39. யாதுமாகி நின்றாய் - மீன்கொடி

‘உங்களுக்கு எல்லோரும் திரும்பக் கிடைத்து விட்டார்கள். சந்தோஷம்தானே?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘எனக்கு உன்னைத் தவிர வேறெவரும் வேண்டாம், வேறெதுவும் வேண்டாம்’ என்றேன்.

‘மனிதர்களின் உறவுக்காக, அவர்களின் அன்பிற்காக நீங்கள் ஆசைப்படுவீர்களே’ என்றாள் ஜமுனா.

‘போன ஜென்மத்தில் அந்த அற்ப ஆசை இருந்தது. உன்னைப் பார்த்த பிறகு புது பிறவி எடுத்து விட்டேன். இப்போது நீ மட்டும்தான் என் உலகம். யாதுமாகி நிற்கிறாயே காளி!’ என்றேன்.

நாக்கை நீட்டி கண்களை உருட்டினாள் ஜமுனா.

‘அடுத்து என்ன செய்யலாம்?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘என்னையா கேட்கிறாய்!’ ஆச்சரியத்துடன் கேட்டேன். ‘தாத்தா உன்னைத்தானே முடிவெடுக்கச் சொல்லியிருக்கிறார்?’என்றேன்.

‘உங்களை நம்பி வாழ வந்த சின்னப் பெண், உதவி கேட்டால் யோசித்து செய்ய மாட்டீர்களா? அத்தனை கல் நெஞ்சமா உங்களுக்கு?’ என்றாள் ஜமுனா.

‘நம் வீட்டிற்கு பக்கத்தில், தோப்பு, தோட்டமிருக்கும் தனிமையான இடத்தில் ஆசிரமம் போல ஒரு பெரிய வீடு கட்டி அம்மாவிற்கு கொடுத்து விடலாம். அது அவருக்கு பிடிக்கும். அம்மாவிற்கு பிடித்தால் அப்பாவிற்கும் பிடிக்கும். அப்பாவிற்கு பிடித்தால் தாத்தாவிற்கும் பிடிக்கும். நாம் இங்கேயே, இந்த பழைய ஒட்டு வீட்டிலேயே இருந்து விடலாம். அவர்களை அடிக்கடி போய் பார்த்து வரலாம்’ என்றேன்.

‘தாத்தா ஒப்புக் கொள்வாரா?’ என்று சுந்தரம் கேட்பது போல சந்தேகம் கேட்டாள் ஜமுனா.

‘நீ சொன்னால் அவர் நிச்சயம் எதிர் பேச்சில்லாமல் ஒப்புக் கொள்வார். அவரை விட்டால் வேறு எவரால் நம்மை புரிந்து கொள்ள முடியும்? ஒருவேளை நாம் செய்வது தவறாக இருந்தாலும் நம்மை மன்னித்து விடுவார். கடவுளையே மன்னித்தவர்!’ என்று ஜமுனா பேசுவது போல பேசினேன்.

‘பாட்டி, சித்தப்பா?’ என்றாள் ஜமுனா.

‘தாத்தா அவர்களையும் தன்னோடு சேர்த்து கொண்டுவிடுவார். அவர் கடிதத்தை வாசித்தபோது அப்படித்தான் தோன்றியது’ என்றேன்.

‘இந்த பழைய வீட்டை என்ன செய்யலாம்? இடித்து கட்டப் போகிறீர்களா?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘இப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே? தேவைப்படும்போது உள்ளே இருப்பதை மாற்றி கட்டி கொள்ளலாம். முடிவெடுப்பவன் போல நானே பேசிக் கொண்டிக்கிறேன். உன் விருப்பம் என்ன?’ என்றேன்.

‘பெரியப்பா என்ன சொன்னார்? கணவர் எதை நினைக்கிறாரோ அதை மட்டும்தான் இந்த ஜமுனா விரும்புவாள்!’ என்றாள் ஜமுனா.

‘அருமை மனைவி விரும்பாததை அப்பாவி பரமார்த்தன் நினைக்கவே மாட்டான் என்று இன்னொரு மாமா சொன்னாரே’ என்றேன்.

புன்னகைத்தாள் ஜமுனா.

திறந்திருந்த ஜன்னல் கதவில் ஒரு குருவி வந்து உட்கார்ந்தது. எங்களை உற்றுப் பார்த்தது. இன்னொரு குருவி அதனருகே வந்து உட்கார்ந்து கிக்கிக் என்றது. பதிலுக்கு பழைய குருவியும் கிக்கிக் என்றது.

‘விக்கிரமாதித்தரே, குருவிகள் என்ன பேசி கொள்கின்றன?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘புதிய குருவி பழைய குருவியிடம் ‘கணவனும், மனைவியும் பேசிக் கொள்ளும்போது வேடிக்கை பார்க்கிறாயே, உனக்கு வெட்கமாக இல்லையா? இதுவா பண்பு?’ என்று நமக்கு ஆதரவாகப் பேசுகிறது. ‘தப்புதான். திருந்தி மாறி விடுகிறேன்’ என்று பழைய குருவி சொல்கிறது’ என்றேன்.

ஜமுனா புன்னகைத்தாள்.

இரண்டு குருவிகளும் ஜன்னல் வழியே பறந்து வெளியே சென்றன.

‘வந்திருக்கும் தங்க நகைகளை நீ போடும்போது ‘நகைகளால் பெண்ணுக்கு அழகா? பெண்ணால் நகைகளுக்கு அழகா?’ என்று பட்டிமன்றம் நடத்தப் போகிறேன்’ என்றேன்.

‘எவரோ எவரிடமோ சொன்ன பழைய உலோக காலத்து காதல் வசனம். யோசித்து புதிதாக சொந்தமாக ஏதாவது சொல்லுங்கள். அப்போது வெட்கப்படுகிறேன். நகைகள் எல்லாவற்றையும் நான் லாக்கரில் வைத்துவிடப் போகிறேன்’ என்றாள் ஜமுனா.

‘கண்ணாடி வளையல்களையாவது மாற்றி விடலாமே?’ என்றேன்.

‘நீங்கள் முதன்முதலில் வாங்கி போட்டு விட்டதை மாற்ற மாட்டேன்’ என்றாள் ஜமுனா.

ஜமுனாவின் கைகளைப் பற்றினேன். ‘எனக்கு வேலை இருக்கிறது. என் கைகளை விடுங்கள்’ என்று கூறிக் கொண்டே, நெருங்கி வந்து, என் மடியில் அமர்ந்து, தோளில் சாய்ந்து கொண்டாள்.

இருவரையும் சுமந்த மீசை தாத்தாவின் தேக்கு மர நாற்காலி மெல்லிய ஓசையுடன் சற்று தள்ளாடியது.

முகத்தை மறைத்த அவள் கூந்தலை விலக்கி கன்னத்தை வருடினேன். இன்பம் தாளாமல் ஜமுனா கண்களை மூடிக் கொண்டாள்.

‘நாம் எந்த உலகத்தில் இருக்கிறோம்?’ என்றேன்.

‘நான் பெண். எனக்கு வீட்டுவேலை மட்டும்தான் தெரியும். நிறைய படிக்கும் அறிவாளியான உங்களுக்குத்தானே எல்லாம் தெரியும்?’ என்று முணுமுணுத்தாள் ஜமுனா.

பெருமூச்சால் தாழ்ந்தெழுந்த ஜமுனாவின் மென்மையான மார்பகத்தில் என் முகத்தை புதைத்தேன். ‘எனக்கு எதுவும் தெரியவில்லை என்பதில் மட்டும் இப்போது தெளிவாக இருக்கிறேன். இதுதான் பூலோக சொர்க்கமா? சொல்லேன் ஞானத் தங்கமே’ என்றேன்.

‘எனக்குத் தெரிந்த எதையும் விட நம் குடும்பம் மேலானது. சிறுகுடி வாத்தியார் சாதாரண மகளுக்கு தெரிந்தது அவ்வளவுதான்’ என்று என் தலையை வருடினாள் ஜமுனா.

அவள் கைவிரல்களோடு என் விரல்கள் பிணைந்தன.

கண்ணாடி வளையல்கள் கலகலத்து சிரித்தன.

வெள்ளிக் கொலுசுகள் மெல்ல சிணுங்கின.

தென்றல் காற்றில் மரங்கள் தலையசைத்து பெருமூச்சு விட்டன.

வெட்கமுற்ற வெண்ணிலா மேகத்திற்குள் மறைந்து கொண்டது.

எங்களை ஆனந்தம் சூழ்ந்தது.

(முற்றும்)

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms