32. கணக்கர் பெண் - மீன்கொடி

மாலையில் ஜமுனா பழனியப்பன் சார் வீடு வரை போய் வரலாம் என்று என்னையும், சுந்தரத்தையும் அழைத்தாள்.

‘திருடன் வந்து விட்டு போனானே. அதை சரி செய்ய வேண்டும்’ என்றாள் ஜமுனா.

‘அதற்கு இவர் என்ன செய்ய முடியும்? ஏதாவது கேட்க வேண்டுமென்றால் அவரை வர சொல்வோம். பொதுவாக முதலாளிகள், தொழிலாளிகள் வீட்டிற்கு போவதில்லை’ என்றான் சுந்தரம்.

அதை சொல்லும்போதே அவன் பேச்சை ஜமுனா கேட்கப்போவதில்லை என்பது தெரிந்ததால் ‘சரி, போகலாம்’ என்றான் சுந்தரம்.

எங்கள் வருகையை பழனியப்ப சாரும், அவர் குடும்பத்தினரும் எதிர்பார்க்கவில்லை.

சிறு குடும்பம்தான். மனைவி, மகள்.

‘இன்று நல்ல நாள் போலிருக்கிறது! ஓனர் குடும்பத்தினர் எங்கள் வீட்டிற்கு வருவது இதுதான் முதல் முறை’ என்று மகிழ்ந்தார் பழனியப்பன் மனைவி.

மகளை அறிமுகம் செய்து வைக்கும்போது ‘ஒரே பெண் ராகினி. கல்யாணமாகியும் இவளுக்கு எங்கள் நினைப்புதான். சரி, போய் ஒரு மாதம் இருந்துவிட்டு வா என்று இவள் வீட்டுக்காரர் கொண்டு வந்து விட்டிருக்கிறார்’ என்றார் பழனியப்பன் சார்.

‘அதெல்லாம் இல்லை மேடம். என் கணவர் வீட்டிலிருந்து என்னை திருப்பி அனுப்பி விட்டார்கள். அதற்கு காரணம் அப்பாதான்’ என்றார் பழனியப்ப சாரின் பெண் ராகினி.

‘அப்படியா?’ என்றாள் ஜமுனா.

‘ஆமாம். நிச்சயதார்த்தத்தின் போது கொடுத்த வாக்கை அப்பா காப்பாற்றவில்லை. என்னை வாழாவெட்டி ஆக்கிவிட்டார்’ என்றாள் ராகினி.

‘உன் கல்யாணம் காதல் கல்யாணம் என்று கேள்விப்பட்டேனே’ என்றாள் ஜமுனா.

சிறிது வெட்கப்பட்டாள் ராகினி. ‘ஆமாம் மேடம். காதலை வீட்டில் சொன்னபோது அப்பா ஏற்றுக் கொள்ளவேயில்லை. ‘முதலில் நீ படிப்பை முடிக்க வேண்டும். நம் குடும்பமும் கல்யாண செலவிற்கு தயாராக வேண்டும்’ என்று அப்பா சொன்னார்’ என்றாள்.

‘அது சரிதானே?’ என்றாள் ஜமுனா.

‘ஆனால் எப்படி காத்திருக்க முடியும்? ரகு வீட்டில் அவருக்கு கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்களே? தன் வீட்டில் எங்கள் காதல் விஷயத்தை ரகு சொன்னதும், அவர்கள் முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. ‘போயும், போயும் கணக்குப் பிள்ளை பெண்ணையா காதலிப்பாய்?’ என்று திட்டியிருக்கிறார்கள். என் போட்டோவை பார்த்தபின், அவர்கள் மனம் மாறி இருக்கிறது. ரகுவின் அப்பா ‘முப்பது பவுன் நகை, ஐம்பதாயிரம் ரொக்கம், வீட்டு சாமான்கள் தந்தால் கல்யாணத்தை நடத்தி விடலாம். முழு கல்யாண செலவும் உங்களுடையது’ என்று சொன்னார்’ என்றாள் ராகினி.

‘ரகுவின் அப்பாவை விடு. நீ காதலித்த ரகு என்ன சொன்னார்?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘ரகு என்னிடம் ‘நம் காதல் உண்மையானது. உண்மையான காதல் ஜெயிக்க வேண்டும். அதனால் உன் அப்பாவிடம் சொல்லி என் அப்பா கேட்பவற்றை கொடுக்க ஏற்பாடு செய்’ என்று மனமுருகி சொன்னார்’ என்றாள் ராகினி.

‘நீ என்ன செய்தாய்?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘அப்பாவிடம் ‘அவர்கள் கேட்பதை விட கூட செய்து விடுங்கள். என் வாழ்க்கை நன்றாக இருக்கும்’ என்றேன். அப்போதுதான் என் குடும்பத்தின் அற்பத்தனம் தெரிந்தது. மாப்பிள்ளை வீட்டார் கேட்பதில் பாதி கூட தர வசதி இல்லை என்று பொய்யாக கண்ணீர் விட ஆரம்பித்தார்’ என்றாள் ராகினி.

‘அன்று என்னிடம் நிஜமாகவே வசதி இருக்கவில்லை அம்மா. இன்றும் இல்லை’ என்றார் பழனியப்பன் சார்.

‘அப்புறம் ஏன் வெட்கமில்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்? மேடம், அப்பாவிற்கும், அம்மாவிற்கும் நான் காதலித்து கல்யாணம் செய்து கொண்டதில் பொறாமை. நான் சந்தோஷமாக வாழ்ந்து விடப் போகிறேனே என்ற பயம்’ என்றாள் ராகினி.

‘ரகுவிடம் சொல்லி நீங்களே பதிவு திருமணம் செய்து கொள்வதுதானே?’ என்றான் சுந்தரம்.

‘அதெப்படி? ரகு வீட்டின் மரியாதை என்னாவது?’ என்றாள் ராகினி.

‘எத்தனையோ சிரமப்பட்டு கல்யாணத்தை நடத்தி வைத்தேன். மேடம்’ என்றார் பழனியப்பன் சார்.

‘ரகு வீட்டில் சம்மதம் சொல்லி நிச்சயம் செய்த பிறகு கல்யாணம் நடத்த ஒரு வருஷமாயிற்று’ என்றாள் ராகினி.

‘என்ன செய்வது! பணம் சேர்க்க அத்தனை நாளாயிற்று’ என்றார் பழனியப்பன் சார்.

‘கல்யாணம் முடிந்து ஒரு வாரம் கழித்து ரகுவிற்கு சொந்தமாக கார் வாங்கலாமா என்ற யோசனை வந்தது. நகைகளை யதேச்சையாக எடை போட்டுப் பார்த்தார். அப்போதுதான் என் அப்பாவின் மோசடி வேலை தெரிந்தது. மூன்று பவுன் குறைவாக இருந்தது. உடனே என்னை இங்கே கொண்டு வந்து விட்டு விட்டார். நகை இருந்தால்தான் என்னால் என் வீட்டிற்கு திரும்ப போக முடியும்’ என்றாள் ராகினி.

‘மேடம், சம்பளம் வரவில்லை. இவள் கல்யாணத்திற்கு வாங்கிய கடனையும், அதற்கான வட்டியும் கட்ட வேண்டும். வாடகை, மளிகை கடை, என்று எல்லா இடங்களிலும் பாக்கி நிற்கிறது. கடன் வாங்க நினைத்தாலும் கொடுப்பதற்கு ஆளில்லை. இந்த மாதம் நீங்கள் சம்பளம் கொடுத்ததால்தான் கடன் வாங்காமல் சாப்பிடுகிறோம்’ என்றார் பழனியப்பன் சார்.

‘ஏன் சாப்பிட வேண்டும்? ரோஷக்காரர் என்றால் அந்த பணத்தில் எனக்கு நகை போட்டு விட்டு பட்டினி கிடக்க வேண்டும்’ என்றாள் ராகினி.

‘பெண் இப்படித்தான் பெற்றவர்களிடம் பேசுவார்களா?’ என்றார் பழனியப்பரின் மனைவி.

‘நான் ரகு வீட்டுப் பெண்’ என்றாள் ராகினி.

‘அப்புறம் ஏன் எங்களிடம் நகை கேட்கிறாய்?’ என்றார் பழனியப்பரின் மனைவி.

‘அது உங்கள் கடமை. மானஸ்தர்கள் என்றால் கொடுத்த வார்த்தையை மீறக் கூடாது. பெண்ணை வாழாவெட்டியாக வைத்திருக்கக் கூடாது’ என்றாள் ராகினி.

‘கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளம்மா’ என்றார் பழனியப்பன் சார்.

‘எத்தனை நாள் பொறுப்பது? கிழவியான பிறகு புகுந்த வீட்டிற்கு அனுப்பப் போகிறீர்களா?’ என்றாள் ராகினி.

‘நாங்கள் கிளம்புகிறோம்’ என்றாள் ஜமுனா.

வழியனுப்ப வெளியே வந்த பழனியப்பன் சாரிடம் பணக்கட்டு ஒன்றை தந்தாள். ‘உங்கள் பெண்ணை பற்றி கேள்விப்பட்டேன். பணம் கொடுக்க வந்தேன். மூன்று பவுன் வாங்க இது போதும். தனிப்பட்ட முறையில் நான் தரும் பணம். சம்பளம் சரியாக வந்து, உங்கள் நிலைமை சீரானபின் திருப்பி கொடுங்கள்’ என்றாள் ஜமுனா.

சிறிது நேரம் தலைகுனிந்து நின்ற பழனியப்பன் சார் ‘இந்த உதவியை மறக்க மாட்டேன். ஏழு ஜென்மத்திற்கு நினைவில் வைத்திருப்பேன். மேடம், உங்களை என் பெண் போல என்றும் நினைத்துக் கொள்வேன்’ என்றார்.

திரும்பி வரும் வழியில் ‘நீ செய்வது எதுவும் சரியில்லை அக்கா’ என்று புலம்பிக் கொண்டே வந்தான் சுந்தரம். ‘எவருக்கு எதை தருவது என்று பார்த்துதான் தர வேண்டும். பாகுபாடு இல்லாமல் தரக் கூடாது என்று உனக்கு தெரியாதா?’ என்றான்.

‘வீட்டுக் குழாயாக இருந்தால் அப்படித்தான் நீரை பார்த்து தர வேண்டும். மழை தரும் வானமாக மாற நினைத்தால் எப்படி பாகுபாடு பார்ப்பது?’ என்றாள் ஜமுனா.

‘கொடுத்தால் நமக்கு கெடுதல் வருமக்கா’ என்றான் சுந்தரம்.

‘வாங்கும் நிலையில் இருப்பவரைப் பார்த்தா பயப்படுவது? நம்மிடம் வாங்குபவரிடம் தோற்குமளவிற்கு நாம் பலவீனமானவர்களா என்ன!’ என்றாள் ஜமுனா.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms