30. மயக்கும் மோகினி - மீன்கொடி

நாங்கள் சூளைமேடு வீட்டிற்கு வந்தபின், வீட்டை தினமும் சுத்தம் செய்யும் மல்லிகா முழு நேர வீட்டு வேலையாளாக மாறிவிட்டாள். நாங்கள் ஆங்கில செய்தித்தாள் மட்டுமே வாங்கினோம். தமிழ் செய்தித்தாளாக  மல்லிகா இருந்தாள்.

தரையை துணியால் துடைத்தபடி ‘அக்கா, கனப்பாக்கம் மயானத்தில் பேய் நடமாட்டம் இருக்கிறது’ என்றாள் மல்லிகா.

உள்ளறையில் உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருந்த என்னை ‘கனப்பாக்கம், மயானம்’ என்ற சொற்கள் மல்லிகா சொல்லப் போவதை கவனிக்கத் தூண்டின.

‘உனக்கெப்படி தெரியும்?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘நம்பத்தக்க செய்தி அக்கா. என் நாத்தனாரின் ஓரகத்திக்கு தெரிந்தவரின் உறவினர் கேள்விப்பட்டது. கேட்கவே பயமாக இருக்கிறது’ என்றாள் மல்லிகா. அவள் அம்மா வீடு கனப்பாக்கத்தில் இருந்ததால் அடிக்கடி அங்கு போய் வருவாள்.

‘எனக்கு பேய் பயம் எதுவுமில்லை. மனுஷ சுபாவத்தை பற்றி கூட நான் பயப்படுவதில்லை’ என்றாள் ஜமுனா.

‘போன வாரம் ஒரு காலேஜ் பையன் யாரோ சொந்தக்காரர் காரியத்திற்காக கனப்பாக்கம் மயானத்திற்கு போயிருக்கிறான். அங்கே மரத்தடியில் நிற்கும்போது மயக்கம் வந்திருக்கிறது. அன்றிரவு ஹாஸ்டலில் தூங்கும்போது அறைக்கதவை தட்டும் சத்தம் கேட்டிருக்கிறது. கதவைத் திறந்தால் அழகான பெண், கல்யாணப் பெண் போல அலங்காரம் பண்ணிக் கொண்டு நிற்கிறாள். தலையில் சரம்சரமாய் மல்லிகைப்பூ. உன் மேல் எனக்கு ஆசை என்று கொஞ்சலாக சொல்லியிருக்கிறாள். பையனும் புத்தி கெட்டு போய் அவளை உள்ளே வா என்று சொல்லவும், சலங்கை சத்தத்தோடு உள்ளே வந்திருக்கிறாள்’ என்றாள் மல்லிகா.

‘பேய்களுக்கு கால் இல்லை என்கிறார்களே’ என்றாள் ஜமுனா.

‘நான் என்ன கண்டேன்!’ என்றாள் மல்லிகா.

‘கதவை தட்டிவிட்டுத்தான் பேய் வருமா?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘உங்களுக்கு தெரியாதா அக்கா? நாம் உள்ளே வா என்று கூப்பிடாவிட்டால் பேயால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. மேலே கேளுங்கள். பையனுடைய நல்ல நேரம். காலில் செருப்பும் கழுத்தில் அவன் அம்மா கொடுத்த மந்திர தாயத்தும் இருந்திருக்கிறது. பெண் இவனை கட்டி பிடித்ததும், தாயத்து அவளை சுட்டிருக்கிறது. ஆந்தை மாதிரி அலறிக் கொண்டு, வௌவால் மாதிரி ஜன்னல் வழியே பறந்து போய்விட்டாள். பையன் மயக்கம் போட்டு விழுந்துவிட்டான். உயிர் பிழைத்தது அவன் அம்மா செய்த புண்ணியம். நான் அந்தப் பக்கம் அடிக்கடி போகிறவள். என்னை நினைத்தால் கவலையாக இருக்கிறது’ என்றாள் மல்லிகா.

‘பையன் எந்த காலேஜ்?’ என்று கேட்டாள் ஜமுனா. கல்லூரி பெயரை சொன்னாள் மல்லிகா.

அவள் போனபின் ஜமுனா அந்த கல்லூரி விடுதி எண்ணை கண்டுபிடித்து போன் செய்தாள்.

‘விசாரிக்காமலே இது புரளி என்பது புரியாதா?’ என்று கேட்டேன்.

‘பொறுங்கள் நாதா’ என்று கூறிவிட்டு போனில் பேசினாள் ஜமுனா.

பின் என்னிடம் ‘அந்த பையன் போக்கிரியாம். இரவு நேரத்தில் ஒரு பெண்ணை அறைக்கு கூட்டி வந்திருக்கிறான் என்று வார்டனுக்கு புகார் போயிருக்கிறது. விசாரித்த போது இந்த கதையை சொன்னானாம். வார்டன் அவனை ஹாஸ்டலை விட்டு வெளியே அனுப்பி விட்டார். ஆனால், கனப்பாக்கம் மயானத்திற்கு ஆண்கள் யார் போனாலும் அழகான மோகினி பின்னால் வருகிறது என்று ஒரு வாரமாக நிறைய கதைகள் உருவாகி விட்டனவாம்’ என்றாள் ஜமுனா.

‘அங்கே போய் என்ன நடக்கிறது என்று விசாரித்துவிட்டு வரவா?’ என்றேன்.

‘ஆசை, ஆசை! எந்த மோகினியையும் உங்கள் பக்கத்தில் வர விடமாட்டேன்’ என்ற ஜமுனா ‘உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது கனப்பாக்கம் நிலத்தை பார்த்துவிட்டு வருவோமா?’ என்று கேட்டாள்.

‘மயானத்திற்கு உள்ளே இருக்கும் நிலம் என்பதால் அதற்கு ஒரு மதிப்பும் இல்லை. இந்த புரளிகள் பிரபலமானால் இலவசமாக கொடுத்தால் கூட யாரும் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். இதை போய் பார்க்க வேண்டுமா?’ என்றேன்.

‘நம் நிலம். நாம் போய் பார்க்கத்தான் வேண்டும்’ என்றாள் ஜமுனா.

‘ஆகட்டும். நீ கூட வந்தால் நரகத்திற்கும் சந்தோஷமாக போவேன்’ என்றேன்.

மறுநாளே நானும், ஜமுனாவும் நிலத்தைப் பார்க்கப் போனோம். மயானம் வழியாகத்தான் எங்கள் நிலத்திற்கு போகவேண்டும். போகும் வழியில் நடுமயானத்தில் ‘புதுமைப்பித்தன் காஞ்சனை என்றொரு பேய்க்கதை எழுதினார். ‘உங்களுக்கு பேய் நம்பிக்கை இருக்கிறதா?’ என்று கேட்டபோது ‘நம்பிக்கை இல்லை. ஆனால் பயமாக இருக்கிறது’ என்று பதில் சொன்னாராம்’ என்று கூறி வாய்விட்டு சந்தோஷமாக சிரித்தாள் ஜமுனா.

‘இது மயானம். சிரிக்காதே. உன்னை மோகினி என்று நினைத்து விடப் போகிறார்கள்’ என்றேன்.

‘நான் உங்களை பிடித்துக் கொண்டுவிட்ட மோகினிதான்’ என்று கூறிவிட்டு மீண்டும் சிரித்தாள் ஜமுனா. ‘என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை’ என்றாள்.

அவள் கையோடு என் கையை கோர்த்துக் கொண்டேன். ‘நீ உயிரை எடுக்கும் பேயல்ல. உயிரை கொடுக்கும் தாய்’ என்றேன்.

புன்னகைத்தாள் ஜமுனா.

இதற்கு முன்பும் இந்த வழியில் நடந்திருக்கிறேன். பதற்றத்துடன் அவசரமாக கடந்து சென்று விடுவேன். இன்று ஜமுனாவின் கையைப் பற்றிக் கொண்டு நிதானமாக நடக்கும்போது மயானம் மனதிற்கு இனிமை தரும் ரம்யமான பூங்கா போலிருந்தது.

எங்கள் நிலம் மாறுதல்கள் எதுவுமில்லாமல் அப்படியேதான் இருந்தது. ஜமுனா நிலத்தை சுற்றி நடந்தாள். பாதி சுற்றியதும் நான் உட்கார்ந்து கொண்டு விட்டேன். ஜமுனா புதிதாகப் பார்ப்பவள் போல எல்லாவற்றையும் ரசித்துக் கொண்டிருந்தாள்.

திரும்பும்போது ‘போனமுறை வந்த போது மயானத்தில் நிறைய மனித நடமாட்டம் இருந்தது. இப்போது வெறிச்சோடிவிட்டது’ என்றாள் ஜமுனா.

அப்போதுதான் அதை கவனித்தேன். ‘எல்லோருக்கும் மோகினி பயம்தான்’ என்றேன்.

‘பயத்தை விடாவிட்டால் மனுஷனுக்கும், மிருகத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்?’ என்றாள் ஜமுனா.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms