத்து அழைத்தேன்.

‘இந்தியா நேற்று புதிய செயற்கைகோள் அனுப்பி இருக்கிறதாம்’ என்றாள் ஜமுனா.

‘எத்தனையோ தடவை அனுப்பி விட்டார்களே’ என்றான் சுந்தரம்.

‘எல்லாமே உபயோகமாக இருந்தாலும், நிறைய செலவாகிறதாம். அதனால் இந்திய ராணுவத்திற்கான விசேஷ செயற்கைகோள்களை வெளிநாட்டு தனியார் கம்பனிகளை விட்டு செய்ய சொல்லலாம் என்று அரசாங்கம் யோசிக்கிறதாம்’ என்றாள் ஜமுனா.

‘தினமும் இப்படித்தான் ஆயிரம் யோசனைகள் சொல்வார்கள். நமக்கென்ன வந்தது?’ என்றான் சுந்தரம்.

‘என்னடா இப்படி சொல்லிவிட்டாய்! ஒரு சாட்டிலைட் எவ்வளவு இருக்கும்?’ என்றாள் ஜமுனா.

‘யாருக்கு தெரியும்? பல கோடி ரூபாய் இருக்கும்’ என்றான் சுந்தரம்.

‘ஏதாவது வெளிநாட்டு கம்பனியிலிருந்து சாட்டிலைட் ஏஜென்சி எடுத்து ராணுவத்திற்கு விற்கலாமா?’ என்றாள் ஜமுனா.

திகைப்புடன் ஜமுனாவை பார்த்த சுந்தரம் ‘அக்கா, நீ எப்போதுமே பெரிய அளவில் துணிச்சலாக யோசிப்பாய் என்று தெரியும். ஆனால் அதற்கு ஒரு அளவில்லையா? சம்பளம் கொடுக்க வக்கில்லாமல் தாலியை அடகு வைக்கிறோம். நாம் சாட்டிலைட் விற்க வேண்டும். அதுவும் ராணுவத்திற்கு! இதைவிட ரிசர்வ் பேங்க்கை கொள்ளையடிப்பது எளிதானது’ என்று கூறி சிரித்தான்.

‘மத்தியானம் ராணுவ அலுவலகம் சென்று விசாரித்து விட்டு வா’ என்றாள் ஜமுனா.

‘என்னக்கா இது! இதெல்லாம் டெல்லியில் ரகசியமாக முடிவாகும் விஷயம். மந்திரிகளும், கோடீஸ்வரர்களும், உயரதிகாரிகளும் பயந்து கவனமாக செய்யும் விஷயம். பல சட்ட திட்டங்கள் இருக்கும். இதைப் பற்றி நாம் பேசுவதே கூட ஆபத்து. சாயங்காலம் கேசரியும், வடையும் செய்து வை. வந்து சாப்பிடுகிறேன்’ என்று கூறிவிட்டு போய் விட்டான் சுந்தரம்.

‘என்னங்க, நீங்கள் போய் வாருங்கள்’ என்றாள் ஜமுனா.

‘எனக்கு நம் கம்பனி பற்றி கூட எதுவும் தெரியாதே’ என்றேன்.

‘நாம் இருவரும் போவோம்’ என்றாள் ஜமுனா.

வியாபாரம் பற்றி பேசப் போவது பற்றி எனக்கு எந்த உணர்ச்சியும் இல்லை. ஜமுனாவோடு வெளியே போவது உற்சாகமாக இருந்தது.

ராணுவ அலுவலகம் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. வழியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரரிடம் விசாரித்தோம். அவர் எங்களை விசித்திரமாக பார்த்து விட்டு ‘ராணுவத்திற்கு நிறைய அலுவலகங்கள் உள்ளன. எனக்கு தேனாம்பேட்டை அலுவலகம்தான் தெரியும்’ என்று கூறி அரைகுறையாக விலாசம் சொன்னார்.

நாங்கள் தட்டு தடுமாறி அந்த இடத்தை அடைந்த போது அங்கே நூற்றுக் கணக்கான இளைஞர்கள் கூடியிருந்தனர். ராணுவத்திற்கு ஆளெடுத்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்தவர்களில் ஒருவரை சுட்டிக்காட்டிய ஜமுனா ‘இவர்தான் மிகப் பெரிய அதிகாரியாக இருக்க வேண்டும். சட்டையில் நிறைய நட்சத்திரங்கள் குத்தி இருக்கிறார்’ என்று கூறி விட்டு நான் எதுவும் சொல்லுமுன் அவரிடம் சென்றாள். ‘சார், சென்னையிலேயே யார் பெரிய அதிகாரியோ அவரை நாங்கள் பார்க்க வேண்டும்?’ என்றாள். நானும் கூடவே சென்றேன்.

அதிகாரியின் கடுமையான முகம் மேலும் கடுமை அடைந்தது. என்னை முறைத்துப் பார்த்தார். என்னிடம் ‘என்ன ஜவான் வேலைக்கு சிபாரிசு பிடிக்க வேண்டுமா? உன் உடல் வாகிற்கு இங்கே குப்பை கூட்டும் வேலை கூட கிடைக்காது. ஓடிப் போய் விடுங்கள்’ என்று இரைந்தார்.

‘வா ஜமுனா, போய் விடலாம்’ என்றேன்.

‘சார், ராணுவ சாட்டிலைட் பற்றி...’ என்று ஆரம்பித்தாள் ஜமுனா.

சட்டென்று முகம் மாறினார் அதிகாரி. ‘யார் அனுப்பியது?’ என்றார்.

‘என் சகோதரர் சுந்தரம்தான் வந்திருக்க வேண்டும். அவர் வராததால் நாங்கள் வந்திருக்கிறோம்’ என்றாள் ஜமுனா.

‘முதலிலேயே சொல்ல வேண்டியதுதானே மேடம்? மன்னித்துக் கொள்ளுங்கள். எப்படி வந்தீர்கள்?’ என்று கேட்டார் அதிகாரி.

‘மோட்டார் சைக்கிளில்’ என்றேன்.

தலையை ஆட்டிக் கொண்டு ‘இது போன்ற பெரிய ரகசியமான விஷயங்களைப் பற்றி பேசவரும்போது  எவரும் கவனிக்காதபடி சாதாரணமாக வருவதுதான் நல்லது. நீங்கள் புத்திசாலிகள்தான். சார் சரியான ஆட்களைத்தான் அனுப்பி இருக்கிறார்’ என்றவர் செல்போனில் எவருடனோ பேசினார். பின் ஒரு ஜவானை அழைத்தார் ‘அமைச்சர் பாலசுந்தரம் இவர்களை அனுப்பி இருக்கிறார். ஆவடி பீரங்கி தொழிற்சாலையை பார்வையிட தென் மண்டல அதிகாரி போயிருக்கிறார். அவரிடம் உடனே அழைத்துப் போ’ என்று ஆணையிட்டார். பின் எங்களிடம் ‘காபி? டீ?’ என்று புன்னகையோடு கேட்டார்.

‘வேண்டாம் சார். சிறு குழப்பம் நடந்து விட்டது...’ என்று ஆரம்பித்தாள் ஜமுனா.

‘குழப்பத்திற்கு என் அவசரம்தான் காரணம். ஜவான் வேலைக்கு வந்திருக்கிறீர்கள் என்று தவறுதலாக நினைத்துவிட்டேன்’ என்று கூறி மீண்டும் புன்னகைத்தார்.

‘புன்னகைக்கும்போது அழகாக இருக்கிறீர்கள்’ என்றேன்.

ஜமுனா மீண்டும் பேச முயன்றபோது அவரை எவரோ கூப்பிட ஜவானிடம் சைகை செய்து விட்டு போய்விட்டார் அதிகாரி.

ஜவான்  எங்களை ராணுவ கவச வண்டி ஒன்றில் ஏற்றி கொண்டார். அவர் எதுவும் பேசாமல் மிகுந்த மரியாதையுடன் வண்டி ஓட்டினார். ஆவடி பீரங்கி தொழிற்சாலைக்குள் நுழைந்த பின், பல பாதுகாப்பு அரண்களை தாண்ட வேண்டி இருந்தது. ஜவான் எங்களை பேசவே விடாமல் அவரே இந்தியில் ஏதோ கூறினார். இறுதியாக ஒரு பெரிய அறைவாசலின் முன் நின்றோம். அங்கிருந்த பெண் அதிகாரி ஜமுனாவையும், ஆண் அதிகாரி என்னையும் உடல் முழுவதும் தடவி சோதனை செய்து பின் அறைக்குள் அனுமதித்தனர்.

தென் மண்டல அதிகாரி மிகவும் மரியாதையுடன் வரவேற்று அமர வைத்தார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ‘உங்களைப் பற்றி நான் தெரிந்து கொள்ளலாமா?’ என்று கேட்டார்.

ஜமுனா ‘சார், குழப்பம் நடந்து விட்டது. செய்தித்தாளில் சாட்டிலைட் பற்றி செய்தி வந்திருந்தது. அதை விற்றால் என்ன என்று எங்கள் கம்பனிக்கு தோன்றியது’ என்று ஆரம்பித்து ஆவடி வந்தது வரை சுருக்கமாகக் கூறினாள். 

தென் மண்டல அதிகாரி வாய்விட்டு சிரித்தார். ‘என் கீழே வேலை பார்க்கும் அதிகாரிகள் எல்லோருமே அவசரக்காரர்கள். உங்களை அனுப்பி வைத்த அதிகாரி போன வருடம் யாரோ ஒருவனை என் தம்பி என்று நினைத்து இங்கே அழைத்து வந்து விருந்தும் கொடுத்தார்! அவர் பேசும் விதம் அவரோடு, எங்களையும் சேர்த்து தவறானவர்கள் என்று நினைக்க வைத்துவிடும். மிகவும் நேர்மையான முட்டாள். தண்டனை தந்து திருத்த முடியாது.  தானாகத் திருந்தினால்தான் உண்டு’ என்றார்.

‘சார், அவர் எங்களை  பேசவே விடவில்லை’ என்றேன்.

‘முழு மூடன் அடுத்தவர் பேசுவதை கேட்பானா?’ என்றார் தென் மண்டல அதிகாரி. பின் என்னைப் பார்த்து சிரித்துவிட்டு ‘சாட்டிலைட் விற்க நினைத்த அறிவாளி நீதானா? அதற்கு மனைவியை வேறு அழைத்து வந்திருக்கிறாய்! ராணுவத்திற்கு சப்ளை செய்வது எளிதானதல்ல. உன்னால் முடியாது என்று சொல்லவில்லை. ஆனால் சாட்டிலைட், ராக்கெட், ராடார் என்பதெல்லாம் சிக்கலான வர்த்தகம். டெல்லியில் பாதுகாப்பு அமைச்சகம் முடிவெடுக்கும் விஷயம் உன் துணிச்சலைப் பார்த்து ராணுவ வீரனாக நான் மகிழ்ந்தாலும், இதுபோன்ற கேனத்தனத்தை இனிமேல் செய்ய வேண்டாம். ராணுவம் போன்ற தேசப் பாதுகாப்பு நிறுவனங்களோடு தொடர்பு கொள்ளும்போது கவனமாக இரு’ என்றவர் சிறிது யோசித்துவிட்டு ‘என் நண்பர் ஆட்ரிக் ஜெர்மனியில் ஒரு ராடார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அவருக்கு டாப்ளர் ராடார் பற்றி தெரியும். அவரது போன் நம்பர் தருகிறேன். ஏதாவது உதவக் கூடும்’ என்றார்.

‘சார், ராடார் என்றால் ராணுவம்தானே வாங்கும்?’ என்றாள் ஜமுனா.

‘டாப்ளர் ராடார் என்ற கருவியை ராணுவமும் வாங்கும். மருத்துவமனை, வானிலைத்துறை போன்ற நிறுவனங்களும் வாங்குகின்றன. அந்த கருவிக்கு பல பயன்பாடுகள் உண்டு’ என்று கூறி விடை கொடுத்தார்  தென் மண்டல அதிகாரி.

நன்றி கூறிவிட்டு நாங்கள் கதவருகே சென்றபோது ‘வந்த கவச வண்டியிலேயே போய் விடுங்கள். இந்த குழப்பம் பற்றி தேனாம்பேட்டை அதிகாரியிடம் பேச வேண்டாம். உங்கள் மேல் கோபப்படுவார்’ என்றார் தென் மண்டல அதிகாரி.

அவரது அறையை விட்டு வெளியே வந்ததும் என் செல்போனை எடுத்து ஜெர்மன் எண்ணை அழைத்தாள்.

‘வீட்டிற்கு போய் பேசலாமே’ என்றேன்.

‘இப்போதே பேசி விடலாம். ஏதாவது தேவை என்றால் சாரிடம் இப்போதே கேட்டு விடலாம். வெளியே போய் விட்டால் திரும்ப உள்ளே வர முடியாது’ என்றாள் ஜமுனா.

அப்போது பாதுகாப்பு அதிகாரி எங்கள் அருகே வந்தார் ‘இது பாதுகாக்கப்பட்ட பகுதி. வெளியே போய் போன் பேசுங்கள்’ என்றார்.

‘சார்தான் இந்த நம்பருக்கு பேச சொன்னார்’ என்றேன்.

‘அப்படியானால் சரி’ என்று கூறி விலகி சென்றார் பாதுகாப்பு அதிகாரி.

ஒலிபெருக்கி போட்டு பேசினாள் ஜமுனா.

ஆட்ரிக் பணிவு கலந்த நட்புடன் பேசினார். ‘எனது அந்தரங்க எண் உங்களுக்கு எப்படி கிடைத்தது?’ என்று வினவினார்.

தென் மண்டல அதிகாரியின் பெயரை கூறியதும், அவரது குரலில் பணிவும், நட்பும் அதிகரித்தன. சிறிது பேசியபின் ‘உங்கள் கம்பனியின் வரலாறையும், பொருட்களையும் பற்றி கூறுங்கள். என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன்’ என்றார் ஆட்ரிக்.

என்னிடம் ‘உங்களுக்கு விவரங்கள் தெரியுமா?’ என்று கேட்டாள்.

தெரியாது என்று தலையசைத்தேன்.

சற்று யோசித்த ஜமுனா ‘எங்கள் கம்பனி வெப்சைட்டில் எல்லா விவரங்களும் இருக்கின்றன. உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது பார்க்க முடியுமா?’ என்று கூறி வலைதள விலாசத்தை தந்தாள்.    

‘உடனே பார்க்கிறேன்’ என்றார் ஆட்ரிக்.  

ராணுவ கவச வண்டியில் திரும்பும் போது ஆவடியில் ராணுவ சீருடைகள் விற்கும் கடை தென்பட்டது. ஜவானிடம் கேட்டபோது ‘பொதுமக்களும் வாங்கலாம். ஆனால் இதற்கும், நிஜ ராணுவ உடைக்கும் நுட்பமான வித்தியாசம் உண்டு. விஷயம் தெரியாதவர்களுக்கு அந்த வித்தியாசம் தெரியாது’ என்றார்.

‘உனக்கு இந்த உடை அழகாக இருக்கும்’ என்றேன்.

‘நான் தாவணி, சேலை தவிர எதுவும் கட்டியதில்லை. உங்களுக்கு பிடிக்குமென்றால் போடுகிறேன்’ என்றாள் ஜமுனா.

பலவித ராணுவ சீருடைகளை போட்டு பார்த்தாள் ஜமுனா. பொறுமையின் எல்லைக்கு கடைக்காரர் வந்தபோது தனக்கு பொருத்தமான கால்சட்டை, மேல்சட்டை, தொப்பி, சப்பாத்து எல்லாம் வாங்கினாள். அதே ராணுவ உடையில் கவச வண்டியில் ஏறிக் கொண்டாள். 

‘உங்களைப் பார்த்தால் பெரிய ராணுவ அதிகாரி போல தெரிகிறது’ என்றார் ஜவான்.

சந்தோஷமாக புன்னகைத்தாள் ஜமுனா.

தேனாம்பேட்டையை  அடைந்தபோது மாலை மயங்கத் தொடங்கி இருந்தது. எவரும் இல்லை. எங்கள் வண்டியை  எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.      

‘நீங்கள்தான் சாட்டிலைட் விற்க வந்தீர்கள் என்று பெரிய அதிகாரி நினைத்து விட்டார். நான் வாங்க வேண்டிய திட்டு’ என்றாள்.

‘உன்னை யாராவது திட்டினால் என் மனம் நொந்து போகும். உனக்காக திட்டு வாங்குவது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இதற்காவது பயன்படுகிறேனே’ என்றேன்.

ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டுவிட்டு, வீடு திரும்பும்போது ஒன்பதரை  ஆகிவிட்டிருந்தது. வீட்டு காம்பவுண்டிற்குள் வெளியே வண்டியை நான் நிறுத்தவும், காம்பவுண்டு கதவை திறக்க ஜமுனா இறங்கினாள்.  விளக்கு ஏற்றப்படாமல் வளாகமே இருட்டாக இருந்தது.

கதவை திறக்குமுன் ‘என்ன சத்தம் அது?’ என்றாள்.

‘எனக்கு ஒரு சத்தமும் கேட்கவில்லை’ என்றேன்.

கூர்ந்து பார்த்துவிட்டு ‘கம்பனி கதவை எவனோ திறக்கப் பார்க்கிறான். நான் போய் கேட்கிறேன்’ என்றாள்.

‘நான் போய் பார்க்கிறேன்’ என்று கூறிவிட்டு அவளுக்கு முன்பாக வேகமாகப் போனேன். என் பின்னால் ஜமுனா வந்தாள். நிலா வெளிச்சத்தில் பூட்டை திறக்க முயன்று கொண்டிருந்தவன், நாங்கள் வரும் சத்தம் கேட்டு நிமிர்ந்தான். தன் இடுப்பில் செருகியிருந்த கத்தியை எடுத்து என்னை அச்சுறுத்தும் வகையில் நீட்டினான்.

நான் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அசையாது நின்றேன்.

அதற்குள் ஜமுனா ஏதோ ஒரு விளக்கை போட்டு விட்டாள். மின்விளக்கு வெளிச்சத்தில் ஜமுனாவைப் பார்த்த திருடன் திடுக்கிட்டு பயந்து போனான். கத்தியை கீழே தவறவிட்டு  கைகளை கூப்பினான். ‘மேடம், விட்டு விடுங்கள். அடிக்க வேண்டாம். நான் ஓடியே போய் விடுகிறான்’ என்று குழறினான்.

‘பையில் என்ன?’ என்று உரத்த குரலில் கேட்டாள்  ஜமுனா.

‘வெறும் பைதான். இன்னும் எதுவுமே எடுக்கவில்லை மேடம்’ என்றான்.

‘கத்தியை எடுத்துக் கொண்டு ஓடிப் போ’ என்றாள் ஜமுனா.

கத்தியை எடுத்துக் கொண்டு அவளுக்கு ஒரு சல்யூட் போட்டு விட்டு, ஓடத் தொடங்கினான் இன்னும் எதையும் எடுக்காத திருடன்.

அவளையே பார்த்தேன். தன் மேல்சட்டையை சரியாக இழுத்துவிட்டுக் கொண்ட ஜமுனா  ‘திருடன் பார்வையே தேவலை. அவன் பணத்தைத்தான் திருடுவான். நீங்கள் என்னையே மொத்தமாக திருடும் ஆள்’ என்றாள்.

‘இங்கு என்ன இருக்கிறது என்று இவர் திருட வந்தார்?’ என்று கேட்டேன்.

‘நிறைய வரப் போகிறது. அது நமக்கு முன்னால் திருடனுக்கு தெரிந்து விடும்’ என்றாள் ஜமுனா.

‘என்னை திருடன் என்றாய்! எனக்கு எதுவும் தெரியவில்லையே?’ என்றேன்.

‘தெரிந்ததால்தானே எட்டு வருஷங்களுக்கு முன்னால் மதுரைக்கு என் அப்பா வீட்டிற்கு வந்தீர்கள்? சிறிய ஜவுளி மூட்டையை கொடுத்துவிட்டு, என்னை மொத்தமாக சுருட்டி எடுத்து கொண்டு ஓடினீர்கள்?’ என்று கூறி சிரித்தாள் ஜமுனா.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms