37. அமைச்சர் தமிழடியான் - மீன்கொடி

அன்று மாலை வீட்டு வாசலில் கார்கள் வந்து நிற்கும் ஓசை கேட்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். ஆனால் கார்கள் கிளம்பி விட்டன. சற்று நேரம் கழித்து அதே கார்கள் திரும்பி வந்தன. சுற்று சுவர் கதவைத் திறந்து கொண்டு நான்கைந்து பேர்கள் வருவது தெரிந்தது. உருவத்தையும், நடையையும், உடையையும் பார்த்தால் அரசியல்வாதிகள் போலத் தெரிந்தது. ஒருவர் மேல்கோட்டு போட்டு ஏதோ பெரிய கம்பனி நிர்வாகி போலிருந்தார். வீடு மாறி வந்துவிட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே அழைப்புமணி பலமாக ஒலிக்கத் தொடங்கியது.

‘யார் இப்படி அழுத்துவது?’ என்று கேட்டுக் கொண்டே எனக்கு முன்னால் சென்று கதவைத் திறந்தாள் ஜமுனா. ‘அண்ணே, நீங்களா? உள்ளே வாருங்கள்’ என்றாள்.

எல்லோருக்கும் முன்னால் நின்றவர் சற்று தடுமாறினார்.

‘என்ன லிக்கர் லிங்கப்பண்ணே, அடையாளம் தெரியவில்லையா? போன வாரம் நீங்கள் கனப்பாக்கம் மயானத்தை மூடச் சொல்லி கூட்டம் போட்டபோது வந்தேனே’ என்றாள் ஜமுனா.

லிக்கர் லிங்கப்பரின் முகத்தில் சினேக பாவம் எழுந்தது. ‘ஞாபகம் வந்துவிட்டது. நம் வீடுதானா இது? யாரோ என்று நினைத்துக் கொண்டு வந்தேன். மினிஸ்டர் அண்ணன் நேரில் பார்க்க வேண்டும் என்றார். வந்திருக்கிறார்’ என்றார் லிக்கர் லிங்கப்பன்.

கை குவித்த ஜமுனா ‘எல்லோரும் உள்ளே வாருங்கள்’ என்றாள்.

‘நமக்கு தெரிந்த பெண்தான். ஒரு பிரச்சினையும் இருக்காது. நோ ப்ராப்ளம். ஷுகராக முடித்து விடலாம்’ என்று அங்கு தலைவரைப் போலிருந்த அரசியல்வாதியைப் பார்த்து சொன்னார் லிங்கப்பன்.

தலைவர் தலையசைத்துவிட்டு ‘ஷுயூராக என்று சொல்ல வேண்டும்’ என்று கூறிக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார்.

என்னவென்று விசாரித்தபின் உள்ளே கூப்பிட்டிருக்கலாமோ என்று தோன்றியது.

.அமைச்சர் தமிழடியானையும், சூப்பர் பில்டர்ஸ் நிர்வாகியையும் லிங்கப்பன் அறிமுகப்படுத்தினார். அவர்கள் மட்டும் நாற்காலிகளில் அமர்ந்தனர். மற்றவர்கள் பவ்வியமாக நின்று கொண்டிருந்தனர். ஜமுனா என்னை அறிமுகப்படுத்திவிட்டு, தன்னையும் அறிமுகப் படுத்திக் கொண்டாள்.

‘பதிவாளர் அலுவலகத்தில் இந்த வீட்டு விலாசத்தை சரியாகத்தான் கொடுத்தார்கள். பத்து ஏக்கர் வைத்திருப்பவர்கள் இவ்வளவு பழைய வீட்டிலா இருப்பார்கள் என்று எங்களுக்கு சந்தேகம் வந்து தள்ளி போய்விட்டோம். வீதி முனையில் நமது நகலகம் வைத்திருக்கிறாரே, அந்த பெரியவர்தான் திரும்பவும் இங்கே அனுப்பி வைத்தார். நிலம் உங்கள் கைக்கு வந்து விட்டதாமே?’ என்றார் கம்பனி நிர்வாகி.

‘விஷயத்தை சொல்லய்யா’ என்று நிர்வாகியை பார்த்து உத்தரவிட்டார் அமைச்சர்.

ஒரு பெரிய பல வண்ணக் காகிதக் கட்டை எடுத்து விரித்த சூப்பர் பில்டர்ஸ் நிர்வாகி, தொண்டையை கனைத்து குரலை சீராக்கிக் கொண்டு பேச ஆரம்பித்தார். ‘ஒவ்வொரு மனிதனுக்கும் சொந்தமாக வீடு வேண்டும் என்ற தணியாத ஆர்வம் உண்டு. ஆனால் எல்லோரும் வாங்கும் நிலையில் இல்லை. ஏன்? சேவை மனப்பான்மை உள்ள எங்கள் கம்பனி இந்த பிரச்சினை பற்றி மனிதாபிமானத்துடன் யோசித்தது’

‘சட்டென்று விஷயத்திற்கு வாருமையா. குவிக் மேட்டர். எதற்கு சுற்றி வளைத்து பேசிக் கொண்டு? நம் பாப்பா எதையும் கற்பூரமாக புரிந்து கொள்ளும், சல்பர்’ என்றார் லிங்கப்பன்.

‘அது சல்பர் இல்லை. கேம்பர்’ என்ற அமைச்சர் ‘நீயே விஷயத்தை சொல்லிவிடு’ என்று லிங்கப்பனை பார்த்து உத்தரவிட்டார்.

சூப்பர் பில்டர்ஸ் நிர்வாகி காகிதங்களை மடித்து கட்டத் தொடங்கினார்.

‘மனிதாபிமானமும் இல்லை. சேவையும் இல்லை. இது வியாபாரம். என்னது? பிசினஸ். பிக் பிசினஸ். கனப்பாக்கம் மயானத்தையும், அதற்கு பின்னாலிருக்கும் புறம்போக்கு நிலத்தையும் சேர்த்தால் முப்பது ஏக்கர் வரும். தர்டீன் ஏக்கர். சென்னைக்குள் இந்த மாதிரி இடம் கிடைக்குமா? கிடைக்காது. முன்னால் பிரம்மாண்டமான பத்து மாடி அங்காடி. ஷாப்பிங் காம்பவுண்டு. பின்னால் தனித்தனி சொகுசு வீடு. லெக்சர் ஹவுஸ். பிக் பிசினஸ்’ என்றார் லிங்கப்பன்.

அமைச்சர் சிரித்தார் ‘இவன் ஒருத்தன்! இங்கிலீஷிலே பேசாதே என்றால் கேட்கிறானா? பாப்பா, இவன் சொன்னது தர்ட்டி ஏக்கர்ஸ், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், லக்சுரி ஹவுஸ்!’ என்றார்.

‘என்ன அண்ணே, லேடீஸ் முன்னால் இப்படியெல்லாம் சொல்லலாமா?’ என்று வருத்தப்பட்டார் லிங்கப்பன்.

‘நீங்கள் பேசுவது எனக்கு நன்றாக புரிகிறது, மேற்கொண்டு இங்கிலீஷிலேயே சொல்லுங்கள் அண்ணே’ என்றாள் ஜமுனா.

‘இந்த திட்ட நிலத்திற்கு நடுசென்டரில் உங்கள் நிலம் இருக்கிறது. பத்து ஏக்கர் பெரிய இடம். சென்னையில் கிடைக்குமா! கிடைக்காது. எங்கள் திட்டத்திற்கு உங்கள் நிலம் தேவைப்படுகிறது. அது  கிடைக்கவில்லை என்றால் எங்களுக்கு பிரச்சினை. நாங்கள் கட்டடம் கட்டிவிட்டால் உங்களுக்கு பிரச்சினை. உங்கள் நிலத்தை எங்களுக்கு விற்றால் எல்லோருக்கும் நன்மை. ஆல் குட்’ என்றார் லிங்கப்பன்.

‘பாப்பா, நாங்கள் அரசியல்வாதிகள். எங்கள் போக்கில் ஒரு மாதிரியாகத்தான் வியாபாரம் செய்வோம். குறைவான விலையில் ஆரம்பிப்போம். விற்பவர் சம்மதிக்கவில்லை என்றால் சில நாட்கள் சில்லறை தொந்தரவுகள் கொடுத்துவிட்டு விலையை கொஞ்சம் கூட்டுவோம். அதற்கும் ஒத்துவரவில்லை என்றால் பெரிய தொந்தரவுகள் கொடுத்து விட்டு இன்னும் கொஞ்சம் விலையை கூட்டி சொல்வோம். அப்படியும் சரிவரவில்லை என்றால் பணமே தராமல் நிலத்தை எடுத்துக் கொண்டு விடுவோம்’ என்றார் அமைச்சர். தணிவான குரலில் பேசுவது போலத்தான் பேசினார். ஆனால் அதில் கடுமையான அச்சுறுத்தல் இருந்தது.

‘அண்ணே, பாப்பா நம் வீட்டுப் பெண்’ என்றார் லிங்கப்பன்.

‘எங்கள் திட்டம் மிகவும் பெரியது. ஆனால் திட்டம் மயானத்திலும், புறம்போக்கு நிலத்திலும் வருவதால், சிறு பிரச்சினை கூட இல்லாமல், சத்தமில்லாமல் காரியத்தை சீக்கிரமாக முடிக்க நினைக்கிறோம்’ என்றார் சூப்பர் பில்டர்ஸ் நிர்வாகி

‘சில மாதங்களில் தேர்தல் வரப்போகிறது. என்ன நடக்குமோ! இந்த சமயத்தில் பிரச்சனை உண்டாகி பத்திரிகையில் செய்தி வருவதை கட்சி தலைமை விரும்பாது.  அதனால்தான் நிலத்தை உடனே வாங்க நினைக்கிறோம். உன்னால் நினைத்தாலும் விற்க முடியாத இடமிது. மார்க்கெட்டே இல்லாத நிலத்திற்கு, பக்கத்திலிருக்கும் நிலங்களின் தோராயமான மார்க்கெட் விலை தந்து விடுகிறோம். பேரம் பேசி முடிவிற்கு வர நேரமில்லை. ஏற்கனவே பூஜை போட்டு விட்டோம். எங்களுக்கு உடனே நிலம் வேண்டும். அவசியம் வேண்டும். வேறு எவரையாவது அனுப்பினால் குழப்பி விடுவார்கள் என்றுதான் நானே நேரில் வந்தேன்’ என்றார் அமைச்சர்.

‘சென்னை என்பதால் ஒரு ஏக்கர் மூன்று கோடி. பத்து ஏக்கர். மொத்தம் முப்பது கோடி. தர்டீன் குரோர்ஸ்’ என்றார் லிங்கப்பன்.

‘தர்டி குரோர்ஸ்’ என்றார் அமைச்சர்.

‘பெரிய தொகை. பிக் மணி’ என்றார் லிங்கப்பன்.

‘இதைப் பற்றி யாரிடமும், குறிப்பாக பத்திரிகைக்காரர்களிடம், பேச வேண்டாம்’ என்றார் சூப்பர் பில்டர்ஸ் நிர்வாகி.

‘இரண்டு பேரும் நன்றாக நிதானமாக யோசித்து, கூடிய விரைவில் நல்ல பதிலாக சொல்லுங்கள்’ என்றார் அமைச்சர்.

ஜமுனா என்னைப் பார்த்தாள். எனக்கு ஒன்றும் தோன்றவில்லை.

‘சார், உங்களுக்கு நிலத்தை விற்பதில் எங்களுக்கு முழு சம்மதம்தான்’ என்றாள் ஜமுனா.

‘ஷுகராக முடியுமென்று நான் சொன்னேனா இல்லையா?’ என்றார் லிங்கப்பன்.

இத்தனை விரைவில், சுலபமாக வந்த காரியம் முடியும் என்று அமைச்சர் எதிர்பார்க்கவில்லை. ‘அவசரப்பட்டு வாக்கு கொடுத்துவிட்டு பேச்சு மாறினால் எனக்கு பிடிக்காது. ஒரு வாரம் கழித்துகூட சொல்லலாம்’ என்றார் அமைச்சர்.

‘இல்லை சார், எங்களுக்கும் பணம் பெரிய அளவில் தேவைப்படுகிறது. பணம் வரும் வழி தெரியாத நேரத்தில் நீங்கள் வழியைக் காட்டாமல் பணத்தையே தந்தால் வேண்டாமென்றா சொல்லப் போகிறோம்?’ என்றாள் ஜமுனா.

‘பாப்பா, சொத்து விற்கும்போது இப்படியெல்லாம் பேசினால் வாங்குபவன் குறைவான விலைக்கு கேட்பான். கவனமாக இருக்க வேண்டும். உனக்கு இது தேவையே இல்லை என்பது போல அலட்சியமாக பேச வேண்டும். நானாக இருப்பதால் சொன்ன தொகையை மாற்றாமல் தருகிறேன்’ என்றார் அமைச்சர்.

‘உண்மை எப்போதும் நல்லதுதான் செய்யும் சார்’ என்றாள் ஜமுனா.

‘உனக்கு வேண்டுமானால் நல்லது செய்யும். என்னை அழித்து விடும்’ என்ற அமைச்சர் ‘உடனே எல்லா ஏற்பாடுகளும் செய்துவிடலாமா? முன்பணம் ஏதாவது வேண்டுமா?’ என்று கேட்டார் அமைச்சர்.

‘பத்திரம் பதிவு செய்த பிறகு முழு தொகையை கொடுங்கள்’ என்றாள் ஜமுனா.

‘நம் நாட்டில் அரசியல்வாதியை நம்புகிற முதல் ஆள் நீதானம்மா. கிளவர்’ என்றார் லிங்கப்பன்.

‘லிங்கப்பா, இந்த இடத்தில் கிளவர் என்று சொல்லக்கூடாது’ என்ற அமைச்சர் ‘பாப்பா நம்புவது நம்மை இல்லை’ என்றார்.

‘பின்னே? பாப்பா யாரை நம்புகிறது? புரியவில்லையே. நோ நாலெஜ்!’ என்றார் லிங்கப்பன்.

‘அதனால்தான் நான் மந்திரியாக இருக்கிறேன். நீ தொண்டனாக இருக்கிறாய்’ என்ற அமைச்சர் ‘வருகிறோம் பாப்பா’ என்று கூறிவிட்டு எழுந்து வாசலை நோக்கி நடந்தார்.

ஜமுனா குவித்து ‘நன்றி சார். லிங்கப்ப அண்ணே, மிகவும் நன்றி’ என்றாள்.

‘இதெல்லாம் எதற்கம்மா? வருகிறேன்’ என்று கூறிவிட்டு வேகமாக அமைச்சரை கடந்து பாய்ந்து சென்று கதவை திறந்துவிட்டார்.

மற்றவர்களும் ஜமுனாவிடம் விடைபெற்றுக் கொண்டனர்.

கதவைத் தாழிட்ட ஜமுனா என் கழுத்தை சுற்றி கைகளை போட்டாள்.

‘சுடுகாட்டிலும், புறம்போக்கு நிலத்திலும் தனியார் எப்படி கட்டடம் கட்ட முடியும்?’ என்றேன்.

‘நிலத்தை அற்ப விலைக்கு வாங்கி இருப்பார்கள் அல்லது இலவசமாக எடுத்து கொண்டிருப்பார்கள்’ என்றாள் ஜமுனா.

‘இப்போதிருக்கும் மயானம்?’ என்று கேட்டேன்.

‘அதை மூட வேண்டும் என்று மக்களே சொல்கிறார்களே. அரசாங்கம் என்ன செய்ய முடியும்? வீடுகள் கட்டும் திட்டத்திற்கு அரசாங்கம் ஆதரவு தந்துதானே ஆக வேண்டும். இவர்கள் போடும் திட்டத்திற்கு மான்யம் வாங்கியிருந்தால் கூட ஆச்சரியப்படமுடியாது’ என்றாள் ஜமுனா.

சிறிது நேரம் யோசித்துவிட்டு ‘மோகினி, பயங்கரவாதம். மக்கள் எதிர்ப்பு எல்லாமே இந்த திட்டத்தின் ஆரம்ப கட்ட பகுதிகளாக இருக்குமோ? எதிர்கட்சிக்காரர்களுக்கும், இவருக்கும் ஏதேனும் ஒப்பந்தம் இருக்குமோ?’ என்று கேட்டேன்.

‘எனக்கெப்படித் தெரியும்? சிவசங்கரண்ணாவை கேளுங்கள்’ என்று கூறி சிரித்தாள் ஜமுனா.

‘நீ சிரிப்பதைப் பார்த்தால் எனக்கு சந்தேகம் வருகிறது. மோகினியைப் பற்றி கேள்விப்பட்ட போதே இப்படி ஏதாவது நல்லது நடக்கும் என்று உனக்கு தெரிந்து விட்டதா? அதனால்தான் அன்று மயானத்தில் அப்படி சிரித்தாயா?’ என்று கேட்டேன்.

அதற்கும் சிரிப்பையே பதிலாகத் தந்தாள் ஜமுனா.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms