38. மீசை தாத்தாவின் கடிதம் - மீன்கொடி

மறுநாள் மின்னஞ்சல் ஒன்று வந்திருந்தது. தாத்தா எழுதியிருந்தார். ஜமுனாவைத் தேடினேன். அவள் தாத்தாவின் சைக்கிளை துடைத்துக் கொண்டிருந்தாள். அவள் வரும்வரை காத்திருந்தேன்

‘படிக்கவில்லையா?’ என்றாள் ஜமுனா.

‘உனக்கு வந்த கடிதம்’ என்றேன்.

‘வாசித்து விட்டு என்னிடம் கொடுங்கள்’ என்றாள்

கடிதத்தை வாசித்து விட்டு அவளிடம் கொடுத்தேன். அவள் வாசித்தபின் மீண்டும் நான் வாசித்தேன்:

‘அனைவரின் அன்பிற்கும் உரிய ஜமுனாவிற்கு,

உன்னைத் தவிர வேறெவருக்கும் கடிதம் எழுதத் தோன்றவில்லை.

நான் சென்னையிலிருந்து கிளம்பியபின் அங்கே என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது. நெடுங்காலமாக கனன்று கொண்டிருந்த கங்குகள், காட்டை எரிக்க பார்த்தபோது நீ மழையாக இருந்தாய் என்று சற்று முன் உன் அப்பாவிடம் போனில் பேசியபோது தெரிந்து கொண்டேன். பேசுவதை விட கடிதம் மூலம் மனதில் உள்ளதை என்னால் கோர்வையாக சொல்ல  முடியும். அதனால் இந்த கடிதம் எழுதுகிறேன்.

என்னை பற்றற்ற கர்மவீரனாக, இலட்சியவாதியாக, வாழ்வு ஞானம் உள்ளவனாக நினைத்துக் கொண்டிருந்தேன். கல்யாணத்திற்குமுன் நீ பரமனிடம் எழுப்பிய கேள்வி என்னை முதல்முறையாக ஆழமாக சிந்திக்க வைத்தது. வாழ்வு அறுபது வருடங்களுக்கு முன் சுட்டிக் காட்டியதை இப்போதுதான் புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறேன். என் மனைவியை வெல்வதே என் லட்சியமாக வைத்திருந்தேன் என்பது சமீபத்தில்தான் புரிந்தது. இப்படிப்பட்ட மோசமான மனைவியை கொடுத்த கடவுளையே மன்னித்தவன் என்று தற்பெருமை பேசியிருக்கிறேன். நியாயமான கோரிக்கை வைத்த மனைவியை மன்னிக்க முடியாதவன் நான். அவளது சிறப்பை நீதான் புரிய வைத்தாய்.

புறத்தில் பெரிய ஆளுமையாக காட்டிக் கொண்டாலும், அகத்தில் நான் ஒரு கோபக்கார கணவனாக, ஒரு எளிய தகப்பனாகத்தான் இருந்து வந்திருக்கிறேன். ஒவ்வொரு கணமும் என் மனைவியும், பிள்ளைகளும்தான் என்னை இயக்கும் விசைகளாக இருந்திருக்கிறார்கள்.

சின்னவன் கண் முன்னே அவன் அம்மாவோடு பத்திரமாக இருந்தான். பெரியவனை பல வருடங்களாக தேடி கொண்டிருந்தேன். எவருக்கும் தெரியாமல் பலரிடம் சொல்லி வைத்திருந்தேன். யாரேனும் ஏதேனும் தகவல் சொன்னால் தேடிப் போய் விடுவேன். நான் அடிக்கடி வெளியூர் போய் வந்த ரகசியம் இதுவே. தேடுவதில் எனக்கு உதவியவர்களில் உன் அப்பாவும் ஒருவர்.    

கல்யாணத்தன்று என்னாலும், உன் அப்பாவாலும் உங்களோடு இருக்க முடியாமல் போய்விட்டது. பெரியவனைப் பற்றி தகவல் வந்தது. ஒருவர் பெங்களூருக்கு வந்திருப்பதாக சொன்னார். மற்றொருவர் மதுரைக்கு வந்திருப்பதாக சொன்னார். என் அந்தரங்க நம்பிக்கைக்கு உரியவர் உன் அப்பா. அவரிடம் சொன்னேன். என்னை பெங்களூருக்கு போக சொல்லிவிட்டு, அவரும் அன்றே மதுரைக்கு கிளம்பிப் போய் விசாரிப்பதாக சொன்னார். பெரிய மனம் அவருக்கு. வேறு எவரிடமும் நான் உதவி கேட்கும் மன நிலையில் இல்லை. பெங்களூரிலிருந்து திரும்பிய பின்தான் அவர் உன் அம்மாவையும் கூட்டி சென்று விட்டார் என்று தெரிந்தது. அதை தவிர்த்திருக்கலாம் என்று நினைத்தேன். இப்போது யோசித்தால் அதுவும் நல்லதுதான் என்று தோன்றுகிறது.

பெரியவன் பெங்களூருக்கும் வரவில்லை. மதுரைக்கும் வரவில்லை.

சூளைமேடு வீட்டில் உங்களோடு இருக்கும்போதுதான் திபெத்தில் ஒரு புத்த மடத்தில் பெரியவன் இருக்கிறான் என்ற மிகவும் நம்பகமான தகவல் கிடைத்தது. முடிந்தால் அவனை அழைத்து வருவது. அவன் வராவிட்டால் அவனோடு மீதி வாழ்நாளை கழிப்பது என்ற முடிவோடுதான் வீட்டை விட்டு வெளியேறினேன். உங்களிடம் சொல்லி, எவரேனும் கண்ணீர் விட்டு என்னை தடுத்தால் என்னால் போக முடியாது. அதனால்தான் எவரிடமும் சொல்லாமல் கிளம்பினேன்.

திபெத்திற்கு வருவது சுலபமாக இல்லை. எத்தனை சிக்கல்கள்! என் நண்பரான சுதந்திர  தியாகி ஒருவர் உதவினார். நம் வீட்டில் பல வருடங்களுக்கு முன்பு வந்து தங்கி இருக்கிறார். அவருக்காக வாங்கிய கார்தான் நம் கம்பனியில் பல வருடங்கள் இருந்தது. அவருடைய உதவியால்தான் திபெத்திற்குள் நுழைய முடிந்தது. இங்கிருந்த புத்த மடத்தில் உன் மாமனாரையும், மாமியாரையும் சந்திக்கவும் முடிந்தது.

இருவரும் ஆன்மீகத்தில் பலத்த ஏமாற்றத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். கடந்த இருபது வருடங்களில் எத்தனையோ மடங்களிலும், ஆசிரமங்களிலும், மையங்களிலும், ஆன்மீக நிறுவனங்களிலும் இருந்து பார்த்து விட்டார்கள். பணம், காமம், அதிகாரம் மட்டுமே எல்லா இடங்களிலும் இருந்தன. எங்கும் ஆன்மீகம் இல்லை. பெரிய அதிர்ச்சிக்கு ஆளாகி, வாழ்வை துறப்பதில் ஆன்மீகம் இல்லை, வாழ்வை ஏற்பதில்தான் ஆன்மீகம் உள்ளது என்பதை பல வருடங்களுக்கு முன்பே புரிந்து கொண்டு விட்டார்கள். இருந்தாலும் சென்னைக்கு திரும்பி நம்மையெல்லாம் எதிர்கொள்ள வெட்கப்பட்டு கொண்டு இங்கேயே குளிரிலும், வறுமையிலும் சிரமப்பட்டுக் கொண்டு இருந்திருக்கிறார்கள். ‘வாருங்கள், சென்னைக்கு போகலாம்’ என்று நான் சொன்னதும் அவர்கள் முகத்தில்தான் எத்தனை சந்தோஷம்!

நான் தேடியது கிடைத்த பிறகு என்னுள் வெறுமை தோன்றி விட்டது! பிள்ளைகளோடு சேர்வதுதான் எனக்குரிய முழுமை என்று நம்பினேன். பிள்ளை கிடைத்த பிறகு எந்த  உறவுமே வழியில் இருக்கும் ஒரு மைல்கல்தான் என்று தோன்றுகிறது. இன்னும் சொல்லப் போனால் தடைகல்லோ என்றும் தோன்றுகிறது.

மூத்தவனையும், மருமகளையும் அழைத்துக் கொண்டு அடுத்த வாரம் சென்னை வருகிறேன். நேராக சூளைமேடு வீட்டிற்குத்தான் வருகிறோம். அடுத்து என்ன செய்யலாம் என்று நீயே முடிவெடுப்பது அனைவருக்கும் நல்லது.

சதா எதையாவது செய்ய நினைத்து எல்லாவற்றையும் சிக்கலாக்கிவிட்டேன். பரமார்த்தனைப் போல எதற்கும் முனையாமல் இருந்தால் தெய்வமே தேடிவந்து தேவையானவற்றை செய்யும் என்று இப்போது  புரிகிறது. பரமார்த்தன் மனிதனின் அற்பத்தனத்தை, சிறுமையை, சுயநலத்தை தெரிந்து கொள்ளும் திறனே இல்லாதவன். மூத்தவர்கள் மீது அன்பென ஆரம்பித்து மானுடத்தையே நேசிப்பதில் முடித்தவன். அவன் இல்லாமல் நீ இல்லை. நீ இல்லாமல் அவன் எதையும் சாதிக்கப் போவதில்லை.   

எந்த வயதிலும் வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும். எண்பது வயதில் என் வாழ்வை ஆரம்பிக்கப் போகிறேன். நான் செய்ய வேண்டியது என்ன என்பதை ஓரளவிற்கு தெரிந்து கொள்ள தொடங்கி இருக்கிறேன். நான் இனிமேல்தான் எனக்குரிய முழுமையை தேடப் போகிறேன்.       

அன்புடன்,

உன் தாத்தா

கடிதத்தை பல முறை மீண்டும் மீண்டும் வாசித்தேன். மீசை தாத்தா என்னை தேவையில்லாமல் புகழ்கிறார். உலகம் செயல்பட எல்லோருமே முக்கியம்தான் என்று தோன்றியது. ஜமுனா மிகவும் முக்கியம். யாரை அற்பர், சுயநலவாதி என்று சொல்கிறார் என்று புரியவில்லை.

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms