28. சிற்ப ஆய்வு - மீன்கொடி

அன்றிரவு ராணுவ அலுவலகம் சென்று வந்ததைப் பற்றி வெகு நேரம் சிரித்துப் பேசிக் கொண்டிருதோம். தூக்கம் வரவில்லை. பதினோரு மணிக்கு எதிர்பாராமல் ஆட்ரிக்கிடமிருந்து போன் வந்தது.

‘உங்கள் வலைதளத்தை கவனமாகப் பார்த்தேன். எங்கள் கம்பனி பொருட்களுக்கும் உங்கள் கம்பனிக்கும் நேரடியான எந்த சம்பந்தமும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை’ என்றார் ஆட்ரிக்.

‘பரவாயில்லை, இன்றில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் ஏதேனும் வாய்ப்பு வரலாம்’ என்றாள் ஜமுனா.

‘ஆம். வரலாம்.  உங்கள் வலைதளத்தில் ஆய்வு கருவிகளுக்கான உதிரிப் பொருட்களையும், திருகாணிகளையும் சப்ளை செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எந்த நாட்டு ஆய்வுக் கருவிகள்?’ என்றார் ஆட்ரிக்.

‘அமெரிக்க, ஐரோப்பிய கருவிகள்’ என்றாள் ஜமுனா.

‘மிகவும் நல்லது. எங்கள் கம்பனிக்கு கிராஸ்குரோஸ் என்ற கம்பனி உதிரி பொருட்களை சப்ளை செய்கிறது. சைனாவிலிருக்கும் சிறிய உற்பத்தியாளர்கள் செய்யும் உலகத்தரம் வாய்ந்த உதிரி பொருட்களை தன் பெயரை போட்டு கிராஸ்குரோஸ் உலகம் முழுவதுமுள்ள பெரிய கம்பனிகளுக்கு விற்கிறது.  அவர்களிடம் சிறிது நேரத்திற்கு முன் பேசினேன். சைனாவை மட்டும் நம்பியிராமல் இந்தியாவிலும் சிறிய உற்பத்தியாளர்களை நியமிக்க நினைத்து  தர ஆய்வாளர்கள் இரண்டு பேரை இந்தியாவிற்கு அனுப்பி இருக்கிறது. மூன்று நாட்கள் பெங்களூரில் இருப்பார்கள். நீங்கள் விரும்பினால் அவர்களோடு தொடர்பு கொண்டு உங்கள் உதிரி பாகங்களை காட்ட ஏற்பாடு செய்யுங்கள். இப்போதைக்கு என்னால் இவ்வளவு மட்டுமே செய்ய முடியும்’ என்று கூறி, அவர்கள்  செல்போன் எண்களை ஆட்ரிக் தந்தார்.

அவருக்கு நன்றி கூறிய பின் சுந்தரத்தை அழைத்தாள் ஜமுனா.

‘தூங்கியிருப்பான். காலையில் பேசலாமே’ என்றேன்.

‘கம்பனி தூங்குகிறது. இவனாவது விழிப்பாக இருக்க வேண்டாமா?’ என்றாள் ஜமுனா.

ஜமுனா சொன்னதை அரைத்தூக்கத்தில் கேட்டபின் ‘பத்து கோடி சாட்டிலைட்டிலிருந்து, ஒரு ரூபாய் திருகாணிக்கு வந்து விட்டாய்’ என்று கேலி செய்தான் சுந்தரம்.

‘ஒற்றை ரூபாய்கள் இல்லாமல் கோடிகள் இல்லை. தனி மனிதர்கள் இல்லாமல்  உலகமோ, பிரபஞ்சமோ இல்லை’ என்றாள் ஜமுனா.

‘நமக்கு முருகவேள்தான் உதிரிப் பொருட்கள் செய்து தருபவர். காலையில் போய் பார்க்கிறேன்’ என்றான் சுந்தரம்.

‘காலையில் நான்கு மணிக்கு இங்கே வந்துவிடு நாம் பேசியபின் உடனே முருகவேளை போய் பார். கொஞ்சம் தாமதமானாலும் வெளியே போய்விடப் போகிறார்’ என்றாள் ஜமுனா.

‘அத்தனை சீக்கிரமாக அவர் ஏன் வெளியே போக வேண்டும்?’ என்றான் சுந்தரம்.    

‘அவருக்கு கடன்சுமை இருக்கிறது என்று பழனியப்பன் சொன்னார்’ என்றாள் ஜமுனா.

‘சரி, சரி. முடிந்த அளவு சீக்கிரமாகப் போகிறேன்’ என்று கூறிவிட்டு போனை அணைத்தான் சுந்தரம்.

‘என்னங்க, இணையத்தில் கிராஸ்குரோஸ் பற்றி கண்டுபிடித்து சொல்லுங்களேன்’ என்றாள் ஜமுனா.

‘நீயே பார்ப்பதுதானே?’ என்றேன்.

‘ஒரு தடவை கற்றுக் கொடுங்கள். அப்புறம் நானே பார்த்துக் கொள்கிறேன்’ என்றாள் ஜமுனா.

இணையத்தையும், கூகிளையும் எப்படி உபயோகிப்பது என்று என் மடிகணினியை வைத்து ஜமுனாவிற்கு சொல்லித் தந்தேன். கிராஸ்குரோஸ் வலைதளத்தை கண்டுபிடித்துக் கொடுத்தேன். அவள் அதை வாசிக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் அவள் அருகிலேயே தூங்கிவிட்டேன்.

பேச்சுக்குரல் கேட்டு கண்விழித்தபோது மணி காலை ஐந்து. ஜமுனா கம்ப்யூட்டரில்  கிராஸ்குரோஸ் வலைதளத்தை காட்டி சுந்தரத்திடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். ஒரு காகிதத்தில் அவள் கூறியவற்றை குறித்துக் கொண்டிருந்தான்.

‘நான்கு மணிக்கு வரச் சொன்னால் நான்கரைக்கு வருகிறான். இப்படி இருந்தால் எப்படி கம்பனி நடத்துவது?’ என்று என்னிடம் சொன்னாள் ஜமுனா.

‘நான் போய் முருகவேளைப் பார்த்து இந்த பட்டியலில் இருக்கும்  உதிரி பொருட்கள் சாம்பிள்கள் வைத்திருக்கிறாரா என்று கேட்டு வருகிறேன்’ என்ற சுந்தரம் ‘அத்தான், நீங்களும் வருகிறீர்களா? ’ என்று என்னிடம் கேட்டான்.

‘அவரை எதற்கடா இந்த காலை குளிரில் வெளியே அலைய வைக்கிறாய்? ஐந்துதானே ஆகிறது? இன்னும் சிறிது நேரம் தூங்கட்டும்’ என்றாள் ஜமுனா.

‘சரியக்கா, சரி. நான் குளிரில் போகிறேன்’ என்று கூறிவிட்டு என் வண்டியில் கிளம்பினான் சுந்தரம்.

‘நீ தூங்கினாயா?’ என்று கேட்டேன்.

புன்னகைத்தாள் ஜமுனா.

ஏழு மணிக்கு ஒரு பை நிறைய யந்திரப் பொருட்களோடு வந்தான் சுந்தரம். ‘அக்கா, முருகவேளின் பேக்டரி உன் படுக்கை அறையைவிட சிறியது. அதில் மேனுவல் லேத் வைத்திருக்கிறார். சிற்பி உளி வைத்து கல்லில் சிற்பம் செதுக்குவது போல திருகாணிகளை செய்கிறார். இதெல்லாம் சரி வராது’ என்றான் சுந்தரம்.

ஜமுனா கிராஸ்குரோஸ் தர ஆய்வாளர்களுக்கு போன் செய்தாள்.  ‘எங்கள் தலைமை அலுவலகத்திலிருந்து செய்தி வந்தது. இதுவரை நூறு கம்பனிகளுக்கு மேல் பார்த்து விட்டோம். ஒரே ஒரு கம்பனி கூட நல்ல தரத்தில் பொருட்களை செய்யவில்லை. அதை சுட்டிக்காட்டினால், உடனே கம்பனிக்காரர்கள் ‘எங்கள் தரம் நன்றாக இருக்கிறது என்று எழுதுங்கள். பத்து சதவிகிதம் லஞ்சம் தருகிறோம்’ என்று பதில் சொல்கிறார்கள். நூறு கோடி பேர் இருக்கும் நாட்டில் தரமான பொருள் செய்ய முடியவில்லை என்பது சோகமான விஷயம்’ என்றார் மூத்த ஆய்வாளரான லியோனி.

‘எங்கள் பொருட்களை பார்த்தபின் உங்கள் சோகம் சந்தோஷமாக மாறக் கூடும்’ என்றாள் ஜமுனா.

‘அதையும் பார்த்து விடலாம். சென்னையில் வேறிரண்டு கம்பனிகளையும் பார்க்க வேண்டும். இன்று மதியம் நான் மட்டும் சென்னை வருகிறேன். இரவே திரும்புகிறேன். ஆறு மணிக்கு என் அறைக்கு வாருங்கள். உங்கள் சாம்பிள்களை காட்டுங்கள். அதன்பின் தேவைப்பட்டால் உங்கள் பேக்டரியையும் பார்த்து விடுகிறேன்’ என்று கூறினார் லியோனி.

‘பேக்டரி பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது. நம் பொருள்களை பார்த்ததுமே நம்மை துரத்தி விடுவார்’ என்றான் சுந்தரம்.

மாலை ஜமுனாவும் தயாரானாள். ‘நாங்களே போய் வருகிறோமே அக்கா’ என்றான் சுந்தரம்.

‘நானும் வருகிறேன். பெரிய ஹோட்டல்களை நான் பார்த்ததே இல்லை’ என்றாள் ஜமுனா.

‘வெளிநாட்டுக்காரர் முன்னால் காரில் போய் இறங்கினால் கௌரவமாக இருக்கும் அக்கா’ என்றான்.

‘ஆட்டோவில் போகலாம்’ என்றாள் ஜமுனா.

‘அத்தான், பெரியத்தானிடம் இன்று மாலைக்கு மட்டும் கார் வாங்கிக் கொள்ளலாமே’ என்றான் சுந்தரம்.

‘வேண்டாம்’ என்றாள் ஜமுனா.

‘அத்தான் நீங்கள் போன் செய்யுங்கள்’ என்றான் சுந்தரம்.

ஜவுளி அண்ணிக்கு போன் செய்தேன். ‘வீட்டில் இருப்பீர்களா?’ என்று கேட்டேன்.

‘எல்லோரும் வெளியே போகிறோம்’ என்றார் ஜவுளி அண்ணி.

‘ஆட்டோவில் போகலாம்’ என்றேன்.

லியோனியை நட்சத்திர விடுதியின் வரவேற்பறையில் சந்தித்தோம். ஆறு மணிக்கு பார்க்கலாம் என்றவர் எட்டு மணிக்குத்தான் வந்தார். போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டதாகக் கூறி மன்னிப்பு கேட்டார். ‘இது என்ன நாடு! முறையோ, ஒழுங்கோ இல்லை’ என்று அலுத்துக் கொண்டார். இனிமையாகப் பேசினாலும் இந்தியர்களை ஏளனம் செய்யும் வழக்கமான வெளிநாட்டுப் புன்னகை அவர் உதடுகளில் இருந்தது.

‘இரண்டு கம்பனிகளையும் பார்த்து விட்டேன்.  பத்து சதவிகிதம் சொன்ன மற்ற இந்திய கம்பனிகளை விட உங்களூர் கம்பனிகள் சிறந்தவை. இருபது சதவிகிதம் லஞ்சம் தருவதாக சொல்கிறார்கள். உங்கள் தொகை என்னவோ!’ என்று கேலியாகக் கூறியபடி சுந்தரம் தந்த பெட்டியை வாங்கி திறந்தார் லியோனி.

‘பத்து மணிக்கு கிளம்ப வேண்டும். உங்கள் பேக்டரிக்கு வர இயலாது’  என்று கூறியபடி இரண்டு, மூன்று உதிரி பாகங்களை புரட்டிப் பார்த்தார் லியோனி. அவற்றை மீண்டும் கவனமாக ஆராய்ந்தார். ‘வெளிநாட்டில் வாங்கியதா? நீங்கள் செய்ததா?’ என்றார்.

‘நாங்கள் செய்ததுதான். அதாவது எங்கள் மேற்பார்வையில் வென்டார் செய்தது’ என்றான் சுந்தரம்.

‘இங்கேயே, இந்தியாவிலேயே செய்ததா?’ என்று கேட்டார் லியோனி.

‘ஆமாம்’ என்றான் சுந்தரம்.

‘என் அறைக்கு போகலாம். வாருங்கள்’ என்று ஆறாவது மாடியிலிருந்த தன் அறைக்கு அழைத்து சென்றார் லியோனி.

‘இன்றைக்கு நீங்கள் என் விருந்தாளிகள்’ என்று கூறிவிட்டு எங்களை கேட்காமலே இரவு உணவை அறைக்கு கொண்ட வரும்படி உத்தரவிட்டார். உணவு வரும் வரை தன் கருவிகளை வைத்து ஒவ்வொரு பொருளாக ஆராய்ந்தார்.

‘இவை யந்திர பொருட்கள் போலில்லை. உயிருள்ளவையாகத் தெரிகின்றன’ என்றார் லியோனி.

‘இவற்றை செய்பவர் சிற்ப கலையும் தெரிந்தவர்’ என்றாள் ஜமுனா.

‘உங்கள் இந்தியாவில் கூட தரமுள்ள பொருட்கள் செய்யும் கம்பனி இருப்பது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது. தரம் என்றால் உலகத் தரம். எங்கள் ஜெர்மனியில் செய்யும் தரத்தை விட உயர்வானதாக இருக்கிறது. தவறு செய்து விட்டேன். உங்கள் பேக்டரிக்கு முதலில் வந்திருக்க வேண்டும்’ என்றார் லியோனி.

எல்லா பொருட்களையும் பார்த்த பின், வரைபடங்கள் உள்ள ஐந்து காகிதங்களைத் தந்தார். ‘இதே போல செய்ய வேண்டும். ஒரு பீசுக்கு எண்ணூறு ரூபாய் தருகிறோம். ஒவ்வொன்றிலும் மாதம் நூறு வேண்டும். மொத்தம் ஐநூறு வேண்டும். முதல் மூன்று மாதங்கள் பார்ப்போம். எல்லாம் சரியாக வந்தால் மாதம் பத்தாயிரம் பீசுகள் கூட வாங்க வாய்ப்புண்டு. முதலில் ஐநூறு செய்யுங்கள்’ என்றார் லியோனி.

‘நீங்கள் வாயால் கூறுவதை ஆர்டர் என்று எடுத்துக் கொண்டு தயாரிப்பில் இறங்கி விடலாமா?’ என்றான் சுந்தரம்.

‘எங்கள் நாட்டில் வாயால் கூறுவதும், எழுத்தால் தெரிவிப்பதுவும் ஒன்று போன்றவையே. வேறுபாடு எதுவுமில்லை. சாம்பிள்களை எடுத்துக் கொண்டு நான் பெங்களூர் போகிறேன். தேதிகள், அனுப்பும் முறை, பண விவரங்களை நாளை காலையில் மின்னஞ்சல் மூலம் அனுப்புகிறேன். நாளையே நீங்கள் தயாரிக்கத் தொடங்கலாம்’ என்றார் லியோனி.

உணவு வந்ததும் எங்களோடு சேர்ந்து உண்டார். ஜமுனாதான் பெரும்பாலும் பேசினாள். கிராஸ்குரோஸ் பற்றி மட்டுமே பேசினாள். எங்களுக்கு விடை தருமுன் ‘என்னை விட உங்களுக்கு கிராஸ்குரோஸ் பற்றி அதிகமாகத் தெரிந்திருக்கிறது’ என்று மகிழ்ந்தார் லியோனி.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms