31. மென்பொருள் செய்வோம் - மீன்கொடி

சுந்தரம் பரபரப்புடன் வீட்டிற்குள் நுழைந்தான்.

‘அத்தான், அத்தான்’ என்று கூவினான்.

ஜமுனா காய்கறிக் கடைக்குப் போயிருந்தாள். நான் அப்போதுதான் குளியலறைக்குள் நுழைந்து கொண்டிருந்தேன்.

‘பிரான்சிலிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது’ என்று கூவினான் சுந்தரம்.

‘மேஜை மீது வைத்துவிட்டு போ. நான் குளித்துவிட்டுப் பார்க்கிறேன்’ என்றேன்.

குளிக்கும்போது ஒரு கவிதை மனதில் தோன்றியது. அழகான வரிகளை பேரிலக்கியத்திலிருந்து எடுத்துக் கூறினால் ‘சொந்தமாக ஏதாவது சொல்லுங்கள், அப்போதுதான் வெட்கப்படுவேன்’ என்று அடம் பிடிக்கிறாள் ஜமுனா. இன்றுதான் நல்லதாக ஒரு கவிதை தோன்றியிருக்கிறது. இதற்கு அவள் என்ன சொல்வாள்? கடிதத்தை மறந்து விட்டேன். என் மனதில் உருவானவற்றை குளியலறையிலிருந்து வெளியே வந்ததும் ஒரு தாளில் குறித்துக் கொள்ளத் தொடங்கினேன்.

ஜமுனா திரும்பி வந்த பின்னும் மீண்டும், மீண்டும் கவிதையை செப்பனிட்டுக் கொண்டிருந்தேன். சில வரிகள்தான். அவற்றை பல நூறு முறை மனதில் மாற்றி மாற்றி எழுதிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒரு மணி நேரம் கழித்து வந்த சுந்தரம் ‘அத்தான், கடிதத்தைப் படித்தீர்களா?’ என்று கேட்டான்.

‘என்ன கடிதம்?’ என்றேன்.

‘அக்கா, நீயாவது வாசித்தாயா?’ என்று கேட்டான் சுந்தரம்.

‘என்ன கடிதம்?’ என்றாள் ஜமுனா.

‘எவ்வளவு முக்கியமான கடிதம்! இரண்டும் பேரும் இப்படி இருக்கிறீர்களே! ஏழு லட்சம் உடனே கமிஷனாக சம்பாதிக்கக் கூடிய விஷயம் அதில் இருந்தது’ என்றான் சுந்தரம்.

‘யாரிடமிருந்து வந்த கடிதம்?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘பிரான்சிலிருக்கும் கம்பனியிலிருந்து வந்தது. தாத்தா இருக்கும்போது முன்பு நம்மோடு வியாபாரம் செய்த கம்பனிதான். அந்த கம்பனி விற்கும் ஆய்வுகூட யந்திரத்திற்கு சாப்ட்வேர் வேண்டுமாம். நம்மூரில் சாப்ட்வேர் கம்பனிகள் குறைந்த விலைக்கு நன்றாக எழுதி தருவார்கள் என்று கேள்விப்பட்டதால் அதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டிருக்கிறார்கள். அவர்கள் பட்ஜெட் எழுபது லட்சம். இன்போசிஸ் அல்லது டிசியெஸ் போன்ற பெரிய சாப்ட்வேர் கம்பனிகளிடம் பேசிப் பார்க்கலாம். அவர்களுக்கு இது சிறிய திட்டம். முடியாது என்றால் இதை செய்ய இங்கே வேறு ஆயிரம் கம்பனிகள் இருக்கின்றன’ என்றான் சுந்தரம்.

‘போய் பேசுவதற்கு மட்டுமா அவ்வளவு பணம் தருகிறார்கள்? வேறு ஏதாவது செய்ய வேண்டியிருக்குமா? நம்மை ஏன் கேட்கிறார்கள்?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘சில வருஷங்களுக்கு முன்னால் இந்த பிரெஞ்சு கம்பனியின் யந்திரங்களை நாம்தான் விற்றுக் கொண்டிருந்தோம். நம் இஞ்சினியர்கள்தான் பழுது பார்ப்பார்கள். சாப்ட்வேர் எழுதும் கம்பனிக்கு நம் இஞ்சினியர்களில் இரண்டு பேர் தினமும் சென்று சாப்ட்வேர் தயாராகும் வரை கூடவே இருந்து யந்திரம் பற்றி அணுஅணுவாக விளக்க வேண்டும். அதுதான் நமக்கான முக்கிய செலவு’ என்றான் சுந்தரம்.

‘நம் இஞ்சினியர்கள் இல்லாவிட்டால் எழுத முடியாதா?’ என்றாள் ஜமுனா.

‘அதெப்படி முடியும்? இது மிகவும் சிக்கலான சாப்ட்வேர். புரோகிராம் எழுத எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இந்த யந்திரத்தை பற்றி இந்தியாவில் நமக்கு மட்டும்தான் தெரியும்’ என்றான் சுந்தரம்.

‘கடிதத்தைக் காட்டு‘ என்றாள் ஜமுனா.

‘இங்கேதானே வைத்தேன்?’ என்று மேஜையில் சிறிது நேரம் தேடிவிட்டு, தரையில் குப்புறப் படுத்து மேஜை, நாற்காலிகளுக்கு அடியிலும் தேடினான். எங்கும் கிடைக்காமல் என்னைப் பார்த்தவன் திடுக்கிட்டான்.

‘அத்தான், உங்கள் கையில் இருப்பது நான் தந்த கடிதம் போலிருக்கிறதே’ என்றான் சுந்தரம்.

‘இல்லையே, இது என் கவிதை’ என்று கூறிக் கொண்டே காகிதத்தை திருப்பிப் பார்த்தேன். அது கடிதம்தான். எனக்கு சங்கடமாக இருந்தது.

‘ஜமுனா, நான் கவனமில்லாமல் நடந்து கொண்டு விட்டேன். முக்கியமான காகிதத்தில் என் கவிதையை எழுதிவிட்டேன்’ என்றேன்.

‘நீங்கள் எழுதியதால்தான் அந்த காகிதத்திற்கே முக்கியத்துவம் வந்தது’ என்றாள் ஜமுனா.

கடிதத்தை ஜமுனாவிடம் நீட்டினேன்.

‘நீங்கள் வாசித்தீர்களா?’ என்றான் சுந்தரம்.

‘கவிதை எழுதியவனே நான்தானே?’ என்றேன்.

‘நான் கடிதத்தைப் பற்றி கேட்டேன்’ என்றான் சுந்தரம்.

கடிதத்தை சில முறை வாசித்தபின் ‘நாமே இந்த சாப்ட்வேரை எழுதினால் என்ன?’ என்றாள் ஜமுனா.

‘அதெப்படி முடியும்?’ என்று கேட்டான் சுந்தரம்.

‘புரோகிராம் எழுதுபவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்வோம். நம் இஞ்சினியர்கள் உதவியோடு அவர்கள் சாப்ட்வேரை எழுதட்டும்’ என்றாள் ஜமுனா.

‘அக்கா, கமிஷன் என்றால் சிக்கலில்லாமல் ஏழு லட்சம் சம்பாதித்து விடலாம்’ என்றான் சுந்தரம்.

‘நாமே எழுதினால், வருஷாவருஷம் அதை புதுப்பித்து எழுத வேண்டியிருக்கும். தொடர்ந்து வருமானம் வரும். கமிஷன் ஒரு தடவை மட்டும்தான் கிடைக்கும். நமக்கு அனுபவம் வந்தால் பிரெஞ்சு கம்பனியைப் போன்ற மற்ற கம்பனிகளுக்கும் சாப்ட்வேர் எழுத வாய்ப்பு கிடைக்கலாம்’ என்றாள் ஜமுனா.

‘இப்படியெல்லாம் பேசுவதற்கு நன்றாகத்தான் இருக்கும். நாமிருக்கும் நிலைமையையும் நினைத்துப் பார்க்க வேண்டும். கமிஷன் என்றால் உடனே கிடைத்துவிடும். பல உடனடி பிரச்சினைகளை சமாளித்து விடலாம்’ என்றான் சுந்தரம்.

‘நாமே இந்த சாப்ட்வேர் எழுத எவ்வளவு செலவாகும்?’ என்று கேட்டாள் ஜமுனா. சுந்தரத்தின் மறுப்பு அவள் காதில் விழுந்ததா என்றே தெரியவில்லை.

ஒரு காகிதத்தை எடுத்து கணக்கு போட்டான் சுந்தரம். ‘உன் தம்பிதானே நான்? ஏற்கனவே விசாரித்து விட்டேன். சாப்ட்வேர் எழுத குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும். சாப்ட்வேர் எழுதும் ஐந்து அனுபவசாலிகள் தேவை. ஐந்தாறு நல்ல கம்ப்யூட்டர்கள், உதிரி பொருட்கள் வாங்க வேண்டியிருக்கும். எல்லாம் சேர்த்தால் இருபது லட்சம் தேவைப்படும்.  இருபது லட்சத்திற்கு எங்கே போவது? நம்மிடம் பணமே இல்லையே. என்ன செய்வது அத்தான்?’ என்றான்.

‘அப்பாவிற்காகவும், சித்தப்பாவிற்காகவும் தாத்தா மாதாமாதம் ரெகரிங் டெபாசிட்டில் ஏதோ பணம் போட்டு வந்திருக்கிறார். எவ்வளவு இருக்கிறது என்று ஜமுனாவிற்கு தெரியும்’ என்றேன்.

‘அதை பற்றி நீ இதுவரை சொல்லவேயில்லையே அக்கா? உன் தாலி சங்கிலியை அடகு வைத்ததற்கு பதில் இதை பயன்படுத்தி இருக்கலாமே’ என்றான் சுந்தரம்.

‘பணம் நமக்காக சேர்க்கப்படவில்லை’ என்றாள் ஜமுனா.

‘தாத்தாதான் வெற்று காகிதங்களில் கையெழுத்து போட்டு உனக்கு எல்லா உரிமைகளும் தந்திருக்கிறாரே’ என்றான் சுந்தரம்.

‘எல்லா உரிமைகளையும் தந்திருக்கிறார். அதனால்தான் எந்த உரிமையையும் பயன்படுத்த விரும்பவில்லை’ என்றாள் ஜமுனா.

‘தாத்தா பணத்தை வைத்து சாப்ட்வேர் செய்ய ஆரம்பித்துவிடலாம். லாபம் வந்ததும் இரண்டு மடங்காக திருப்பிக் கொடுத்து விடலாம். பிரச்சினை தீர்ந்தது அக்கா’ என்றான் சுந்தரம்.

‘மொத்த லாபத்தை தருவதாக நீ சொன்னாலும், எனக்கு சொந்தமில்லாத பணத்தை எடுக்க மாட்டேன். பேங்க் கேஷியர் இது போல செய்தால், பேங்க்கிற்கு பணம் வருமா?’  என்றாள் ஜமுனா.

‘பரமேஸ்வரன் பக்தனுக்கு உதவ அவன் நடக்கும் பாதையில் தங்கக் கட்டி போட்டானாம். கண்ணை மூடிக் கொண்டு நடந்தால் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆசை அப்போதுதான் பக்தனுக்கு தோன்றியதாம். தங்கக் கட்டியை பார்க்காமலே கடந்து போய்விட்டானாம். நீயோ கடவுள் தருவது போல தாத்தா தரும் பணத்தை கண்ணை திறந்து பார்த்து விட்டு எடுத்துக் கொள்ள முடியாது என்கிறாய். கண் முன்னிருக்கும் வழியை உதாசீனம் செய்கிறாய்’  என்றான் சுந்தரம்.

‘பணம் வருகிறது என்றால் எந்த கதையையும், தத்துவத்தையும் எப்படி வேண்டுமானாலும் நமக்கு சாதகமாக திரித்து பேசத் தோன்றும்’ என்றாள் ஜமுனா.

‘செயல் முக்கியமில்லை. மனோபாவம்தான் முக்கியம். அக்கா, நாம் தவறு எதுவும் செய்யவில்லை. ஒரு அவசரத்திற்கு இருக்கும் வசதிகளை பயன்படுத்திக் கொள்கிறோம்’ என்றான் சுந்தரம்.

‘தவறு இருப்பதால்தான் சரியா, தவறா என்ற கேள்வி வருகிறது. தவறு எதுவும் செய்யவில்லை என்று உரக்க சொல்லி நம் செயலை நியாயப்படுத்த தோன்றுகிறது’ என்றாள் ஜமுனா.

‘பெருங்குடி வாணிகன் பெரு மடப் பெண்’ என்றேன்

‘சிறுகுடி வாத்தியாரின் சாதாரண மகள்’ என்றாள் ஜமுனா.

‘என்ன பேசிக் கொள்கிறீர்கள்? புரிகிற மாதிரி நல்ல தமிழில் பேசக் கூடாதா?’ என்றான் சுந்தரம்.

‘தமிழை சரியாக கற்றுக் கொள்ளாமல் இளங்கோ அடிகள் கொச்சை தமிழில் எழுதி விட்டார். நாம்தான் அதை சரி செய்ய வேண்டும்!’ என்றாள் ஜமுனா.

‘சுந்தரம், நீ வருத்தப்படாதே. நான் உனக்கு சிலப்பதிகாரம் சொல்லித் தருகிறேன். எங்கள் முதலிரவன்று... ’ என்று ஆரம்பித்தேன்.

‘கடவுளே!’ என்ற ஜமுனா ‘சுந்தரம், பிரெஞ்சு கம்பனிக்கு நம் நிலைமையை சொல்லியே கடிதம் எழுதலாம்’ என்றாள்.

‘கிட்டத்தட்ட திவாலாகி விட்டோம். காப்பாற்றுங்கள் என்று எழுதச் சொல்கிறாயா?’ என்றான் சுந்தரம்.

சிரித்தாள் ஜமுனா. ‘எங்களிடம் சொந்தமாக சிறிய அளவில் சாப்ட்வேர் எழுதும் வசதி உள்ளது. உங்கள் யந்திரம் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் விரும்பினால் நாங்களே எழுதுகிறோம். உங்கள் சாப்ட்வேர் எழுதத் தேவைப்படுபவற்றை ஏற்பாடு செய்ய பணம் தேவைப்படுகிறது. அதை ஏற்பாடு செய்ய சிறிது நாளாகும். காத்திருக்க தயார் என்றால் நாங்களே செய்கிறோம். காத்திருக்க முடியாதென்றால் வேறு கம்பனி ஏற்பாடு செய்கிறோம். இப்படி எழுதிவிடு’ என்றாள்.

‘கடிதமெழுதி உன் கையெழுத்தை போட்டு, நீயே அனுப்பி விடுவதுதானே? நானெதற்கு நடுவில் நந்தி போல? முதல் பார்வைக்கு எளிதானதாகத் தோன்றும் எதுவும் எளிதானதல்ல என்று மர்பி லா சொல்கிறது’ என்றான் சுந்தரம்.

‘முதல் பார்வைக்கு கடினமானதாகத் தோன்றும் எதுவும் கடினமானதல்ல என்று ஜமுனா லா சொல்கிறது. தெரிந்து கொள்’ என்றாள் ஜமுனா.

‘சிறிய அளவில் சாப்ட்வேர் எழுதும் வசதி நம்மிடம் இல்லையே’ என்றேன்.

‘நீங்கள் இல்லையா?’ என்றாள் ஜமுனா.

அப்போதுதான் நான் சாப்ட்வேர் எழுதுபவன் என்ற நினைவு எனக்கும், சுந்தரத்திற்கும் வந்தது.

‘பிரெஞ்சு கம்பனி ‘சரி, காத்திருக்கிறோம்’ என்று சொல்லி விட்டாலும், பணத்திற்கு என்ன செய்வது? பிரச்சினை அப்படியேதானே இருக்கும்? வாக்கு தந்துவிட்டு செய்யாமலிருப்பது அவமானம்’ என்றான் சுந்தரம்.

‘நானாழி முகவும் நாழி’ என்றாள் ஜமுனா.

‘ஒளவையார் ‘நாழி முகவாது நானாழி’ என்றுதானே சொன்னார்?’ என்று கேட்டேன்.

‘வேற்று மொழி பேசுபவன் முன்னால் உங்கள் மொழியில் பேசிக் கொள்வது நல்ல பண்பில்லை. தயவு செய்து அர்த்தம் சொல்லி விட்டு பேசுங்கள்’ என்றான் சுந்தரம்.

‘லிட்டர், கிலோ என்பது போல நாழி என்பது ஒளவையார் காலத்து அளவை. ஒரு நாழி பாத்திரத்தைக் கொண்டு நான்கு நாழி பாத்திர நீரை மொள்ள முடியாது என்று ஒளவையார் சொன்னார். உன் அக்கா ‘நம் கம்பனி நான்கு நாழி பாத்திரம். பிரெஞ்சு கம்பனி சாப்ட்வேர் ஒரு நாழி நீர்தான்’ என்கிறாள்’ என்றேன்.

‘முயல் வலைக்குள் யானைக்கு இடமில்லை. ஆனால் யானை கொட்டிலில், முயலுக்கும் இடமுண்டு. அத்தான், நீங்கள் விளக்கி சொன்ன பிறகு தெளிவாக இருக்கிறது’ என்றான் சுந்தரம்.

‘அதனால்தான் ‘எனக்கு தெரிந்த இலக்கியத்தை உனக்கு சொல்லித் தருகிறேன்’ என்கிறேன். எங்கள் முதலிரவன்று உன் அக்காவிற்கு கொலுசு போட்டுவிட்டபோது என்ன சொன்னேன் தெரியுமா?’ என்றேன்.

‘சுந்தரம், நீ கம்பனிக்கு போடா’ என்றாள் ஜமுனா.

சிரித்துக் கொண்டே கடிதத்துடன் வெளியேறினான் சுந்தரம்.

‘என் கவிதை! என் சொந்த கவிதை போய் விட்டது!’ என்றேன்.

‘போனால் போகிறது. எனக்கு நீங்களே ஒரு கவிதைதான்’ என்றாள் ஜமுனா.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms