33. தானாக வந்த முன்பணம் - மீன்கொடி

நானும் ஜமுனாவும் வீட்டிற்குள் நுழைந்தோம். சுந்தரம் கம்பனிக்குள் சென்றான். ஓரிரு நிமிடங்களில் சுந்தரம் கம்பனியிலிருந்து வீட்டிற்கு கிட்டத்தட்ட ஓடியே வந்தான். கையில் ஒரு கடிதம். ‘அத்தான், பிரஞ்சு கம்பனிகாரன் சரி என்று சொல்லி விட்டான்’ என்றான்.

‘அடுத்து சாப்ட்வேர் செய்ய தேவைப்படும் பணம் வரும் வழியை கண்டுபிடிக்க வேண்டுமா?’ என்றேன்.

‘முன்பணம் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறான்’ என்ற சுந்தரம் கடிதத்தை ஜமுனாவிடம் நீட்டினான். அதை வாங்கி என்னிடம் தந்தாள் ஜமுனா.

‘நீயே படி’ என்றேன்.

ஜமுனா கடிதத்தை உரக்க வாசித்தாள்.

‘அன்பிற்குரிய திரு.பரமார்த்தன்,

பாரதம் லாப்ஸ், சாப்ட்வேர் எழுதும் திறனும் கொண்டது என்ற செய்தி எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. நமது யந்திரங்கள் மிகவும் சிக்கலானவை. கடுமையான போட்டி சூழலில் விற்கப்படுபவை. அக்காரணங்களால்தான் எங்கள் அலுவலகத்திலேயே நமக்கு வேண்டிய சாப்ட்வேரை எழுத முயன்றோம். ஆனால். நாங்கள் நினைத்தது போல கம்ப்யூட்டர் பொறியாளர்கள் அமையவில்லை. அதனால்தான் குறைந்த செலவில் இந்தியாவில் செய்ய இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட கணத்தில் முடிவெடுத்து உங்கள் உதவியை நாடினோம். நமது யந்திரங்கள் பற்றி நாங்கள் அறிந்ததைவிட பாரதம் லாப்ஸ் பொறியாளர்கள் அதிகமாக அறிவார்கள். எனவே நீங்களே இந்த யந்திரம் மட்டுமின்றி, பிற யந்திரங்கள் அனைத்திற்கும் நீங்களே சாப்ட்வேர் எழுத வேண்டும் என்று விரும்புகிறோம்.

சாப்ட்வேர் எழுத நல்ல நிபுணர்களை நியமிக்க வேண்டும் என்பதையும், அதற்கு கணிசமான முதலீடு தேவை என்பதையும் அனுபவபூர்வமாக அறிந்துள்ளோம். வேலையை துரிதமாக நீங்கள் துவக்க வேண்டும் என்பதற்காக முப்பது லட்சத்தை முன்பணமாக அனுப்புகிறோம். கடந்த ஒரு வருடமாக உங்களோடு வியாபார உறவு இல்லையென்றாலும், நம் உறவுக்கு முதிய வயதாகிறது. எனவே, முன்பணம் அனுப்புவதில் தயக்கமோ, அச்சமோ எங்களுக்கில்லை. இரண்டு நாட்களுக்குள் உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் வந்து விடும்.

அன்புடன்,
பிலிப் மேயேர்‘

‘அத்தான், இனிமேல் நேரத்தை வீணாக்காமல் செயல்படவேண்டும்’ என்றான் சுந்தரம்.

‘பிரஞ்சுகாரன் என்று நீ சொன்னதும் பிரஞ்சு கவிஞர் ஆர்தர் ரிம்பாட் நினைவிற்கு வந்தார். குறியீடுகளால் கவிதை எழுதுவார்’ என்றேன்.

‘அக்கா, நீயே அத்தானிடம் பேசிக் கொள்’ என்று கூறி, கடிதத்தை வாங்கிக் கொண்டு வெளியேறினான் சுந்தரம்.

‘மேல்நாட்டு இலக்கியம் படிக்க மாட்டேன் என்று நீங்கள் சொன்னதாக ஞாபகம்’ என்றாள் ஜமுனா.

‘நான் படிப்பதில்லை என்பதால் அது நன்றாக இல்லை என்று சொல்ல முடியாதே! ரிம்பாட் கேள்விபட்டிருக்கிறாயா?’ என்று கேட்டேன்.

‘ஏதோ கொஞ்சம்! அவர் பதினாறு வயதில் எழுதிய ‘குடித்த படகு’ கவிதையை படித்திருக்கிறேன். பல வரிகள் சிலிர்க்க வைத்தன. ‘பாதாளப் பாழிருளில் படுத்துறங்கும் பல்கோடி பொற்பறவைகளே! எங்கள் எதிர்கால ஏற்றமே!‘ என்றொரு அழகான வரி. ஒவ்வொரு மனிதனின் ஆழத்திலும் எத்தனையோ பொற்பறவைகள், வித்துகள், வெளிப்படாமல் உறங்கும்போது. எதிர்கால ஏற்றத்தை பற்றி மனிதன் ஏன் பயப்பட வேண்டும்? உள்ளே உறங்கும் பொற்பறவைகளை விழிக்க வைத்தால் போதுமே’ என்றாள் ஜமுனா.

‘நீ சொல்லும் அர்த்தத்திலா ரிம்பாட் எழுதினார்?’ என்று கேட்டேன்.

‘அவர் என்ன வேண்டுமானாலும் நினைத்து எழுதி கொள்ளட்டும். அவரவர் சுபாவத்திற்கு, நிலைக்கு, அறிவிற்கு ஏற்றபடி வாசிப்பது அனுபவம் தருகிறது. ஆன்மீக அனுபவமும், இலக்கிய அனுபவமும் எல்லாருக்கும் ஒன்று போல் இருப்பதில்லை. எனக்கு எதைப் பார்த்தாலும், கேட்டாலும் அது ஆன்மீக அனுபவமாக படுகிறது. இன்னொன்றை சொல்கிறேன்’ என்று கூறிவிட்டு ஜமுனா சிறிது யோசித்தாள்.

‘என்ன தயக்கம்?’ என்று கேட்டேன்.

‘எதையும் உங்களிடம் சொல்ல எனக்கேது தயக்கமும், வெட்கமும்? எந்த ஆன்மீக புத்தகத்தை புரட்டும்போதும் நான் தெரிந்து கொள்வது ஒன்றே ஒன்றைத்தான். எனக்கு ஏற்கனவே தானாகவே தெரிந்தவற்றை பற்றி மற்றவர்களும் ஓரளவிற்கு அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை மட்டும்தான் புத்தகங்களை வாசிக்கும்போது புரிந்து கொள்கிறேன்’ என்றாள் ஜமுனா.

ஜமுனா சொன்ன ‘குடித்த படகு’ கவிதையை நானும் வாசித்திருக்கிறேன். கடலில் போகும் ஆளற்ற படகொன்றில் ஓட்டை விழுந்து நீர் புகுந்து விடுகிறது. நீர் புகுந்ததை படகு குடித்ததாக உருவகம் செய்கிறார். எதுவுமின்றி ஓட்டைகளோடு எங்கெங்கோ அலைந்து, பல அனுபவங்கள் பெற்று, இறுதியில் நீரில் மூழ்கி கடலோடு ஒன்றாகி விட படகு முனைகிறது.

‘ஜவுளி அண்ணியிடம் இந்த கவிதை பற்றி சொன்னேன். ‘திருக்குறள் மாதிரி நல்ல செய்யுள். குடிகாரன் குடும்பம் குடி முழுகி விடும் என்று உன் சித்தப்பா போன்றவர்களுக்கு அழகாக சொல்கிறார்’ என்று சொல்லி மகிழ்ந்து போனார்’ என்றேன்.

புன்னகைத்தாள் ஜமுனா.  ‘அது பற்றி உங்களுக்கு என்ன தோன்றியது?’ என்று கேட்டாள்.

‘முன்பு எதுவும் தோன்றவில்லை. இப்போது தோன்றுகிறது. நான் தனியாக இருந்த படகு. உனக்கு தாலி கட்டியபோது கடல் போல என்னை சூழ்ந்தாய். என் இயலாமைக்குள், செயலின்மைக்குள் உன்னால் ஓட்டை விழுந்தது. உன் அன்பு என்னுள் நுழையத் தொடங்கி விட்டது. உன் வேகம் மிகுந்த அன்பு என்னை செலுத்தும் திசைகளில் எங்கெங்கோ போகிறேன். ஆனால் எதையும் அடையும் ஆசை என்னிடம் இல்லை. உனக்குள் மூழ்கி பிரிக்க முடியாதபடி கரைந்து உன்னோடு ஒன்றாக நினைக்கிறேன்’ என்றேன்.

சற்று நேரத்தில் திரும்பி வந்த சுந்தரம் ‘அக்கா, நான் போய் தினகரனை பார்த்துவிட்டு வருகிறேன். சாப்ட்வேர் எழுதுபவர்களை வேலைக்கு எடுப்பது பற்றியும், இந்த திட்டம் செயல்படுத்துவதை பற்றியும் பேச வேண்டும்’ என்றான்.

‘உன் அத்தானுக்கு சாப்ட்வேர் வேலை தரும் ஒரு பெண் தோழி இருக்கிறாள். அவளையும் கேட்டுப் பார்க்கலாம். என்னங்க, அவளுக்கு நன்றாக தெரிந்த திறமைசாலிகள் இருக்கிறார்களா என்று விசாரியுங்களேன்’ என்றாள் ஜமுனா.

‘சரி’ என்றேன்.

‘நமக்கு வேண்டிய எல்லா மர சாமான்களையும், நாற்காலிகளையும் சென்னை பர்னிச்சர் மார்ட்டில் வாங்கு’ என்றாள் ஜமுனா.

‘அது எங்கே இருக்கிறது? நான் கேள்விப்பட்டதே இல்லையே’ என்றான் சுந்தரம்.

‘எனக்குத் தெரியும். அது மிகவும் சின்ன கடை மேடம். நமக்கு வேண்டியவை அவரிடம் இருக்க வாய்ப்பில்லை’ என்றார் பழனியப்பன் சார்.

‘நாம் எங்கு, எதை வாங்க நினைக்கிறோமோ, அந்த விவரங்களை சென்னை பர்னிச்சர் மார்ட்டில் கொடுங்கள். அவர் வாங்கி தரட்டும்’ என்றாள் ஜமுனா.

‘அவர் ரூபாய்க்கு பத்து பைசாவாவது லாபம் வைப்பார். நாம் நேரடியாக வாங்கினால் பணத்தை மிச்சம் பண்ணலாமே’ என்றான் சுந்தரம்.

‘சரிடா, நான் அந்த அதிகபடியான தொகையை என் கையிலிருந்து கொடுத்து விடுகிறேன். கம்பனிக்கு நஷ்டம் வேண்டாம்’ என்றாள் ஜமுனா.

‘நான் என்ன சொல்கிறேன், நீ என்ன பேசுகிறாய்?’ என்று கோபித்துக் கொண்டான் சுந்தரம்.

அடுத்து வந்த வாரத்தில் புதிதாக கம்ப்யூட்டர்கள் வாங்கப்பட்டன. அவற்றை வைக்க தேவையான எல்லா மர சாமான்களும், சுழல் நாற்காலிகளும் சென்னை பர்னிச்சர் மார்ட் மூலமே வாங்கப்பட்டன. அவருக்கு பெரிய தொகை என்பதால் கடைக்காரர் பணம் வாங்க நேரில் வந்தபோது ‘சௌக்கியமா சார்?’ என்று ஜமுனா கேட்டாள்.

‘செளக்கியம்தான்’ என்ற கடைக்காரர் ‘மேடம் யாரென்று தெரியவில்லையே’ என்று குழம்பினார்.

ஜமுனா புன்னகைத்தாளே தவிர மேற்கொண்டு பேசவில்லை.

என்னிடம் மோட்டார் சைக்கிளுக்கான மொத்த கடனையும் திருப்பி கட்ட சொன்னாள். ‘வண்டியை சுந்தரத்தின் பெயரில் மாற்றி விடுங்கள்’ என்றாள்.

‘ஏனக்கா? அத்தான்தானே வண்டி ஓட்டுகிறார்?’ என்றான் சுந்தரம்.

‘இனி நீ ஒட்டு’ என்றாள் ஜமுனா.

‘அத்தான் எப்படி வெளியே போவார்?’ என்றான் சுந்தரம்.

‘அவர் கார் நன்றாக ஓட்டுவார்’ என்றாள் ஜமுனா.

‘நம்மிடம் கார் இல்லையே’ என்றேன்.

‘அத்தானுக்கு எதையும் விளக்கமாக சொன்னால்தான் புரியும். நீயே சொல்லிக் கொள்’ என்று கூறி சிரித்தான் சுந்தரம்.

அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று புரியவில்லை. என் மனம் அன்று மாலை மயிலாப்பூர் சென்று லட்ச ரூபாய்க்கு சரஸ்வதி வீணை வாங்குவதை பற்றி எண்ணிக் கொண்டிருந்தது. பணத்தை ரொக்கமாக கொண்டு செல்வதா அல்லது காசோலையாக எடுத்து செல்வதா என்று தெரியவில்லை.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms