35. கணக்கரின் துரோகம் - மீன்கொடி

செய்தித்தாளில் ‘சட்டசபையில் அமளி – கனப்பாக்கம் மயானத்தை மூடக் கோரி எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம்’ என்ற செய்தி வந்திருந்தது.

அன்றொரு நாள் ஆளுங்கட்சிக்காரர்களே ஆளுங்கட்சிக்கு எதிராக கோஷம் போட்டார்கள். அதுவே ஏனென்று இன்னமும் புரியவில்லை. அடுத்த புதிராக இப்போது இந்த செய்தி. ஆளுங்கட்சிக்காரர்கள் எதை செய்தாலும் அதற்கு எதிராகத்தானே எதிர்கட்சிக்காரர்கள் ஏதாவது செய்வார்கள்? ஆனால். மயான விஷயத்தில் எப்படி இரண்டு பேரும் ஒன்றானார்கள்? மயானத்தை மூட வேண்டும் என்று ஆளுங்கட்சிக்காரர்கள் சொன்னால் மூடக்கூடாது என்றுதானே எதிர்கட்சிக்காரர்கள் சொல்ல வேண்டும்? எனக்கு புரியவில்லை.

ஜமுனாவிடம் இந்த செய்தியை சொன்னபோது சிரித்தாள். ‘அடுத்து நடக்க வேண்டியது நடந்துவிட்டது!’ என்று கூறினாள். பின் ‘பத்திரங்களையெல்லாம் போட்டோகாபி எடுத்து வாருங்கள்’ என்று ஜமுனா சொன்னதும் கிளம்பினேன். ‘நானும் வருகிறேன். வாசுதேவய்யாவைப் பார்த்து பல நாட்களாகி விட்டன’ என்று அவளும் கூட வந்தாள்.

‘நமது நகலகம்’ என்ற போட்டோகாபி கடை எங்கள் கம்பெனி இருந்த சாலையின் முனையில் இருந்தது. வயதாகி ஓய்வு பெற்ற பின் வாசுதேவய்யா தாத்தாவிடம் வேலை கேட்ட போது, வேலை தரவில்லை. ‘இங்கே நீர் சொந்தமாக போட்டோகாபி கடை வைத்தால் நன்றாக ஓடும். உம் உடலுக்கு அலைவதோ, வேலைக்கு போவதோ சரி வராது’ என்று கூறிய தாத்தா இடம் பார்த்து கடை வைக்க உதவியும் செய்தார். பல வருடங்களாக நமது நகலகம் நன்றாகவே ஓடிக் கொண்டிருக்கிறது.

வாசுதேவய்யா மிகவும் வருத்தப்பட்டார். ‘எல்லோருமே சந்தர்ப்பவாதிகள். உடன்பிறப்பு என்று கூட பார்க்காமல் பழைய வீட்டையும், மயான நிலத்தையும் கொடுத்து ஏமாற்றி விட்டார்களே? இது அநியாயம். சும்மா விடக்கூடாது’ என்று கூறினார்.

‘எவர் மீதும் எங்களுக்கு வருத்தமில்லை’ என்றாள் ஜமுனா.

‘எல்லோருமே நல்லவர்கள்தான்’ என்றேன்.

‘விவரமில்லாத சின்னப் பையனாக இருக்கிறாயே. காவல்காரனிடமிருந்து ஜனாதிபதி வரை யாரையும் நம்பக் கூடாது. நம் கம்பெனியில் கணக்கனாக இருக்கிறானே பழனியப்பன் அயோக்கியன். அவன் செய்வதெல்லாம் உனக்குத் தெரியுமா தம்பி?’ என்றார் வாசுதேவய்யா.

‘நான் சிறியவனாக இருந்தாலும் அவருக்கு என் மீது மிகவும் மரியாதை, பிரியம்! முக்கிய வேலைகளையெல்லாம் அவர்தான் பார்த்துக் கொள்கிறார். நம்பிக்கையானவர்’ என்றேன்.

‘உருப்பட்டுவிடும்! எதை வைத்து தம்பி அப்படி சொல்கிறது?’ என்றார் வாசுதேவய்யா.

‘ஒரு நாளில் எத்தனை முறை நான் கம்பனிக்கு சென்றாலும் எழுந்து நின்று வணக்கம் சொல்வார். என் முன் உட்கார கூட மாட்டார்’ என்றேன்.

‘தம்பியிடம் பேசி பிரயோசனமில்லை. பாப்பா, முதலில் அவனை வேலையை விட்டு துரத்திவிடு. உங்கள் கம்பனிக்கு வருகிற ஆர்டர்கள், கடிதங்கள் எல்லாவற்றையும் நகலெடுத்து உன் அத்தான்களுக்கு தருகிறான்’ என்றார் வாசுதேவய்யா.

‘நல்லதுதானே? அண்ணார்கள் அனுபவசாலிகள். நாங்கள் தவறு எதுவும் செய்துவிடாமல் இருக்க அவர்களது திறமை உதவுமே’ என்றேன்.

‘உங்கள் அண்ணார்கள் பணத்தை எடுப்பதில் அனுபவசாலிகள். சொந்த கம்பனியில் திருடுவதில் திறமைசாலிகள். நான் உன் தாத்தா போல. அதனால்தான் உரிமையோடு சொல்கிறேன். ஒரு வருஷமாக அவர்களோடு சேர்ந்து பழனியப்பனும் திருடித்தானே அவன் பெண் கல்யாணத்தை நடத்தினான்? தம்பி, உன் அண்ணார்கள் வீட்டு டிரைவர் ரகுதான் பணம் கொடுத்து பழனியப்பனிடமிருந்து நகல்களை வாங்கிப் போகிறான். மாமானாரும். மாப்பிள்ளையும் துரோகிகள். ஒரு பிரதி எடுக்க நேர்மையாக உழைத்து நான் நாற்பது காசுதான் வாங்குகிறேன். இவன் எதுவுமே செய்யாமல் ஒரு பிரதிக்கு இருநூறு ரூபாய் பிடுங்கி விடுகிறான். நானே பொறுக்க முடியாமல் ‘ஏம்பா, உன் பெண் வாழாவெட்டியாக இருந்தாள். ஜமுனாம்மா சீர்வரிசை கொடுத்து புகுந்த வீட்டிற்கு அனுப்பி வாழ வைத்தாரே! நீ இப்படி செய்யலாமா?’ என்று கேட்டேன். அதற்கு என்ன சொன்னான் தெரியுமா?’ என்றார் வாசுதேவய்யா.

‘நானில்லா விட்டால் கம்பனியே ஓடாது. அந்த பயத்தில் கப்பம் கட்டுகிறார்கள் என்று சொல்லியிருப்பார். அவர் பெண்ணுக்காக பணம் கொடுத்த போது ‘இந்த உதவியை மறக்க மாட்டேன். ஏழு ஜென்மத்திற்கு நினைவில் வைத்திருப்பேன். உங்களை என் பெண் போல நினைத்துக் கொள்வேன்’ என்றார். ‘என்னால் முடிந்த கெடுதலை செய்கிறேன்’ என்று நினைப்பதை சுற்றி வளைத்து சொல்கிறார் என்று நினத்துக் கொண்டேன்’ என்றாள் ஜமுனா.

‘ஆமாம் தாயே. உன் முன்னால் நினைத்ததை என்னிடம் வாய்விட்டு சொன்னான். இது உங்கள் வீட்டு விவகாரம். உங்களிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன். இவனோ ‘உன் வேலையை பார். நீ கூடத்தான் காசு வாங்கி கொண்டு எனக்கு நகலெடுத்து தருகிறாய்’ என்று என்னையே குறை சொல்கிறான். நான் செய்வது வியாபாரம். அவன் செய்வது துரோகம். வித்தியாசம் இருக்கிறதா, இல்லையா?’ என்றார் வாசுதேவய்யா.

‘விடுங்கள் சார்’ என்றாள் ஜமுனா.

வீடு திரும்பும் வழியில் ‘பழனியப்பன் சாரை எதுவும் செய்து விடாதே’ என்றேன்.

‘ஏதாவது செய்வதென்றால் முதல் நாளே சம்ஹாரம் செய்திருப்பேனே! நாம் முன்னேற எதுவும், எவரும் உதவ முடியும். கணக்கர் பிரம்மமா, பிசாசா என்பதை நாம்தான் நிர்ணயம் செய்கிறோம். இதில் அவர் செய்யக்கூடியது எதுவுமில்லை. அவர் வெறும் மூங்கில் குழல்தான். ஊதுபவன் கிருஷ்ணனா அல்லது கம்சனா என்பதைப் பொறுத்து இனிய இசையோ, வெற்று ஓசையோ வரும்’ என்றாள் ஜமுனா.

‘அண்ணார்களை கம்சர் என்கிறாயா?’ என்று வருத்தத்துடன் கேட்டேன்.

‘கிருஷ்ணனின் மறுப்பக்கம்தானே கம்சன்!’ என்றாள் ஜமுனா.

‘பழனியப்பன் சாருக்கு நல்லதுதான் செய்தாய். பதிலுக்கு ஏன் கெடுதல் செய்கிறார்?’ என்று கேட்டேன்.

‘என்னைப் போன்ற சிறு பெண் உதவுவது அவருக்கு எத்தனை பெரிய அவமரியாதை! அவர் மனம் எவ்வளவு கூசிப் போயிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். தவிர ‘உன்னை என் பெண் போல நினைத்துக் கொள்வேன்’ என்றாரே! பெண் மீது அவருக்கு எவ்வளவு கோபமோ!’ என்றாள் ஜமுனா.

‘கொடுத்தால் வாங்குபவர் குறுகிப் போகிறார் என்று தெரிந்தும் ஏன் கொடுக்கிறாய்?’ என்று கேட்டேன்.

‘நம் கம்பனி வளர வேண்டாமா? அவர் அனுபவசாலி. பெண்ணைப் பற்றிய கவலை இருந்தால், நம் கம்பனியைப் பற்றி நினைக்க மாட்டார். இப்போது ஒவ்வொரு நிமிஷமும் நம்மை பற்றித்தான் நினைத்து கொண்டிருக்கிறார்’ என்றாள் ஜமுனா.

‘தப்பாக நினைக்கிறாரே’ என்றேன்.

‘சரியோ, தப்போ, அவர் நம்மைப் பற்றி நினைக்கட்டும். ஒருவர் என்னவெல்லாம் நினைப்பார் என்பது தெரியாத வரைதான் பிரச்சினை. தெரிந்துவிட்டால் அவரால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. வாலி வரம் தெரியும்தானே? எதிரே எவர் வந்தாலும் பாதி சக்தி அவனுக்கு வந்து விடும். எதிரே வராவிட்டால்தான் வாலி பயப்பட வேண்டும்’ என்றாள் ஜமுனா.

‘பழனியப்பன் சாரை விட்டு வைக்கிறாய். கவர்னசத்தைக்கு ஏன் எதிர்பாட்டு பாடினாய்?’ என்று கேட்டேன்.

‘அவரவருக்கு புரிகிற மொழியில் பேசினால்தானே உறவு நன்றாக இருக்கும்? கவர்னசத்தைக்கு பதில்பாட்டு புரியும். கணக்கருக்கு பணம்தான் புரியும்’ என்றாள் ஜமுனா.

அன்றிரவு தூங்கும்போது வெகு நேரம் யோசித்தேன். பின் ஜமுனாவை லேசாக எழுப்பி ‘கிருஷ்ணர் யார்?’ என்று ஆர்வத்துடன் கேட்டேன்.

‘தூங்குபவளை எழுப்பி காதல் வசனம் பேசுகிறீர்களே? பேசாமல் தூங்குங்கள். எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது’ என்று அதட்டிவிட்டு தூங்கி விட்டாள் ஜமுனா.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms