36. கம்பனியில் பங்கு - மீன்கொடி

மறுநாள் மதியம் நான் சாப்பிட வந்தபோது ‘சுந்தரம் எங்கே காணோம்? காலையிலிருந்து கம்பனிக்கு வரவில்லையே?’ என்று கேட்டேன்.

‘மதுரைக்கு போயிருக்கிறான். அப்பா வேலையை விட்டு விட்டு சொந்தமாக டியூஷன் சென்டர் ஆரம்பிக்கப் போகிறாராம்’ என்றாள் ஜமுனா.

‘பூகோளம் சொல்லி தரப் போகிறாரா?’ என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

‘அவர் பாடம் நடத்த மாட்டார். நான்கைந்து பேரை வேலைக்கு வைத்து அறிவியலும், கணக்கும் ஒழுங்காக சொல்லித் தரப் போகிறார். நிர்வாகத்தை மட்டும் பார்த்து கொள்வார். கடைசியாக வாங்கிய சம்பளத்தை விட பல மடங்கு அதிகமாக சம்பாதிக்க முடியும் என்று நினைக்கிறார்’ என்றாள் ஜமுனா.

‘சுந்தரமும் சொல்லித் தரப் போகிறானா! அவன் மாணவர்களை சந்தேகம் கேட்பானே!’ என்றேன்.

சிரித்தாள் ஜமுனா. ‘அப்பா வாடகைக்கு இடம் பார்த்திருக்கிறார். அதை முடிப்பதற்காக சுந்தரத்தை வர சொன்னார். என்னிடம் போனில் சொல்லிவிட்டுப் போனான். இரண்டு நாட்களில் திரும்ப வந்து விடுவான். என்னை விட்டு போக மாட்டான்’ என்றாள் ஜமுனா.

‘பத்திரமாக போய் சேர்ந்து விட்டானா?’ என்றேன்.

‘ஆமாம். காலையில் அம்மா போன் பண்ணி சொன்னார். ஏதாவது விசேஷம் உண்டா என்று கேட்டார். நான் பதில் சொல்லவில்லை’ என்றாள் ஜமுனா.

‘எல்லா விசேஷங்கள் பற்றியும் சுந்தரம் விளக்கமாக சொல்லி இருப்பானே’ என்றேன்.

‘அம்மா குழந்தை பற்றி கேட்டார். நான் ஒன்றும் சொல்லவில்லை. முதலில் உங்களிடம் சொல்லிவிட்டுத்தானே மற்றவர்களிடம் சொல்ல வேண்டும்?’ என்றாள் ஜமுனா.

நான் புரிந்து கொண்டது சரியா என்று தெரியாத குழப்பத்துடன் ‘எனக்கு புரிவது போல சொல்’ என்றேன்.

‘ஒன்பது மாதங்களில் சுந்தரம் தாய்மாமா ஆகிவிடுவான்’ என்றாள் ஜமுனா.

‘நான் அப்பாவாகி விடுவேன் என்று சொன்னால் உன் கௌரவம் குறைந்து விடுமோ?’ என்றேன். பின் சிறிது சந்தேகமாக ‘குழந்தை பிறக்க பத்து மாதமாகும் என்பார்களே. நீ ஒன்பது மாதம் என்கிறாயே!’ என்றேன்.

சிரித்தாள் ஜமுனா. ‘கடவுளே! டாக்டரிடம் நீங்களே கேளுங்கள். விளக்கம் தருவார்’ என்றாள்.

‘ஏன் என்னிடம் முன்பே சொல்லவில்லை?’ என்று கேட்டேன்.

‘எனக்கே காலையில்தானே தெரியும்! சில நாட்களாக சந்தேகமாக இருந்தது. இன்றுதான் பரிசோதனை செய்து கொண்டேன்’ என்றாள் ஜமுனா.

குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று சிறிது நேரம் விவாதம் செய்தோம். வழக்கம் போல ஜமுனா வென்றாள். நான் தோற்றதன் மூலம் அவளை வென்றேன்.

பின் சாப்பிட்டுவிட்டு கம்பனிக்கு கிளம்பிக் கொண்டிருந்தபோது மதுவண்ணாரிடமிருந்து போன் வந்தது. ‘நானும், அண்ணாரும் உன்னிடம் கம்பனி பற்றி பேச வேண்டும். எப்போது உன் வீட்டிற்கு வந்தால் உனக்கு வசதியாக இருக்கும்?’ என்றார். அவர் குரலில் இருந்த பணிவு அந்நியரைப் போல உணர வைத்து என்னை வருத்தப்படுத்தியது.

‘இப்போதேகூட வாருங்களேன். அல்லது நான் நம் வீட்டிற்கு வந்து விடட்டுமா?’ என்று கேட்டேன்.

‘நாங்களே இரண்டரை மணிக்கு உன் வீட்டிற்கு வந்து விடுகிறோம்’ என்று கூறி விட்டு மதுவண்ணார் போனை வைத்தார்.

‘நம் கம்பனியில் ஆளாளுக்கு பங்கு கேட்கப் போகிறார்கள். என்ன செய்ய எண்ணம்?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘கேட்பதை கொடுத்து விடலாம்’ என்றேன்.

‘கம்பனி நமக்கு மட்டும் உரிமையுள்ள சொத்து. பாகம் பிரிக்கும்போது மூத்தவர்கள் எத்தனை சாமர்த்தியமாக நடந்து கொண்டார்கள். மறந்துவிட்டதோ?’ என்றாள் ஜமுனா.

அவள் குரலில் இருந்த அற்பத்தனம் பேசுவது ஜமுனாதானா என்ற ஆச்சரியத்தை எழுப்பியது.

‘எல்லாம் நியாயமாகத்தானே நடந்தது. பெரியவர்களும் கூட இருந்தார்களே’ என்றேன்.

‘அவர்கள் நியாயம் நம் குடும்பத்திற்கு அநியாயம். உங்களுக்காக என்றால் உயிரையும் கொடுப்பேன். அடுத்தவர்கள் செய்யும் அநியாயத்தினால் நீங்கள் கஷ்டப்படுவதை இனி என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது’ என்றாள் ஜமுனா.

‘நீ இருக்கும்போது எனக்கெப்படி கஷ்டம் வரும்?’ என்றேன்.

‘பேச்சில் சாமர்த்தியசாலிதான். பிறக்கப்போகும் நம் குழந்தையின் எதிர்காலத்திற்கு, பாதுகாப்பிற்கு சொத்தும், வருமானமும் அவசியம் வேண்டும். நமக்கு மட்டும் சொந்தமானதில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட வேறெவருக்கும் தர வேண்டியதில்லை’ என்று கத்தினாள் ஜமுனா.

நடப்பதை நம்பமுடியாமல் நான் அவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். பின் ‘நீ மட்டும் எனக்கு போதும்’ என்றேன்.

சற்று திகைத்த ஜமுனா சோபாவில் என்னருகே நெருங்கி அமர்ந்தாள். என் வலது கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டாள். என் இடது கையை தன் வயிற்றின் மேல் வைத்துக் கொண்டாள். சற்று நேரம் கழித்து அவளது கண்களில் பிறந்த வெதுவெதுப்பான கண்ணீர் என் புறங்கையில் வழிந்தது.

‘உன் விருப்பப்படி நடந்து கொள்கிறேன்’ என்றேன். பின் ‘வீசுகமழ் நீயெனக்கு, விரியுமலர் நானுனக்கு; பேசுபொருள் நீயெனக்கு, பேணுமொழி நானுனக்கு; எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எல்லையில்லை நின் சுவைக்கே: கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!’ என்றேன்.

அதன் பின்னும் அவள் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. நாங்கள் வேறெதுவும் பேசிக் கொள்ளவில்லை.

இரண்டேகால் மணிக்கே அண்ணார்களும், ஜவுளி மாமாவும், காபி மாமாவும் வந்துவிட்டனர். வெயில். அரசியல் என்று பல விஷயங்களைப் பற்றி தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். நானும், ஜமுனாவும் கேட்டுக் கொண்டிருந்தோம்.

இலக்கற்ற பேச்சு வேகமிழந்த போது புருஷண்ணார் ‘கம்பனி பற்றி உன்னிடம் பேசவேண்டும் என்று நாங்கள் சில நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்’ என்றார்.

‘நாம் பேசுவது நம் குடும்பத்திற்குள் இருக்கட்டும். உன் அக்காவிற்கு தெரியவேண்டியதில்லை’ என்றார் மதுவண்ணார்.

‘என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று சொல்லுங்கள். நியாயமான எதையும் செய்கிறேன்’ என்றேன்.

‘கம்பனி நம் தாத்தா போல அனுபவசாலி. கொஞ்சம் முயற்சி செய்தாலே அது நன்றாக ஓட ஆரம்பித்து விடும் என்பது எங்களுக்குத் தெரியும். நானும், அண்ணனும் மாத சம்பளக்காரர்கள். கம்பனியை கவனிக்க நேரமில்லை. அதனால்தான் உனக்கு கம்பனியைத் தந்தோம். உன்னிடம் இருந்தால் எங்களிடம் இருப்பது போலத்தான்’ என்றார் மதுவண்ணார்.

ஜமுனா குறுக்கிட்டாள். ‘நீங்கள் இரண்டு பேரும் ஆளுக்கு பாதியாக கம்பனியை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றாள்.

ஜமுனா கூறியதை புரிந்து கொள்ள அனைவருக்கும் சற்று நேரமாயிற்று. ஜவுளி மாமாவின் முகம் சிவந்தது. காபி மாமாவின் முகம் கறுத்தது.

புருஷண்ணார் பதற்றத்துடன், ‘உனக்கும், பரமனுக்கும் கம்பனி வேண்டாமா? நிஜமாகவா?’ என்று கேட்டார். அண்ணார்கள் முகங்களில் மகிழ்ச்சி படரத் தொடங்கியது.

‘நிஜமாக, சந்தோஷமாக, மனதார சொல்கிறேன். எல்லாவற்றையும் முழுவதுமாக எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு இவர் மட்டும் போதும்’ என்றாள் ஜமுனா.

காபி மாமா உரத்த குரலில் ‘ஜமுனா, இது உனக்கு மட்டும் உரிமையுள்ள உன் கம்பனி. விளையாட்டு பெண் போல நடந்து கொள்ளாதே’ என்றார்.

ஜவுளி மாமா வேகமாக எழுந்தார். ‘யாருக்கும் ஜமுனா எதுவும் தர வேண்டியதில்லை’ என்றார்.

சாந்தமான குரலில் ‘தப்பாக பேசி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் பெரியப்பா’ என்றாள் ஜமுனா.

‘இப்போது என்ன நடந்து விட்டது?’ என்று புரியாமல், குழப்பத்துடன் கேட்டேன். எனக்கு எவரும் பதில் சொல்லவில்லை.

காபி மாமா அண்ணார்களைப் பார்த்து ‘சின்னப் பெண் தானம் தருகிறாள். அதற்கு இன்னொரு பெயர் பிச்சை. தானம் வாங்கும் குடும்பம் வளர முடியாது’ என்றார். பின் ஜமுனாவைப் பார்த்து ‘தன் பெண் நன்றாக இருக்கவேண்டும் என்றுதான் எந்த தகப்பனும் நினைப்பான். அதற்காக அடுத்தவர் பெண் அழிய வேண்டும் என்று நினைக்க மாட்டான். நியாயமென்று ஒன்று இருக்கிறது. சிலராவது அதற்கு கட்டுப்பட வேண்டாமா? நீயும் என் பெண்தான். ஜவுளி, நீர் என்ன நினைக்கிறீர்?’ என்று கூறியபடி எழுந்தார்.

‘எங்களுக்கு சட்டையும், வேட்டியும் மட்டும்தான் வெள்ளை என்று நினைத்து விடாதே ஜமுனா. எங்கள் பெண்கள் மீதிருந்த பாசத்தால் அவசரப்பட்டு வந்துவிட்டோம். நன்றாக இரு அம்மா’ என்று கூறி விட்டு ஜவுளி மாமா வாசலை நோக்கி நகரத் தொடங்கினார். பின் சற்று தயங்கிவிட்டு கூரையைப் பார்த்தபடி ‘பாகம் பிரிக்கும்போது கணக்கு தப்பாகி விட்டது. நகை கணக்கு விட்டுப் போயிற்று. ஜமுனாவின் கணக்கிற்கு இருநூறு பவுன் சேர வேண்டும்’ என்றார்.

‘நகையா?’ என்று கேட்டேன்.

‘தாத்தா மாதாமாதம் குறைந்தது ஒரு தங்க காசு அல்லது ஒரு கல்லில்லாத நகை வாங்குவார். ஐம்பது வருஷத்தில் நிறைய சேர்ந்து விட்டது’ என்றார் புருஷண்ணார்.

அண்ணார்கள் இருவரையும் பார்த்து ‘மாப்பிள்ளை, நகைகளை சாயந்தரமே கொண்டு வந்து ஜமுனாவிடம் கொடுத்து விடுங்கள்’ என்றார் காபி மாமா.

‘அது சரிவராது காபி. நான் மாப்பிள்ளைகள் கூடவே போய் நகைகளை வாங்கி இப்போதே கொண்டுவந்து கொடுத்து விடுகிறேன்’ என்றார் ஜவுளி மாமா.

என் முகத்தை பார்த்தாள் ஜமுனா. ‘பெரியப்பா, இனி நகை பேச்சை எடுக்க வேண்டாம். சுமுகமாக முடிந்து போனதை கிளறி ஏன் பிரச்சினையாக்க வேண்டும்? என் அக்காக்கள் நகை போடுவதும், நான் போடுவதும் ஒன்றுதான்’ என்றாள்.

ஜவுளி மாமா என்னை பார்த்தார்.

‘ஓய் ஜவுளி, தம்பியை ஏன் பார்க்கிறீர்? அவர் அப்பிராணி. இது மீன்கொடி பறக்கும் மதுரை சாம்ராஜ்யம்’ என்றார் காபி மாமா.

‘இங்கு எல்லாமே இவர் இஷ்டப்படிதான் நடக்கும். ஆனால் என்னை எல்லோரும் மீனாட்சி என்கிறார்கள். ஒன்றுமே தெரியாதவர் போல முகத்தை வைத்திருப்பதை பாருங்கள்’ என்றாள் ஜமுனா.

இரண்டு மாமனார்களும் உரக்க சிரித்தனர். அண்ணார்கள் முகங்களிலும் புன்முறுவல் அரும்பியது.

‘ஜமுனா விரும்பாத எதையும் பரமன் நினைப்பதே இல்லை’ என்றார் ஜவுளி மாமா.

‘அது ஏன் தெரியுமா? பரமன் எதை நினைக்கிறானோ அதை மட்டும்தான் ஜமுனா விரும்புகிறாள்’ என்றார் காபி மாமா.

‘உன் நகை இவர்களிடம் இருந்தால். இவர்கள் குடும்பங்கள் முன்னுக்கு வராது’ என்றார் ஜவுளி மாமா.

‘ஜமுனா, ஜவுளி அனுபவசாலி. அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். உனக்கு உரியது இவர்களிடம் இருக்கும்வரை இவர்கள் முன்னேற முடியாது’ என்றார் காபி மாமா.

‘உனக்காக இல்லாவிட்டாலும் இவர்கள் நன்மைக்காக நகைகளை நீ வாங்கிக் கொண்டால்தான் நாங்கள் நிம்மதியாக இருக்க முடியும்’ என்றார் ஜவுளி மாமா.

‘நம்மில் யாரிடமிருந்தால் என்ன?’ என்றாள் ஜமுனா.

‘குடும்பத்தில் ஒருவர் சந்தோஷமாக இல்லாவிட்டாலும், அந்த குடும்பம் சந்தோஷமான குடும்பம் இல்லை என்று சித்தப்பாவிடம் சொன்னாயாமே. அப்படிப் பார்த்தால் குடும்பத்தில் ஒருவரிடம் நகை இல்லாவிட்டாலும், அந்த குடும்பத்தில் நகை இல்லை என்றுதானே அர்த்தம்?’ என்றார் புருஷண்ணார்.

‘அண்ணன், தம்பிகள் மூன்று பேரும் பேச்சில் கெட்டிக்காரர்கள்தான்’ என்றாள் ஜமுனா.

‘மீசை தாத்தா சேர்த்த நகைகள்’ என்றார் புருஷண்ணார்.

‘அக்காக்களுக்கு வருத்தம் எதுவுமில்லை என்றால் நகைகளை வாங்கி கொள்கிறேன்’ என்றாள் ஜமுனா.

‘மாமா, சொந்தமாக ஏதாவது செய்ய எங்களாலும் முடியும். செய்து காட்டுகிறோம்’ என்றார் மதுவண்ணார்.

‘நீங்களா!’ என்ற காபி மாமா, ‘அதற்கெல்லாம் ரொம்ப காலமாகும்’ என்றார் வேடிக்கையாக.

‘அண்ணா, சோலார் மின்சார கருவி நம் ஊரில் நன்றாக விற்குமாம். நண்பர் ஒருவர் நம் கம்பனிக்கு ஏஜென்சி தருகிறேன் என்றார். நீங்கள் செய்கிறீர்களா?’ என்றேன்.

‘உனக்கு நேரம் கிடைக்கும்போது சொன்னால் நாங்கள் வந்து என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்’ என்றார் புருஷண்ணார். பின் மதுவண்ணாரைப் பார்த்து ‘செக் புத்தகம் இருக்கிறதா?’ என்றார்.

மதுவண்ணார் காசோலை ஒன்றை நிரப்பி, என்னிடம் நீட்டியபடி ‘மதுரை மாமா உன் கல்யாணத்தன்று வீட்டு பொருட்கள் வாங்க பணம் தந்தார். அன்று நீங்கள் அவசரமாகக் கிளம்பியதால் அதை கொடுக்க மறந்து விட்டோம்’ என்றார்.

நான் ஜமுனாவைப் பார்த்தேன். காசோலையை மறுப்பாள் என்று நினைத்தேன். ஆனால். இயல்பாக அதை வாங்கிக் கொண்டாள். நன்றி சொல்வாள் என்று நினைத்தேன். ஆனால் புன்னகை மட்டுமே செய்தாள்.

‘காரில்தான் என்றாலும் நகைகளை தனியாக எடுத்து வருவது பாதுகாப்பில்லை. நீங்களும் என்னோடு திரும்ப இங்கே வர முடியுமா?’ என்று புருஷண்ணாரிடம் கேட்டார் ஜவுளி மாமா.

‘பழனியப்பனை அழைத்துக் கொண்டு போகலாம். நம்பிக்கையான ஆள்’ என்றார் புருஷண்ணார்.

‘ஒரு மணி நேரத்தில் நகைகளோடு வருகிறோம்’ என்று கூறி விடைபெற்றார் ஜவுளி மாமா.

பழனியப்பன் சாரை அழைத்துக் கொண்டு எல்லோரும் விடைபெற்று சென்ற பின் ‘எவரும் எதுவும் கேட்காமல் ஏஜென்சி பேச்சை எதற்காக நீங்களாகவே ஆரம்பித்தீர்கள்?’ என்றாள் ஜமுனா.

‘நம் வீட்டிற்கு வந்தவர்கள் ஒரு நாளும் வெறும் கையோடு திரும்பிப் போகக் கூடாது. அடுத்தவர்களுக்கு ஏதாவது நல்லது செய்து கொண்டே இருக்கவேண்டும்’ என்றேன்.

‘வாழ்நாள் முழுவதும் எனக்கு பிரச்சினைகளை உண்டாக்கி வேடிக்கை பார்க்கும் உத்தேசமோ?’ என்று கூறி சிரித்தாள் ஜமுனா.

‘மற்ற சின்ன, சின்ன நிலங்களைப் பற்றி ஏதாவது சொல்வார்கள் என்று நினைத்தாயா?’ என்று கேட்டேன்.

‘சோலார் கருவி பற்றி பேச வரும்போது நிச்சயம் சொல்வார்கள். ஆனால் அவற்றையும் நாம் வாங்கிக் கொள்ள வேண்டுமா? சித்தப்பாவிற்கும், கவர்னசத்தைக்கும் பிரித்து கொடுத்துவிடலாமா?’ என்றாள் ஜமுனா.

‘நான் சொல்ல வேண்டியதை நீ சொல்கிறாய்’ என்றேன்.

‘ஒரே ஒரு நிமிஷ அற்பத்தனத்தால், பிடிவாதத்தால் உங்களை எவ்வளவு தாழ்த்த இருந்தேன்!’ என்றாள் ஜமுனா.

‘சின்ன தடுமாற்றம். அவ்வளவுதான்’ என்றேன்.

‘இல்லாத ஒன்று வெளிப்படாது. எனக்குள் துளி விஷம் இருந்தது. அதை உணர்ந்து, மாற இன்று நீங்கள் எனக்கு உதவினீர்கள். இப்போதுதான் முழு விடுதலை கிடைத்தது போலிருக்கிறது’ என்றாள் ஜமுனா.

‘என்னை புகழ்வதற்கு எப்போதும், ஏதாவது காரணம் கண்டுபிடித்துக் கொண்டேயிரு! நான் அதிர்ஷ்டசாலி என்று தாத்தா சொன்னது எத்தனை உண்மை!’ என்றேன்,

‘நான்தான் அதிர்ஷ்டசாலி. உலகத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் உங்களைப் போல ஒரு காதல் கணவர் கிடைத்து, அவள் என்னை போல அதிர்ஷ்டசாலி ஆக வேண்டும்’ என்றாள் ஜமுனா.

‘காதலும், கல்யாணமும் எதிரிகளாமே. கல்யாணம் பண்ணிக் கொண்டதும் காதல் காணாமல் போய்விடும் என்கிறார்களே’ என்றேன்.

‘மனித சுபாவம் மாற முடியுமாம். கல் கடவுளாக முடியுமாம். கல்யாணத்திற்கு பின் காதலிக்க முடியாதா என்ன!’ என்றாள் ஜமுனா.

‘நாம் காதலித்து கொண்டுதானே இருக்கிறோம்!’ என்றேன்.

‘நம்மை பற்றி  பேசவில்லை. மற்றவர்களைப் பற்றி யோசிக்கிறேன்’ என்றாள் ஜமுனா.

‘முயன்றால் முடியும்தான்’ என்றேன்.

‘சொன்னால் போதுமா? ஏதாவது செய்யுங்கள்’ என்றாள் ஜமுனா.

‘அவரவர் மனைவியை, கணவரை அவரவர் காதலிக்க வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய முடியும்?’ என்று கேட்டேன்.

‘கல்யாணத்திற்கு பெண்ணும், பையனும் தேட வெப்சைட் இருக்கிறதாமே. கல்யாணத்திற்கு பின் வரும் காதலுக்கு வழிகாட்ட நீங்கள் ஒரு வெப்சைட் நடத்துங்கள். பணம், பிள்ளைகள், சமூகம் போன்ற நிர்பந்தங்கள் இல்லையென்றால் உலகத்தில் பெரும்பாலானவர்கள் உடனே விவாகரத்து செய்து கொண்டு விடுவார்கள். உடல், உணர்ச்சி, அறிவை கடந்து பிரிவே இல்லாமல் காதலிக்க முடியும் என்று அவர்களுக்கு புரிய வையுங்கள். எல்லோர் காதலிலும் நாமிருவரும்  இருப்போம்’ என்றாள் ஜமுனா.

‘லாபம் வருமா என்று தெரியாமலே எல்லா பணத்தையும் அதில் செலவு செய்ய வேண்டியிருக்கும். நிறைய செலவாகும்’ என்றேன்.

‘கடனைக் கட்டிய பின் வரும் பணத்தையெல்லாம் அதற்காக செலவு செய்வோம்’ என்றாள் ஜமுனா.

‘உனக்கு பணம் வேண்டாமா?’ என்று கேட்டேன்.

‘எனக்கு நீங்கள் போதும்’ என்றாள் ஜமுனா.

பின் என்னருகே வந்து என் மார்பில் சாய்ந்து கொண்டாள். ‘உங்களுக்குத்தான் பாரதி பாட்டு தெரியுமா?’ என்று கூறிவிட்டு ‘இன்பக்கதைகள் எல்லாம் உன்னைப் போல் ஏடுகள் சொல்வதுண்டோ? அன்பு தருவதிலே உனை நேர் ஆகுமொர் தெய்வமுண்டோ? மார்பில் அணிவதற்கே உன்னைப்போல் வைரமணிகளுண்டோ? சீர்பெற்று வாழ்வதற்கே உன்னைப் போல் செல்வம் பிறிது முண்டோ?’ என்றாள்.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms