29. முருகவேளின் புது மெஷின் - மீன்கொடி

மறுநாள் முருகவேளை வரச் சொல்லி சுந்தரம் போன் செய்த அரைமணி நேரத்திற்குள் முருகவேள் அம்பத்தூரிலிருந்து வந்துவிட்டார்.

கம்பனி அலுவலகத்தில் நானும், சுந்தரமும் அவரை சந்தித்தோம். உட்கார சொல்லி பலமுறை கூறிய பிறகுதான் எங்கள் முன் உட்கார்ந்தார்.

‘ஜெர்மனிகாரன் நீங்கள் செய்த யந்திர உதிரிப் பொருட்கள் நன்றாக இருப்பதாக சொல்கிறான். நீங்கள் மேனுவல் லேத்தில் கையால்தான் இதை செய்கிறீர்கள் என்று சொன்னால் நம்ப மறுக்கிறான். உயர்தர ஆட்டோமேட்டிக் யந்திரத்தில் செய்தால்தான் இவ்வளவு துல்லியமாக. கச்சிதமாக செய்ய முடியும் என்கிறான்’ என்றான் சுந்தரம்.

‘ரொம்ப சந்தோஷம், ரொம்ப சந்தோஷம்’ என்றார் முருகவேள்.

‘உங்களால் ஒரு மாதத்திற்கு எத்தனை பீஸ்கள் தயாரிக்க முடியும்?’ என்று கேட்டான் சுந்தரம்.

‘ஒரு நாளைக்கு இரண்டு செய்ய முடியும். நேரம் கிழமை பார்க்காமல் வேலை செய்தால் மாதம் ஐம்பது அல்லது அறுபது செய்து விடலாம்‘ என்றார் முருகவேள்.

‘இப்போது எத்தனை செய்கிறீர்கள்?’ என்று கேட்டான் சுந்தரம்.

‘மாதத்திற்கு இருபது வரை’ என்றார் முருகவேள்.

‘எங்களுக்கு ஒரு பீஸ் ஐநூறு ரூபாய்க்கு தருகிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு லாபம் வரும்?’ என்று கேட்டான் சுந்தரம்.

பதில் சொல்லத் தயங்கினார் முருகவேள்.

‘நாங்கள் விலையை குறைக்கப் போவதில்லை. வேறொரு விஷயத்திற்காகக் கேட்கிறோம்’ என்றார் சுந்தரம்.

‘இருநூறு ரூபாய் கிடைக்கும்’ என்று கேட்டான் சுந்தரம்.

‘மாத வருமானம் நாலாயிரம்தானா? எப்படி சமாளிக்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.

‘கஷ்ட ஜீவனம்தான். வீட்டில் எப்போதும் இல்லை என்ற பாட்டுதான் கேட்கும். வெளியே வந்தால் கடன்காரர்களின் ஏச்சு. என் லேத் ஷெட்டில் மட்டும்தான் நான் சந்தோஷமாகவும், சுதந்திரமாகவும் இருக்கிறேன்’ என்றார் முருகவேள்.

‘மாதம் ஐநூறு பீஸ்கள் செய்து தர முடியுமா?’ என்று கேட்டான் சுந்தரம்.

‘இப்போதிருக்கும் யந்திரத்தை வைத்து செய்ய முடியாது சார். ஆட்டோமேட்டிக் யந்திரம் வாங்கினால் மாதம் இரண்டாயிரம் பீஸ்கள் செய்யலாம். தரத்தையும் இன்னமும் உயர்த்திவிடலாம்’ என்றார் முருகவேள்.

‘நீங்கள் ஒரு ஆட்டோமெட்டிக் யந்திரம் வாங்கி விடுங்களேன்’ என்றான் சுந்தரம்.

சிரித்தார் முருகவேள் ‘மூன்று லட்சமாகும். கிட்டத்தட்ட என் ஆறு வருஷத்து வருமானம்.’

‘பேங்கில் கேட்டால் கடன் கொடுப்பார்களே’ என்றான் சுந்தரம்.

‘வேறு ஒரு ஆர்டருக்காக முன்பே பேங்கில் கேட்டு பார்த்து விட்டேன். திருப்பி கொடுக்க நினைக்காத பணக்காரர்களுக்குதான் பேங்கில் கடன் கொடுப்பார்கள். திருப்பிக் கொடுக்க நினைக்கும் என்னைப் போன்றவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள்’ என்றார் முருகவேள்.

‘பேங்க் அதிகாரிகள் தங்கள் பாதுகாப்பை பார்க்க வேண்டுமே! நிலத்தையோ, நகையையோ செக்யூரிட்டியாகக் கொடுத்தால் உடனே கடன் தருவார்கள். எங்களுக்குக் கூட பேங்க்கில் பிரச்சினை இருக்கிறது. சம்பளம் தர ஜமுனாவின் நகைகளை வெளியே அடகு வைத்திருக்கிறோம்’ என்றேன்.

புன்னகைத்தார் முருகவேள்.

சுந்தரம் என்னை முறைத்தான்.

பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்பு. நழுவி விடும் போலிருந்தது.

தட்டுகளில் கேசரியும், வடையும் எடுத்துக் கொண்டு ஜமுனா வந்தாள். அருகருகே அல்லது ஒரே கட்டிடத்தில் அலுவலகமும் வீடும் இருப்பதன் தனிச் சிறப்பே இதுதான்.

‘முந்தா நாள் கேட்டேன். இப்போது தருகிறாய்’ என்றான் சுந்தரம்.

தட்டுகளை வைத்துவிட்டு ஜமுனா திரும்பிப் போக யத்தனித்த போது ‘அக்கா, எதுவுமே சரியில்லை’ என்றான் சுந்தரம்.

‘கவனமாகத்தானே செய்தேன்?’ என்றாள் ஜமுனா.

‘ஜெர்மன்காரன் கொடுத்த ஆர்டரை எடுத்துக் கொள்வதில் சிக்கல் இருக்கிறது. அதைச் சொன்னேன்’ என்றான் சுந்தரம்.

‘என்ன ஆயிற்று. முருகவேள் சாரால் பண்ண முடியும் என்று சொன்னாயே’ என்று கேட்டாள் ஜமுனா.

‘அவரிடம் ஆட்டோமெட்டிக் மெஷின் இல்லை. அதை வாங்க அவருக்கு மூன்று லட்சம் தேவைப்படுமாம். சாரிடம் வசதி இல்லை. பேங்கில் கடன் கிடைக்கவில்லை’ என்றேன்.

‘இரண்டு நிமிஷம் வீட்டுக்கு வாருங்களேன்’ என்று என்னிடம் கூறிவிட்டு ஜமுனா முன்னே செல்ல, நான் பின்னே சென்றேன். என்னைத் தொடர்ந்து சுந்தரமும் வந்தான்.

‘நான் உன்னை கூப்பிடவில்லையே’ என்றாள் ஜமுனா.

‘கூப்பிடாமல் வந்து மாட்டி கொள்வதுதானே என் பழக்கம்!’ என்றான் சுந்தரம்.

‘யந்திரத்தை வாங்க நாம் உதவினால் என்ன?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘பத்திருபது பேர் உதவினால்தான் பிழைக்கக் கூடிய நிலையில் நாமே இருக்கிறோம்’ என்றான் சுந்தரம்..

‘புது யந்திரம் வாங்கினால் அவருக்கு எவ்வளவு லாபம் வரும்?’ என்று கேட்டாள் ஜமுனா.

கணக்கெடுத்துச் சொன்னான் சுந்தரம்.

‘நாம் உதவ முடியாது. பேங்கில் நம் கணக்கு சிக்கலில் இருக்கிறது. சப்ளையர்கள் நம் மீது வருத்தத்தில் இருக்கிறார்கள். எப்படியோ பணத்தை புரட்டித் தந்தாலும் திட்டம் கூடி வரவில்லை என்றால் கூடுதலாக ஒரு பிரச்சினை சேர்ந்துவிடும்’ என்றான் சுந்தரம்.

‘ஏன் செய்யக் கூடாது என்பதற்கான காரணங்களை சொல்கிறாயே. ஏன் செய்ய வேண்டும் என்பதற்கு அதிகமான காரணங்கள் இருக்க முடியுமே’ என்றாள் ஜமுனா.

‘இருக்கலாம். ஆனால் காரணங்கள் மட்டுமே பணத்தை கொடுத்து விடுமா?’ என்று சொன்ன சுந்தரம் சிறிது தயங்கி விட்டு ‘அக்கா, ஒரு வழி இருக்கிறது. கல்யாணத்தன்று அப்பா..’ என்று மெல்ல ஆரம்பித்தான்.

‘போதும், நிறுத்து’ என்று சற்று கோபத்துடன் ஜமுனா கூறி அவனை தடுத்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

‘நாம் வாங்கிய பொருளுக்கு மூன்று மாதம் கழித்து பணம் தருவது வியாபார வழக்கம்தானே?’ என்றாள் ஜமுனா.

‘ஆமாம்’ என்றேன்.

‘அப்படியானால் என் பெயரில் யந்திரத்தை வாங்குவோம். அம்மா அரசாங்க மானியம் வாங்கும் பள்ளிக்கூடத்தில் வேலை பார்க்கிறார். அதனால் அவரை ஜாமீன் கையெழுத்து போட சொல்லிக் கேட்கலாம்’ என்றாள் ஜமுனா.

‘நாம் கேட்டால் அத்தை நிச்சயம் செய்வார். ஆனால் நாம் கேட்பது சரிதானா என்று தெரியவில்லை’ என்றேன்.

சுந்தரம் ஜமுனாவைப் பார்த்தான்.

‘அக்கா, இந்த செலவு தேவைதானா? நாம் போடும் எந்த செலவு திட்டத்தையும் விட அதிகமாகத்தான் செலவாகும் என்று மர்பி லா சொல்கிறது’ என்றான் சுந்தரம்.

‘போடா, நாம் போடும் எந்த வரவு திட்டத்தையும் விட அதிகமாகத்தான் வரவு வரும் என்று ஜமுனா லா சொல்கிறது’ என்றாள் ஜமுனா.

பின் என்னிடம் ‘என்னங்க, நாம் எந்த ஆர்டரையும் வேண்டாம் என்று சொல்லும் நிலையில் இல்லை. ஒரு பீஸ் எண்ணூறு ரூபாய்க்கு விற்கப் போகிறோம். மாதம் ஒன்றரை லட்சம் வரும். முருகவேளுக்கு ஒரு லட்சம் வரும். முதல் மாதத்தில் கொஞ்சம் குறைவாக வரும் என்றாலும் இரண்டாம் மாதமே முழுத் தொகையையும் கொடுத்து விடமுடியும். நான் சொல்வது சரிதானே?’ என்றாள்.

‘ஆமாம். மூன்று லட்சம் விலையுள்ள யந்திரம் மாதம் கிட்டத்தட்ட மூன்று லட்சம் சம்பாதிக்கும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது’ என்றேன்.

‘முப்பதாயிரம் ரூபாய் கம்ப்யூட்டரில் சாப்ட்வேர் எழுதி மாதம் மூன்று லட்சம் சம்பாதிக்கிறார்களே! மனிதனின் ஆர்வம், அது தரும் தெம்புதான் சம்பாதிக்கிறது! யந்திரமல்ல. நம் சக்திதான் எதையும் முதலில் நிர்ணயம் செய்கிறது, அதற்கு அடுத்தபடியாகத்தான் கருவி வருகிறது’ என்றாள் ஜமுனா.

‘அக்கா பெயரில் கடன் வாங்க வேண்டாம். என் பெயரில் வாங்குவோம். உங்களுக்கு சங்கடம் இருக்காது. ஆனால், அம்மா வாங்கும் சம்பளத்திற்கு அவர் கியாரண்டி செல்லுமா?’ என்றான் சுந்தரம்.

‘தினகரன் மூலம் வாங்கிய கடனில் சம்பளம் தந்தது போக மீதி இருக்கிறதே. அம்மாவின் ஜாமீன் கையெழுத்து செல்லாது என்றால், அதை முன்பணமாக கட்டி யந்திரம் வாங்குவோம். மூன்று மாதங்களில் மீதி தொகையை தந்து விடுவோம்’ என்றாள் ஜமுனா.

‘அது சம்பளத்திற்காக வைத்திருக்கும் பணம். தொடக்கூடாது என்றாயே?’ என்றான் சுந்தரம்.

‘யந்திரம் வாங்கினால் வருமானம் வருமே? அதை வைத்து சம்பளம் கொடுக்கலாம்’ என்றாள் ஜமுனா.

‘நீதான் சட்டம் போடுகிறாய். நீயே மீறுகிறாய்’ என்றான் சுந்தரம்.

‘என்னடா இது! சட்டம் போடுகிறவளுக்கு அதை மீறும் உரிமை கிடையாதா? சின்ன சட்டத்தை மீறினால்தான் பெரிய சட்டத்தை பின்பற்ற முடியும்’ என்றாள் ஜமுனா.

‘யார் சட்டத்தை மீறலாம் என்பதற்கும் சட்டம் வைத்திருப்பாயே! சட்டம் போடுபவரின் திறமை விதிவிலக்கை உருவாக்குவதில்தான் இருக்கிறது’ என்றான் சுந்தரம்.

‘ஜமுனா பாயும் நதி. தேங்கி நிற்கும் குளமோ, குட்டையோ அல்ல’ என்றேன்.

‘நான் குட்டை. அக்கா  நதியாக  என்ன, கடலாகவே இருக்கட்டும். நீங்கள் யாரத்தான்?’ என்றான் சுந்தரம்.

‘சிந்திக்க வேண்டிய கவித்துவம் நிறைந்த விஷயம்’ என்றேன்.

‘வரப் போவதாக  நினைக்கும் பணத்தை விட, கையில் இருக்கும் பணம்தான் பாதுகாப்பு’ என்ரு முணுமுணுத்துக் கொண்டு கம்பனிக்கு சென்றான் சுந்தரம்.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms