ருரு - முன்னுரை

ஸ்ரீ அரபிந்தோவின் ஆக்கங்களில் மீண்டும் மீண்டும் சில கருத்துக்கள் மின்னுகின்றன. 'மனிதன் இறைவனாதல்', 'வாழ்வனைத்தும் யோகம்', 'இழந்ததை மீட்டடைதல்', 'மறந்ததை அறிதல்', 'பார்வையை மாற்றுதல்' போன்ற கருத்துக்களில் 'மரணத்தை வெல்லுதல்' அவருக்கு உவப்பான கருத்தாக இருந்திருக்க வேண்டும். இல்லையேல் தம் வாழ்நாளெல்லாம் காலதேவனை மாற்றிய சாவித்ரியின் கதையை காவியமாக எழுதிக் கொண்டிருந்திருக்க மாட்டார்.

சாவித்ரியை பெருங்காவியமாக எழுதுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ருருவின் கதையை 'காதலும் சாதலும்' (Love and Death) என்ற குறுங்காவியமாக தினமும் ஓரிரு மணி நேரம் செலவழித்து பதினான்கு நாட்களில் ஸ்ரீ அரபிந்தோ எழுதி முடித்தார். மேலிருந்து தானாக வந்ததை தம் கைகள் கொண்டு ஸ்ரீ அரபிந்தோ எழுதியவற்றில் முதல் ஆக்கம் இதுவே. காதலும், சாதலும் படைப்பிற்கு முந்தியவற்றை தம் மனத்தின் முயற்சியால் எழுதியதாக அவர் கூறுகிறார். பாரதவர்ஷத்தின் ஆன்மீக கருவூலத்திலிருக்கும் எண்ணற்ற அழியாப் பேரொளிச் சுடர்களில் ஒன்றை மனதால் வாழும் மேல்நாட்டினர் ஏற்கும் வகையில் தர அவர் மேற்கொண்ட முயற்சிகளில் இதுவும் ஒன்று.

குருஷேத்ர போரைப் பற்றியும், அதற்கு முன்பும், பின்பும் நடந்தவற்றையும் 'ஜெய' என்ற பெருங்காவியமாக கிருஷ்ண துவைபாயன வியாசர் எழுதினார். அதுவே நாம் 'மகாபாரதம்' என்று இன்றறிவது. பாரதத்தாய் பெருமகிழ்வுடன் அணிந்திருக்கும் இதிகாச மணி மகுடம் அதுவே.

மகாபாரதத்தின் முதல் பகுதியான ஆதி பர்வத்தின் ஆரம்ப அத்தியாங்களிலேயே இளம் காதலர்களான ருரு, பிரமத்வாராவின் கதை சில வரிகளில் குறிப்பிடப்படுகிறது. விதையில் விருட்சத்தையும், புள்ளியில் பிரம்மத்தையும், அந்தத்தில் அனந்தத்தையும், பகுதியில் முழுமையையும் காண வல்லவரான ஸ்ரீ அரபிந்தோ ருருவைப் பற்றிய சிறு குறிப்பை குறுங்காவியமாக வளர்த்தி எழுதினார். மகாபாரதத்தில் சில வரிகளில் குறிப்பிடப்படும் சத்தியவான், சாவித்ரி கதையையும் இது போலத்தான் வளர்த்தி எழுதினார். மகாபாரதக் கதை எண்ணற்ற கதைகளைக் கொண்ட வாழ்க்கைமரம். ஒவ்வொரு கதையிலும் ஒரு ஞான விதை உள்ளது. ஒவ்வொரு ஞான விதையும் மகாபாரதமரம் போல வளரவல்லது. ஸ்ரீ அரபிந்தோவின் லைப் டிவைனிலுள்ள கருத்துகள் ஒவ்வொன்றும் ஒரு மகாபாரத கதையாக மாறவல்லது என்றெண்ணுகிறேன்.

பெண்தான் எப்போதும் ஆணுக்காக தியாகம் செய்கிறாள் என்பது பொதுவாக எல்லோரும் சாவித்ரியை முன்னிறுத்தி அறியும் உண்மை. எந்த உண்மைக்கும் மாற்றாக வேறொரு உண்மை உண்டு என்பதற்கு எடுத்துக்காட்டாக ருருவின் கதை உள்ளது.

காதலும் சாதலும் குறுங்காவியத்தை ஆங்கில மூலத்தில் வாசிக்கும் போது ஸ்ரீ அரபிந்தோ பல மாற்றங்களை மேல்நாட்டினரை மனதில் கொண்டு செய்திருக்கிறார் என்பது புரியும். பிரமத்வாரா என்ற பெயரை ஆங்கில நாவிற்கு ஏற்றபடி பிரியம்வதா என்று மாற்றினார். காமதேவனை மேல்நாட்டு கியூபிட்டாக (Cupid) ஆகவும் சித்தரிக்கிறார். தர்மதேவனை கிரேக்க தேசத்து ஹேடஸ் (Hades) ஆகவும் காட்டுகிறார். முக்கிய நிகழ்ச்சிகளை ஓரிரு வார்த்தைகளில் குறிப்பால் உணர்த்தி முன்னகர்ந்து கொண்டே இருக்கிறார். புராண, இதிகாச நூல்களிலும், ஸ்ரீ அரபிந்தோவின் ஆன்மீக ஆக்கங்களிலும் நல்ல வாசிப்பு பயிற்சியும், ஐரோப்பிய தொன்மங்கள் பற்றிய சிறிது அறிதலும் இருந்தால்தான் காதலும், சாதலும் வாசிப்பு சுவையுள்ளதாக இருக்கும்,

இதை மனதில் கொண்டு ருரு என்ற தலைப்பில் கதையை எழுதியுள்ளேன். பெரும்பாலும் ஸ்ரீ அரபிந்தோவின் காதலும் சாதலும் குறுங்காவியத்தை ஒட்டியே எழுதியுள்ளேன் என்றாலும் எனது ஆக்கம் மொழிபெயர்ப்பல்ல. வியாசபாரதம், தேவி பாகவதம், கருட புராணம் ஆகியவற்றிலிருந்தும் பொருத்தமான நிகழ்ச்சிகளை பொறுக்கி எடுத்து சேர்ந்திருக்கிறேன். மகாபாரதத்தில் அழுது புலம்பும் எளிய வாலிபனாக சித்தரிக்கப்பட்ட ருருவை, மரணதேவனையே எதிர்கொள்ள முன்வரும் மாவீரனாக ஸ்ரீ அரபிந்தோ உயர்த்தினார். அவனுடைய மாற்றத்திற்கு காரணமான பிரமத்வாராவை, ஒளிமயமான பெண்ணாக சித்தரிக்க நான் முயன்றிருக்கிறேன்.

ஸ்ரீ அரபிந்தோ லைப் டிவைனில் மரணம், ஆசை, இயலாமை என்ற தலைப்பில் ஓர் அத்தியாயத்தை எழுதியுள்ளார். மதர் 'கல்வியைப் பற்றி' என்ற நூலில் மரணத்தை வெல்லும் நான்கு உபாயங்கள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார். வைப் டிவைன் வெளியுரை என்ற நூலில் அமரவாழ்வு பற்றிய பல குறிப்புகள் உள்ளன. இவற்றையும் இக்குறுங்காவியத்தில் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தியிருக்கிறேன். நரகத்தை பற்றியும், நரக நதியான வைதரணி பற்றியும் நான் விரிவாக எழுதுவதை தவிர்த்து விட்டேன். என் ஆக்கத்தில் மகாபாரத மாந்தர்களும், வேதரிஷிகளும், புராண கடவுளரும் ஸ்ரீ அரபிந்தோவின் மொழியையே பேசுகின்றனர்.

அன்னையரவிந்தர் கடலில் நல்லோர் செலுத்தும் நங்கூரமற்ற நாவாயின் மீது மோதும் பாரதப் பெருங்காற்றில் படபடக்கும் இளைய பாய்மரமாக தன்னை அடியேனறிவது இறைவனின் இனிய விருப்புறுதியன்றி வேறென்ன?

பிறரது நல்வாழ்வுக்காக
தன் வாழ்வை அர்ப்பணம் செய்ய முன்வரும்
மகத்தான் மனிதர்களுக்கு
இக்குறுங்காவியத்தை அர்ப்பணிக்கிறேன்.

- சமர்ப்பணன்

Tamil Section Term
Tamil Author Term
Tamil Content Terms