34. பயங்கரவாதிகள் - மீன்கொடி

உள்ளறையில் துணிகளை மடித்துக் கொண்டிருந்த மல்லிகா ‘உங்களை நினைத்தால் எனக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது அக்கா’ என்றாள்.

‘எப்போதும் உன்னை பற்றி மட்டும்தானே கவலைப்படுவாய்?’ என்றாள் ஜமுனா.

‘அது என்னவோ அக்கா, இந்த வீடு என் வீடு மாதிரி என்ற நினைப்பு வந்து விட்டது. அதனால்தான் கனப்பாக்கத்தில் இருக்கும் நம் நிலத்தை பற்றி நான் கேள்விப்படுவதெல்லாம் கவலையைத் தருகிறது’ என்றாள் மல்லிகா.

‘விஷயத்தை சொல். கவலைப்படுவதா வேண்டாமா என்று அப்புறம் முடிவெடுக்கிறேன்’ என்றாள் ஜமுனா.

‘மயானத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருக்கிறதாம். கத்தி, துப்பாக்கி ஒளித்து வைத்திருக்கிறார்களாம். ஆயுதம் வாங்க போதை மருந்து விற்கிறார்களாம். இளவயதுக்காரர்கள் அந்தப் பக்கம் போனால் பிடித்துக் கொண்டு போய் கட்டாயப்படுத்தி தங்கள் கூட்டத்தில் சேர்த்து சண்டைக்கு அனுப்புகிறார்களாம்’ என்றாள் மல்லிகா.

‘இதை யார் உனக்கு சொன்னது?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘ஊரே பேசுகிறது. உங்களுக்கு மட்டும்தான் இதெல்லாம் தெரிய வருவதில்லை’ என்றாள் மல்லிகா.

‘மோகினி என்ன ஆனாள்?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘இந்த செய்தி வந்தபின் அவளை பற்றி யாரும் பேசுவதில்லை’ என்றாள் மல்லிகா.

வேலையை முடித்துவிட்டு மல்லிகா போன பின் ‘கனப்பாக்கதிற்கு கிளம்பவில்லையா?’ என்று ஜமுனாவிடம் கேட்டேன்.

‘அவசியம் போகத்தான் வேண்டும். இப்போதே கூட போகலாம்’ என்றாள் ஜமுனா.

கனப்பாக்கம் மயானத்தை நெருங்கியபோது மல்லிகா சொன்னது உண்மையாக இருக்குமோ என்று தோன்றியது. மயானத்தின் நுழைவாயிலில் காவல் துறை தடுப்பரண் இருந்தது. இரும்பு தொப்பி போட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர்கள் குவிந்திருந்தனர்.

மோட்டார் சைக்கிளை சற்று தொலைவிலேயே நிறுத்தி விட்டேன். ‘திரும்பிப் போய் விடலாம். பிரச்சினை சரியானபின் வரலாம்’ என்றேன்.

வண்டியிலிருந்து குதித்திறங்கிய ஜமுனா ‘இருங்கள், வந்து விடுகிறேன்’ என்று கூறிவிட்டு அங்கிருந்த போலீஸ் அதிகாரியை நோக்கி நடந்தாள். நான் வண்டியை தள்ளிக் கொண்டு அவள் பின்னோடு போனேன்.

‘சார், மயானத்திற்குள் போக வேண்டும்’ என்றாள் ஜமுனா.

‘சின்ன பெண்ணாக இருக்கிறாய், என்ன அவசரம்? நூறு வயது வாழ்ந்து அனுபவித்த பின் வா. உள்ளே விடுகிறேன்’ என்று வேடிக்கையாக பேசினார் அதிகாரி.

‘எங்கள் நிலம் மயானத்திற்குள் இருக்கிறது. அதை போய் பார்க்க அனுமதி வேண்டும்’ என்று கேட்டாள் ஜமுனா.

‘அந்த நிலம் உங்களுடையதுதானா? இவர் உன் கணவரா? நிலம் வாங்கிய அறிவாளி இவர்தானா?’ என்று கேட்டார் அதிகாரி.

‘என் தாத்தாதான் விசாரிக்காமல் வாங்கி விட்டார்’ என்றேன். ‘உங்களை வீட்டில் வைத்து பேசிக் கொள்கிறேன்’ என்பது போல ஜமுனா என்னை முறைத்தாள்.

அதிகாரியிடம் ‘எனக்கு தெரிந்தவர்கள் ஏதேதோ சொல்கிறார்கள். எங்கள் நிலத்தில் யாராவது ஏதாவது ஆயுதம் ஒளித்து வைத்திருக்கிறார்களா என்று பார்க்க வேண்டுமே’ என்றாள் ஜமுனா.

‘எல்லாம் கட்டுக்கதை. தாராளமாக உள்ளே போய் பார். ஆயுதம் இருக்காது. பூதம் காக்கும் புதையல் கிடைத்தாலும் கிடைக்கும்’ என்று கூறி சிரித்த அதிகாரி துணை அதிகாரியிடம் ‘இந்தாய்யா, இவர்கள் விலாசத்தை வாங்கிக் கொண்டு உள்ளே விடு’ என்றார்.

வண்டியை  வெளியே நிறுத்திவிட்டு மயானத்தின் வழியே உள்ளே நடந்தோம்.

ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்த போது மயானத்திற்கு எதிரே பெரிய கூட்டம் கூடி கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தது. போலீசார் கூட்டத்தை பொருட்படுத்தவில்லை. எனக்குத்தான் பதற்றமாக இருந்தது.

ஒரு போலீஸ் கார் முகப்பின் மீதமர்ந்து இளநீர் அருந்திக் கொண்டிருந்த அதிகாரியைப் பார்த்து ஜமுனா கைகுவித்து நன்றி கூறினாள். அதிகாரி சிரித்துக் கொண்டே கையசைத்தார். இளநீர் வேண்டுமா என்று சைகையால் கேட்டார். வேண்டாம் என்று ஜமுனா சைகையால் பதில் சொன்னாள்.

மோட்டார் சைக்கிளை கிளப்பினேன். கூட்டம் வழியை மறித்துக் கொண்டிருந்தது.

கூட்டம் எழுப்பிய கோஷங்கள் வேடிக்கையாக இருந்தன.

‘கொல்லாதே, கொல்லாதே!
 அப்பாவிகளை கொல்லாதே!’

‘மூடிவிடு, மூடிவிடு!
 மரணம் தரும் மயானத்தை மூடிவிடு!’

‘இந்தக் கூட்டம் போதுமா?
இன்னும் கொஞ்சம் வேண்டுமா?’

‘கோஷமெல்லாம் சந்தத்தோடு நன்றாக இருக்கிறது. இவர்கள் யாரென்று தெரியவில்லையே’ என்றேன்.

அங்கிருந்தவர்களிலேயே பெரிய முரடராகத் தோன்றியவர் அருகே சென்ற ஜமுனா ‘அண்ணே’ என்று அழைத்தாள்.

எங்கள் வண்டியைப் பார்த்த பெரிய முரடர் ‘என்னம்மா வழி வேண்டுமா’ என்று கேட்டுவிட்டு ‘டேய், தங்கச்சிக்கு வழி விடுங்களடா, என்னது? வே ப்ளீஸ்’ என்று கூட்டத்தை பார்த்து பொதுவாகக் கூவினார்.

‘அண்ணே, உங்கள் கையில் ஆளும்கட்சி கொடி இருக்கிறது. ஆனால் ஆளும்கட்சிக்கு எதிராக கோஷம் போடுகிறீர்களே?’ என்று கேட்டாள் ஜமுனா.

பெரிய முரடரும், அவரருகே இருந்த சிறிய முரடர்களும் சிரித்தனர். ‘அண்ணன்தான் செய்ய சொன்னார். பிக் பிரதர்’ என்றார் பெரிய முரடர்.

‘அந்த அண்ணன் யார்?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘பேப்பர்காரர்களாக இருக்கப்போகிறது. எதையாவது எழுதி விடப் போகிறார்கள்’ என்று பெரிய முரடரை எச்சரித்தார் ஒரு சின்ன முரடர்.

‘எனக்கே யோசனை சொல்கிறாயா? போடா’ என்றார் பெரிய முரடர்.

‘அண்ணே, என் பெயர் ஜமுனா. எங்கள் நிலம் மயானத்திற்குள் இருக்கிறது. அதனால்தான் எல்லாவற்றையும் விசாரிக்கிறேன்’ என்றாள் ஜமுனா. கொஞ்சம் கூட பயமே இல்லாமல் இவள் எதற்கு ஊர். பெயர், அடையாளமெல்லாம் இந்த முரடர்களிடம் தருகிறாள்?

‘அப்படியா! நம் ஏரியா பெண்’ என்று தலையை ஆட்டி மகிழ்ந்த பெரிய முரடர் ‘இந்த தொகுதியில் அண்ணன் என்றால் அது அமைச்சர் தமிழடியான்தான், மினிஸ்டர்’ என்றார்.

அப்போது அந்த வழியே நடந்து சென்று கொண்டிருந்த  வெளிநாட்டுக்காரர் ‘என்ன நடக்கிறது இங்கே?’ என்று ஆங்கிலத்தில் கேட்டார். அவரது உச்சரிப்பு முரடர்களுக்கு புரியவில்லை. பெரிய முரடர் ’வாட்? வாட்?’ என்று கேட்டார்.

‘மயானம் மக்களுக்கு தொந்தரவாக இருக்கிறது என்பதால் அதை மூட சொல்லி அரசாங்கத்திடம் கூட்டம் போட்டு சொல்கிறார்கள்’ என்று ஆங்கிலத்தில் பதில் சொன்னாள் ஜமுனா.

‘ஓ!’ என்று கூறிவிட்டு நடந்தார் வெளிநாட்டுக்காரர்.

‘வெளிநாட்டுக்காரன் என்றால் எதற்கெடுத்தாலும் நன்றி சொல்வானே. இவன் நன்றி சொல்லாமல் போகிறானே!’ என்றார் சின்ன முரடன்.

‘நம் நாட்டில் பல காலமாக இருந்து வருகிறானோ என்னவோ!’ என்றார் பெரிய முரடர்.

‘நன்றி அண்ணே’ என்று கூறிவிட்டு ஜமுனா திரும்ப யத்தனித்த போது ‘இந்தா பாப்பா, ஜோராக இங்கிலீஷ் பேசுகிறாயே! கான்வென்ட்டில் படித்தாயா?’ என்று கேட்டார் பெரிய முரடர்.

‘இல்லை அண்ணே. கவர்ன்மென்ட் பள்ளிக்கூடத்தில்தான் படித்தேன்’ என்றாள் ஜமுனா.

பெரிய முரடர் மயானத்தின் எதிரே இருந்த சாராயக் கடையை காட்டினார். ‘அது நம் கடைதான். எப்போதும் அங்கேதான் இருப்பேன். எவனாவது ஏதாவது பிரச்சினை பண்ணினால் லிக்கர் லிங்கப்பன் வீட்டுப் பெண் என்று சொல். என்னது? லிக்கர் லிங்கப்பன் வீட்டுப் பெண்! சலாம் போட்டு ரிவர்ஸ் கியரில் ஓடிவிடுவான்’ என்றார்.

கை குவித்து மீண்டும் நன்றி சொல்லிவிட்டு ஜமுனா வண்டியில் ஏறிக் கொண்டு ‘ரொம்ப நல்ல அண்ணன்’ என்று என்னிடம் பெரிய முரடரைப் பாராட்டினாள். பெரிய முரடர் புன்னகைத்தார். நான் எதுவும் சொல்லவில்லை.

கூட்டம் வழிவிட, நான் வண்டியை நகர்த்தினேன்.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms